கொங்கோ விடுதலை வீரன் பட்ரிஸ் லுமும்பாவின் (Patrice Lumumba) 60வது ஆண்டு நினைவாக…. (1925 – 1961)

மற்ற ஐரோப்பிய காலனித்துவவாதிகளை முந்திக்கொண்டு, பெல்ஜிய அரசன் தலைமையிலான பெல்ஜிய காலனித்துவவாதிகள் கொங்கோவைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்கள் தமது நாட்டைவிட 80 மடங்கு பெரிய கொங்கோவைக் கைப்பற்றி துப்பாக்கி முனையில் 80 ஆண்டுகளாக அதை அடிமை நாடாக வைத்திருந்தனர்.
ஆனால் கொங்கோ மக்கள் சும்மா இருக்கவில்லை. அடிமைத்தளையை அறுத்தெறியும் பல போராட்டங்களை ஆண்டுக்கணக்காக நடத்தினார்கள். அதன் விளைவாக அங்குள்ள தங்கள் சுரண்டல் நலன்களைப் பாதுகாப்பதற்காக, இறுதியில் கொங்கோவில் பெயரளவிலான தேர்தல் ஒன்றை நடத்தி வேண்டிய நிலைக்கு பெல்ஜிய காலனித்துவவாதிகள் தள்ளப்பட்டனர். அந்தத் தேர்தலில் கொங்கோ மக்களின் தவப்புதல்வனும் தேசிய விடுதலை வீரனுமான பட்ரிஸ் லுமும்பா தலைமையிலான முன்னணி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 1960 யூலை 30ஆம் திகதி கொங்கோ குடியரசு மலர்ந்தது. லுமும்பா பிரதமராகப் பொறுப்பேற்றார். அப்பொழுது அவருக்கு 35 வயது மட்டுமே நிரம்பியிருந்தது.

கொங்கோவின் சுதந்திரதின விழாவில் பெல்ஜிய மன்னன் பதோயின் (Baudouin) நேரடியாகக் கலந்து கொண்டான். அவன் முன்னிலையில் லுமும்பா ஐரோப்பிய காலனித்துவவாதிகளால் பொதுவாக ஆபிரிக்க மக்களும், குறிப்பாக கொங்கோ மக்களும் அனுபவித்த கொடுமைகளை விளக்கி மிகவும் உணர்ச்சிபூர்வமான உரையொன்றை ஆற்றினார். (அவரது உரை இறுதியில் தரப்பட்டுள்ளது)
அவரது அந்த உரை அங்கு வந்திருந்த பெல்ஜிய மன்னனுக்கும் அவனது பரிவாரங்களுக்கும் கோபாவேசத்தையும் அதேநேரத்தில் கிலியையும் உண்டுபண்ணியது. பட்ரிஸ் லுமும்பா உயிருடன் இருந்தால் கொங்கோவில் தமது சுரண்டலைத் தொடர முடியாது என்பதுடன், காலனித்துவப் பிடியில் இருக்கும் இதர ஆபிரிக்க நாடுகளிலும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெடிக்கும் என அவர்கள் அஞ்சினார்கள்.

எனவே லுமும்பாவைத் தீரத்துக்கட்டிவிட முடிவு செய்தனர்.
அதன்படி பெல்ஜிய உளவுத்துறை, அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏவுடன் சேர்ந்து லுமும்பா பிரதமராகப் பதவியேற்ற 200ஆவது நாளில் கடத்திச் சென்று சில மாதங்கள் தடுத்துவைத்துச் சித்திரவதை செய்துவிட்டு 1961 ஜனவரி 17ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்தனர். லுமும்பாவுடன் அவரது நெருங்கிய தோழர்களான எம்போலா, ஒகிட்டா ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். லுமும்பாவின் உடலை முதலில் புதைத்த கொலையாளிகள், பின்னர் அவர் சம்பந்தமான எந்தவொரு தடயமும் இருக்கக்கூடாது என முடிவு செய்து, சுரங்க நிறுவனங்கள் கொடுத்த அமிலத்தில் அவரது உடலை எரித்து சாம்பராக்கிவிட்டனர்.

லுமும்பாவின் கொலை கொங்கோ மக்களை மட்டுமின்றி, ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள அனைத்து மக்களையும் மட்டுமின்றி, முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்ததுடன், ஏகாதிபத்திய சக்திகள் மீது கடும் கோபாவேசத்தையும் கொள்ள வைத்தது. இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாஓ சேதுங் வன்மையான கண்டன அறிக்கையொன்றையும் உடனடியாக விடுத்தார்.

கொங்கோவின் சுதந்திர தினத்தன்று பெல்ஜிய மன்னன் முன்னலையில் பட்ரிஸ் லுமும்பா நிகழ்த்திய ஆக்ரோசமான உரை வருமாறு:
“எண்பதாண்டுகளாக, காலனிய ஆதிக்கத்தின் கீழ், எமது தலைவிதி இப்படித்தான் இருந்தது. எமது காயங்கள் காலங் கடந்தவையல்ல. அவை தாங்கொணாத வலி கொண்டவை. எனவே, இன்னமும் எங்களது மனங்களிலிருந்து அவை அகன்று விடவில்லை. மிகக் குறைவான கூலிக்கு முதுகு தேய நாங்கள் வேலை செய்திருக்கிறோம். ஒருபோதும் நாங்கள் வயிறார உண்ண முடிந்ததில்லை. பட்டினிச் சாவுகளை தடுக்க இயன்றதில்லை. நாங்கள் நல்ல உடைகளை அறிந்ததில்லை.

வசிக்கத்தக்க வீடுகளில் வசித்ததில்லை. எமது அருமைக் குழந்தைகளை நேசித்து வளர்க்க முடிந்ததில்லை. காலையும், மதியமும், மாலையும், இரவும் என ஒவ்வொரு நாளும் நாங்கள் பீதியூட்டப்பட்டோம், இழிவுபடுத்தப்பட்டோம், கடுமையாகத் தாக்கி ஒடுக்கப்பட்டோம், ஏனெனில் நாங்கள் கறுப்பர்கள்…
வல்லான் வகுத்ததே நியாயம் என அங்கீகரிக்கும் சட்டங்களின் மூலம், சட்டப்பூர்வமான வழிகளில் எமது நிலங்கள் எமது கண்களுக்கு முன்பாக ஆக்கிரமிக்கப்பட்டன. சட்டம் வெள்ளையனுக்கு இணக்கமாகவும், கறுப்பனுக்கு குரூரமானதாகவும், மனிதத் தன்மையற்றதாகவும் விளங்கும். அது ஒருபோதும் சமமாக இராது என்பதைக் கண்கூடாகக் கண்டறிந்தோம்.

தமது அரசியல் அல்லது மதக் கருத்துக்களுக்காக கண்டனம் செய்யப்பட்டு, சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்க நேர்ந்தவர்களை நாங்கள் அறிவோம். அவர்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டவர்கள்.; மரணத்தை விடவும் கொடியது அவர்களது நிலை. நகரங்களில் வெள்ளையர்கள் தமது மாட மாளிகைகளில் வீற்றிருக்க, கறுப்பர்களாகிய நாங்கள் இடிபாடுகளில் வசித்து வந்திருக்கிறோம். நாங்கள் திரை அரங்குகளிலோ, உணவு விடுதிகளிலோ, ஐரோப்பியர்களின் கடைகளிலோ ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை. வெள்ளையர்கள் தமது சொகுசு கேபின்களில் பயணம் செய்ய, அவர்களது காலடிகளில், ரயிலின் வாசல்களில் நின்று நாங்கள் பயணம் செய்திருக்கிறோம். இந்த அடக்குமுறையும், சுரண்டலும் உருக்கொண்ட அரசை எதிர்த்து நின்ற, எமது எத்தனையோ சகோதரர்கள் வெஞ்சிறைகளில் தள்ளப்பட்டதை, உருத்தெரியாமல் கொன்றொழிக்கப்பட்டதை நாங்கள் எவ்வாறு மறக்க முடியும்?

சகோதரர்களே, இவையனைத்தையும் நாங்கள் சகிக்திருக்கிறோம். ஆனால், உங்களது ஓட்டுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிதிகள், இன்று நமது நாட்டை வழிநடத்தும் பொறுப்பை எங்களுக்கு அளித்திருக்கிறார்கள். காலனிய ஒடுக்குமுறையால், மனதாலும், உடலாலும் நொறுக்கப்பட்ட நாங்கள் உங்களுக்கு உரக்கவும், உறுதிபடவும் கூற விரும்புகிறோம். நான் கூறிய ஒடுக்குமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டன. காங்கோ குடியரசு அறிவிக்கப்பட்டு விட்டது. நமது நாடு தற்பொழுது அதன் சொந்தக் குழந்தைகளின் கரங்களில் உள்ளது”.

லுமும்பா 1961 ஜனவரியில் தாம் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக தனது மனைவி பாலினுக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது.

“எந்தவொரு அடக்குமுறையும், சித்திரவதையும் என்னைப் பணிய வைக்க முடிந்ததில்லை. ஏனெனில், அடிமைப்பட்டும், தலை குனிந்தும் எனது புனிதமான கொள்கைகளுக்கு துரோகம் செய்தும் வாழ்வதை விட, எனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைக் கைவிடாமலும், அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமலும் மரிக்கவே நான் விரும்புகிறேன். எனது கூற்றை வரலாறு ஒரு நாள் சரியென நிரூபிக்கும். அந்த வரலாறு பிரஸ்ஸல்சும், பாரிசும், வாஷிங்டனும், ஐ.நாவும் கற்பிக்கும் வரலாறாக இராது. மாறாக காலனியாதிக்கத்திலிருந்து, கைப்பொம்மைகளிலிருந்து விடுபட்ட ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் வரலாறாக இருக்கும்.”