இனங்களின் இணைவு மட்டுமே இனக்கலவரங்களை தடுத்து நிறுத்தும்

மகிந்த ராஜபக்ச என்ற இனப்படுகொலையாளி, பொதுபலசேனாவின் இனவெறி பிக்கு ஞானசார போன்ற கயவர்கள் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களைப் போன்ற தாக்குதல்கள் மறுபடி நடக்கப் போவதாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்று பரப்பிய பச்சைப் பொய்கள் முஸ்லிலிம் மக்கள் மீதான இந்தக் கலவரங்களுக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் சிலர் செய்த மிக மோசமான கொலைகளை காரணம் காட்டி முழு முஸ்லீம் மக்களுமே குற்றவாளிகள் என்பது போன்ற தோற்றத்தை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரப்பி வந்த இலங்கை அரசு மற்றொரு பெரும் காரணியாக இருக்கிறது.

அதிகார வர்க்கங்களின் தூண்டுதல்களினாலும், அறியாமையினால் பெரும்பாலும் ஏழைச் சிங்கள மக்களே இந்தக் கலவரங்களில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். அது போலவே பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களுமே இந்தக் கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். சிங்கள, தமிழ், முஸ்லீம் அதிகார வர்க்கங்கள் தமது பதவிகளுக்காகவும், கொள்ளைகளுக்காகவும் சொல்லும் இன, மத, மொழி பொய்களை நம்பி இலங்கையின் ஏழை மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒடுக்கப்படும் ஏழை மக்கள் தமக்குள் இருக்கும் பிரிவினைகளை தூக்கி எறிந்து விட்டு ஒன்றுபடுவதன் மூலமே இலங்கையில் அமைதி உண்டாகும். இலங்கை அரசு மற்றும் அரசியல்வாதிகள் என்னும் அயோக்கியர்களுடன் பேசசுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பது கானல் நீராகத் தான் என்றைக்கும் இருக்கும் . ஏனெனில் தமது சுயநலன்களுக்காகவும், தமது எசமானர்களான வல்லரசுகளின் கொள்ளைகளுக்காகவும் பிரச்சனைகளை உருவாக்கி வளர்ப்பவர்கள் எப்படி தீர்வுகளை தருவார்கள்?

மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்கா, மகிந்த ராஜபக்ச போன்ற சிங்கள இனத்தை காக்க வந்த வீரர்கள் தாம் என்னும் வாய்வீச்சு வீணர்களினால் சிங்கள மக்களின் வறுமை தீர்ந்து விடவில்லை. சம்பந்தர், சுமந்திரன் என்னும் தமிழ் தலைமைகளினால் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு இத்தனை வருடங்களாக எந்த ஒரு தீர்வும் வந்து விடவில்லை. இரத்த ஆறு ஓடும் என்று “மனோகரா” வசனம் பேசிய ஹிஸ்புல்லாவும், றிசாத் பதியுதீனும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இந்தக் கலவரங்களின் போது இருந்த இடம் தெரியாமல் பதுங்கி இருக்கிறார்கள்.

இனங்கள், மதங்கள் என்பன மேல் பூச்சுக்களே தவிர அவை பிரச்சனைகளுக்கு என்றுமே தீர்வுகளை தந்தது கிடையாது. ஒடுக்கப்படும் கைகள் இணைந்து போராடுவதன் மூலமே மக்கள் விரோதிகளை தோற்கடிக்க முடியும். இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் ஒன்றிணைந்து இனியாவது ஒரு விதி செய்வோம். அப்போது தான் இனவெறி இருள் விலகும். இனக்கலவரங்கள் என்னும் கொடுமைகள் இல்லா இலங்கையை உருவாக்க ஒன்றிணைவோம்.

(விஜயகுமாரன்)