உள்ளுராட்சித் தேர்தல் சொல்லி நிற்கும் சேதிகள்

(சாகரன்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்படும் திறன் அற்ற போக்கில் அதிருப்தி அடைந்த தமிழ் வாக்காளர்கள், இலங்கை அரசுடன் ஒரு மென் போக்கை கடைப்பிடித்தல் என்ற இவர்களின் செயற்பாட்டில் நம்பிக்கை இழந்தவர்கள் என்ற இரு பாரிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாக தமிழரசுக் கட்சி கட்சியின் ஆதரவாளர்கள் இம்முறை தமது வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்க தயாராக இருக்கவில்லை என்பதை இத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டி நிற்கின்றன.

இதில் முதல் பிரிவினர் இதற்கான மாற்றீடாக தமது வாக்குகளின் பெரும் பகுதியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு வழங்கியுள்ளனர். கூடவே இரண்டாவது பிரிவினர் இதற்கு மாற்றீடாக தமது வாக்குகளின் பெரும் பகுதியை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைபிற்கு எதிராக அணிதிரண்ட தேசிய விடுதலைக் கூட்டணியை இவ்விரு தரப்பும் அதிகம் கண்டு கொள்ளவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2 கோடி விவகாரம் வன்னியில் சூடு கண்ட அளவிற்கு யாழில் காணப்படவில்லை. மாறாக சுரேஷ் பிரேமசந்திரனின் ஆரம்ப இடதுசாரிச் செயற்பாடும் பிற்காலத்தில் புலிகளுடன் இணைந்த வலதுசாரிச் செயற்பாடும் இவரின் பக்கம் அதிகம் மக்களை அணிதிரள தடைபோட்டுவிட்டது. பதவி இன்மையினால் முரண்படுகின்றார் என்ற பிம்பமும் இந்திய அமைதி காக்கும் காலத்து செயற்பாடுகளும் இவரை தனித்து வைத்திருப்பதில் கணிசமான பங்கை யாழ்ப்பாணத்திற்குள் ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும் இவரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு அணிமாறி தமிழரசுக் கட்சியிடம் சரணடைந்தவர்கள் என்ற செயற்பாடும் 1990 முற் கூற்றில் இருந்து நட்பு சக்திகள் யார்? பகை சக்திகள் யார்? என்பதை எடைபோடுவதில் இவர் தவறை விட்டுவிட்டார் என்ற இவரது முன்னாள் தோழர்களை எட்ட நிற்க வைத்துவிட்டது. இதன் தாக்கம் கிழக்கிலும் எதிரொலித்து துரைஇரத்தினத்தின் நீண்ட கால அரசியல் உழைப்பை கேள்விக் குறியாக்கிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடைத்த வெற்றி ஆசனங்கள் இவரின் அரசியல் ‘மேதாவிலாசத்தை’ நம்புபவர்களால் கிடைத்தது. இம் மூன்று ‘தேசியம்’ பேசும் அணிகளுக்குள் சுரேஷ் பரவாய் இல்லை என்பதுவு இவரின் பின்னடைவு மகிழ்ச்சிகரமானது அல்ல.

வடக்கு கிழக்கு எங்கும் போட்டியிட்டு சில வெற்றிகளை தமதாக்கி கொண்ட சந்திரகுமாரின் சமத்து சமூக நீதிக்கட்சி பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர், பிரதேச அடிப்படையிலான சுயேச்சைக் குழுகள் குறிப்பிட்ட பிரதேசங்களில் போட்டியிட்டாலும் தமது தெரிவுகள் மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்தியுள்ளனர்.

கிழக்கில் தமிழர் தரப்பும் முஸ்லீம் தரப்பும் தாம் சிறுபான்மையினர் என்ற வகையில் ஒன்று பட்டு பேரினவாதத்தை சந்திக்காமல் இருத்தல் தங்களது இருப்பை இல்லாமல் செய்துவிடும் என்ற செய்திகளை வெற்றி பெற்று இருக்கும் தேசியக் கட்சிகளின் ஆதிகம் இங்கு கவனிக்கத்தக்கது. கூடவே யாழ்ப்பாணத்தில் கூட இதே தேசியக் கட்சிகளின் வெற்றி மக்கள் சலுகைகளை பெறுவதற்கு இதனைத் தவிர வேறு வழியில்லை என்ற போக்கிடம் அற்ற விரக்தியின் வெளிப்பாடாக கருதலாம்.

மலையகத்து தொட்டமான் வெற்றிகள் தேர்தல்களில் வெற்றி பெறும் தேசியக் கட்சியின் பக்கம் சாய வைக்கும் தொண்டமான் அரசியலை தொடர்ந்து செய்ய வைக்க தலைநகரில் முற்போக்கு கூட்டணி பெற்ற ஆசனங்கள் வழமைபோல் தமது வியாபாரங்களுக்கு உறுதுணையான ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தொடர்ந்து அடையாளப்படுத்தி தலைநகர் தமிழ் தேசியத்தை பேச வைக்கும்.

ரணிலின் மேற்குலக சார்பு செயற்பாடும் மைதிரியை ‘டம்மி’ ஆக்கி தானே எல்லாம் என்று செயற்படும் மேற்குல வழிகாட்டல் செயற்பாடும் மகிந்த காலத்தில் ‘எவ்வளவோ’ நடைபெற்றன தற்போது ஒன்றும் இல்லை என்ற அபிவிருத்திக் கண்ணோட்டமும், இவற்றை விட அரசியலமைப்பு மாற்றத்தினூடு தமிழ் மக்களுக்கு உரிமையை வழங்கி சிங்களவர்களை பின் தள்ளும் செயற்பாட்டடை செய்துவிடுகின்றார்கள் என்ற மகிந்தாவின் பௌத்த சிங்கள வாதத்தின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் ஆரம்பம் எப்பவே ஆரம்பித்தாலும் இந்தத் தேர்தல் அதனை சூத்திரங்கள் மூலம் நிறுவி விட்டது.

இனி மேற்குலகம் மகிந்தாவை தன் வழத்திற்கு கொண்டுவர போர் குற்றம் மனித உரிமை மீறல் என்ற வெருட்டல்களை விடுத்து அனுசரித்து அரவரணத்து தனது ஆளாக்க முயலும். இதற்கான வாய்ப்புக்களை அமெரிக்க பிரஜா உரிமையுடைய வருங்கால ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயாவை பயன்படுத்த முயலும். ஆனால் இதில் மேற்குலகம் வெற்றியடையுமா..? என்பது கேள்விக்குறியே. இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான சுதந்திரக் கட்சியின் உருவாக்கத்தின் பின்பு சொல்லப்பட்டிருக்கும் வரலாறு அது.

எப்போதும் போலவே தமிழ் ஊடகங்கள் தமக்கு தேவையான ‘ தேசிய வெறியை’ முன்தள்ளும் வேலையை இந்த தேர்தலிலும் கனகச்தசிமாக செய்தன. இந்த வகையில் அதிகம் இலாபம் அடைந்தது அகில் இலங்கை காங்கிரஸ் கட்சிதான். உள்ளுராட்சி சபையின் தேர்தல் அந்தப்பிரதேசங்களின் நிர்வாக கட்டுமானம் அபிவிருத்தி செயலூக்கமுள்ள செயற்பாடுகளைப்பற்றி பேசுபொருளுடன் நகர்ந்து செல்லாமல் இவை பார்த்துக் கொண்டன. இவற்றைப்பற்றி பேசிய சில அரசியல் கட்சிகள்  பிரதேச சுயேச்சைக் குழுக்களின் செய்திகளையும் தேர்தல் விஞ்ஞானபனத்தையும் இது பற்றிய கருத்துக்களையும் மக்களைச் சென்றடையாமல் பார்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தின. மாறாக இடைக்கால அறிகை… எதிராளியை வீழ்த்துவேன் என்ற கோஷங்களையும் வெட்டி உசுப்பேத்தலகளையும் ஊக்குவித்து ஊடக தர்மத்திற்குரிய கடமையை தட்டிக்கழித்தன. இதற்கு விதிவிலக்காக மிகச் சில ஊடகங்களும் செயற்பட்டு இந்த தேர்தலில் சில நல்ல சக்திகளின் தேர்தல் வெற்றிகளை உறுதிப்படுத்தியது இங்கு கருத்தில் கொள்ளபபடவேண்டிவையாகும்.

உள்ளுராட்சி தேர்தல் பிரதேச அபிவிருத்தி செயற்திறன் மிக்க நிர்வாக ஒழுங்களை மேற்கொள்வதுடன் சம்மந்தப்பட்ட பிரநிதிகளை தெரிவு செய்தல் என்பதை விடுத்து சுயநிர்ணயம் தேசியம் நாட்டை பிளவுபடுத்தல் என்று அரசியல் கோஷங்களினூடு நகர்த்தப்பட்டு வெற்றிகளை தோல்விகளை தமதாக்கி கொண்ட ஆரோக்கியமற்ற பாதையில் பயணித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஒரு சபைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய 1 இலட்சம் ரூபாய் ஆயிரம் சுவரொட்டிகளை பிரதி பண்ண இரண்டு இலட்சம் ரூபாய் என்று தோராயமாக செலவு செய்யப்பட்ட இந்தத் தேர்தலில் பணம் உள்ளவர்கள் மட்டும் தேர்தலை சந்திக்கலாம் என்ற நிலை சாமான்ய நாட்டு பிரஜையை தேர்தலில் வாக்கு அளித்தல் என்பதற்கு அப்பால் மக்கள் சேவையாளனாக மாறமுடியாத வறுமையாளனாக தள்ளப்பட்டிருக்கும் நிலமையில் உண்மையான மக்கள் பிரதிநிதியை இது போன்ற தேர்தலில் வேட்பாளாக காண்பது அரிது என்ற செய்தியை நாம் நிராகரிக்க முடியாது
(மாசி 10, 2018