இன்று சேவின் இறந்த நாள்.

1967 அக்டோபர் 8…. தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.

சேவின் இறுதி நாள் இப்படியாக இருந்தது, காலை 10.30… யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.நண்பகல் 1.30… அந்தப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30… காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ”நான்தான் ‘சே’. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார்.

மாலை 5.30… அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக ‘சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.

இரவு 7.00… ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ”இது என்ன இடம்?” என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ”பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?” என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

அக்டோபர் 9… அதிகாலை 6.00… லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.

கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

காலை 10.00… ‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ&விடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் ‘சே’… 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00… ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார்.

நண்பகல் 1.00… கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ”முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!” என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.

தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ”கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!” இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!

மணி 1.10… மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

‘சே’ இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.

அக்டோபர் 18…. கியூபா… ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் ‘சே’வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ”வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட ‘சே’ நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்” என வேண்டுகோள் விடுக்கிறார்.

இறந்தபோது ‘சே’வுக்கு வயது 40. உலகம் முழுக்க ‘சே’வின் புகழ் இன்னும் இன்னும் பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் ‘சே’ குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன.

கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா?

ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். நாங்கள் ‘சே’வைப் போல இருப்போம்!”

சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் இப்படி கூறினார் சேகுவேரா.

மரணத்தின் தருவாயிலும் எப்படி பேசியிருக்கிறார்
இந்த போராளி !

அதனால் தான் அவர் உலகப்போராளி !

சே பேசிய இறுதிவார்த்தைகள்!

நான் இந்தப்போரில் தோற்றுவிட்டேன் என்றாலும் ,புரட்சிப்போர் தொடரும் என்று பிடலுக்குச் சொல்லுங்கள் .

என் மனைவி அலெய்டாவிடம்உன் கணவன் கடைசிவரை போராடினான் என்று சொல்வதோடு கலங்கவேண்டாம் என்றும் ,மறுமணம் செய்துகொள்ளும்படி சொன்னேன் என்றும் சொல்லுங்கள் .

குழந்தைகள் அனைவரையும் நன்றாகப்படிக்கச்சொல்லுங்கள் .படித்துமுடித்தபின் புரட்சிப்போரில் பங்கேற்கச்சொல்லுங்கள்.

நான்தான் தோற்றுவிட்டேன் புரட்சி தோற்கவில்லை அது தொடரும் என்று கூறுங்கள்.

இன்றுவரை வெளிநாட்டிலிருந்து வந்து ,இலங்கை ஏழை விவசாயிகளை சந்தித்த ஒரே தலைவன் அவனே.இலங்கைக்கு வந்து தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார்.உலகிலே மலையக தமிழர்களை மதித்து சந்தித்த தலைவர்கள்
இன்றுவரை சேவும் பத்மநாபாவும் மட்டுமே.

மனிதனை மனிதனாக நேசிக்க தெரிந்த யாரையும் இந்த உலகம் மறக்காது.
அதில் சேவும் பத்மநாபாவும் என்றும் முதல் இடத்தில் இருப்பார்கள் மலையகத்தில் சே
அவர் தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு, அது பெரிதாக வளர்ந்திருக்கும் அளவிற்கு இன்று அங்கு பிரச்சினைகளும் வளர்ந்திருக்கின்றன,சே இலங்கை வந்தார் என்ற விடயமே பல தமிழர்களுக்கு தெரியாது.

ஆனால் ஒன்றுமட்டும் உண்மை,பத்மநாபா கொல்லப்படாமல் இருந்து
ஈழப்போராட்டம் மட்டும் சே வின் சம காலத்தில் ஈழத்தில் போராடியிருப்பாரென்றால், நிச்சயம் அவரோடு இணைந்து கொள்ள சே ஓடிவந்து முதல் ஆளாக பத்மநாபாவோடு நின்றிருப்பார்.

காரணம் இதுவரை வரலாறு கண்ட மனிதநேயமிக்க போராளிகளில் எல்லை கடந்து மனிதம் வாழட்டும் என போராடிய ஒரே போராளி சே மட்டுமே.அவரிடம் தன்னலம் என்பதெல்லாம் இல்லை, அவர் மனதில் நிறைந்திருந்ததெல்லாம் மாணிட நேயம் மட்டுமே.

உலகெமெல்லாம் மனிதனை மதித்து, அவன் அடிமை விலங்கினை உடைக்க கிளம்பிய மகத்தான மனிதர்களில் சே வரிசையில் மானிடத்தை நேசித்த பெருமகன் பத்மநாபா.

இவ்வுலகம் கண்ட புத்தன், இயேசு, வரிசையில் சேவுக்கும் பத்மநாபாவுக்கும் எக்காலமும் இடம் உண்டு.அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் ,

(Sutharsan Saravanamuthu)