காந்தி 150 ஆண்டுகள் பதிவு 98

தனது சிட்டி லைட்ஸ் படத்தின் துவக்க நிகழ்விற்காக லண்டன் வந்திருந்த சாப்ளின்
தானே விரும்பி காந்தியை சந்திக்க
நேரம் கேட்டிருந்தார்.

ஒரு நடிகரோடு தான் பேசுவதற்கு
என்ன இருக்கிறது என்று அதில் ஆர்வம் காட்டாத காந்தி வேண்டுகோளை நிராகரித்துவிட்டார்.

‘சாப்ளின் ஈஸ்ட் எண்ட் எனும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் வளர்ந்தவர், ஏழை எளிய மக்களின் விருப்பத்திற்குரியவர், நம் காலத்தின் மிக முக்கியமான கலைஞன்’ என்று சரோஜினி நாயுடு எடுத்துச் சொன்னபிறகே காந்தி இந்தச் சந்திப்பிற்கு ஒத்துக் கொண்டார்.

காந்திக்கு சாப்ளினின் திரைப்படங்கள் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவர் பற்றிய அறிமுகத்தை உதவியாளர்கள் தயாரித்துத் தந்திருக்கிறார்கள்.

சாப்ளினுக்கோ காந்தி இங்கிலாந்தே பயப்படும் சர்ச்சிலை மிரட்டு மிரட்டென மிரட்டுகிறாரே
என ஆச்சரியம்.

காந்தியிடம் அவர் “ஏன் இயந்திரங்களை எதிர்க்கிறீர்கள்? இயந்திரமயமாவது காலத்தின் தேவைதானே? இயந்திரங்கள் மனித உழைப்பின் அடுத்தக் கட்ட வளர்ச்சியில்லையா? அதை ஏன் தவிர்க்க வேண்டும்? மனித அறிவின் வளர்ச்சியில், விஞ்ஞானத்தின் துணையோடு உருவாக்கபட்ட இயந்திரங்களை ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம்?” எனக் கேட்டார்.

அதற்கு காந்தி –

” எனக்கு இயந்திரங்களின் மீது ஒரு கோபமும் இல்லை, இதனால் மனித உழைப்பு முடக்கப்பட்டுவிடும் என்ற கவலைதான்! மனிதர்கள் இயந்திரங்களுக்கு அடிமையாகிவிடுவதை மட்டுமே நான் எதிர்க்கிறேன். இந்தியாவில் உள்ள கனரக இயந்திரங்களில் பெரும்பான்மை காலனிய ஆட்சியின் காரணமாக உருவாக்கபட்டவை, ஆகவே அங்கே இயந்திரங்களும் காலனியத்தின் அடையாளங்கள்தான், அதற்கு மாற்றாகவே ராட்டையில் நூல் நூற்கவும், மனித உழைப்பில் உருவான பொருளாதார வளர்ச்சியையும் முன்வைக்கிறேன்!” என்று பதில் சொன்னார்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது காந்தி
தனது கடிகாரத்தைக் கையில் எடுத்து,
“மணி ஏழு ஆகிவிட்டது, அது எங்களின் பிரார்த்தனை நேரம், விருப்பமிருந்தால்
கலந்து கொள்ளுங்கள் சாப்ளின் !” என அழைத்திருக்கிறார்,

அந்தச் சிறிய அறையில் இருந்த
ஒரு சோபாவில் சாப்ளினை உட்காரச் சொல்லிவிட்டு காந்தியும் அவரது நண்பர்களும் தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

காந்தி எளிமையாகத் தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்வதை வியப்போடு பார்த்த சாப்ளின், அப்போது தான் மட்டும் ஸோபாவில் அமர்ந்திருந்தது குற்றவுணர்ச்சியை
ஏற்படுத்தியது என்றார் சாப்ளின்.

இந்தச் சந்திப்பின் முடிவில் காந்தி சரோஜினி நாயுடு சாப்ளின் ஆகியோர் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

இந்தச் சந்திப்பினை பற்றிப் பிபிசி ரேடியோ அன்றிரவு விரிவாக அறிவித்தது.

பின்னாளில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக உருமாறியது.

காந்தியின் கருத்துகளின் தாக்கத்தால்தான் சாப்ளின் பின்னாளில் தனது
‘மாடர்ன் டைம்ஸ்’ படத்தில் இயந்திரங்கள் குறித்தும் – இயந்திரம் ஒன்றினுள் தான் மாட்டிக் கொள்வது போன்ற காட்சியையும் வைத்தார்.


ERIC L FLOM’S
CHAPLIN IN THE SOUND ERA
புத்தகத்திலிருந்து
எஸ் ராமகிருஷ்ணன்