சக்தி கதற கதற கற்பழித்த அந்த சோகக்காட்சியை பார்த்து……

(ப. தெய்வீகன்)

எயார்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்த சாகுபடி ஆரம்பமாகிவிட்டது. அடுத்த வருடமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடங்கிவிடும். நாங்களும் எத்தனை லட்சம் கொடுத்தாவது கொள்முதல் செய்வதற்கு தயாராகிவிடுவோம். ஒவ்வொரு தடவையும் தொலைக்காட்சி நிர்வாகம் ஒரு போட்டியாளரை வெற்றிபெற வைப்பது என்று போட்டி ஆரம்பத்திலேயே தீர்மானித்துவிடுவார்கள். அதைச்சுற்றித்தான் அனைத்து பஜனை நிகழ்வுகளும் நடைபெறும். இவ்வாறு அவர்களால் முன்கூட்டியயே முதல் பரிசு கொடுப்பதாக முடிவெடுக்கப்பட்டவர்களைவிட அந்த போட்டியில் கலந்துகொண்ட ஏனையவர்கள் திரையிசை களத்தில் பிற்காலத்தில் தூள் கிளப்பிக்கொண்டிருப்பதிலேயே தொலைக்காட்சிக்கு தங்களது சீத்துவம் விளங்கியிருக்கவேண்டும். ஆனால், அவர்களோ விடுவதாக இல்லை.

அந்த வரிசையில் இம்முறை போட்டியாளர் சக்தியை தொலைக்காட்சி நிர்வாகம் பலூனில் கட்டி பறக்க விடுவதாக உத்தேசித்தவிட்டது போலுள்ளது. அதற்கு முத்தாய்ப்பாக, சில நாட்களுக்கு முன்னர், சுகி சிவம் கணக்கில் சக்தி தனது வாழ்க்கையில் இடம்பெற்ற சோக நிகழ்வுகளை பிரசங்கம் செய்து நீண்ட அனுதாப உரை ஒன்றினை “கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட” பாடலுக்கு பிறகு பிரஸ்தாபித்தார். அல்லது பிரஸ்தாபிக்க வைக்கப்பட்டார். அதற்கு பிறகு நேற்று அவர் பாடிய “ஆரோமலே” பாட்டுக்கு மொத்த அரங்கமும் லூஸ் கூட்டம் போல எழுந்து என்று கலையாடுவதை பார்க்கும்போதே தொலைக்காட்சியின் மிகுதி திட்டமும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

சக்தி ஒரு தேர்ந்த பாடகர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. திருச்சி லோகநாhதனின் பேரன். அவருடைய மென்மையான குரலில் கடந்த எயார் டெல் சூப்பர் சிங்கர் நிகழ்வுகளில் போட்டியிடும்போது பல அருமையான பாடல்களை பாடியிருந்தார். குறிப்பாக தனது பெரியப்பா தீபன் சக்கரவர்த்தியின் குரலில் வெளியான ‘அரும்பாகி மொட்டாகி பூவாகி” பாடல் அவர் பாடிய பாடல்களிலேயே மிக திறமாக அமைந்தது. அதைவிட, எத்தனையோ பாடல்களை T20 நிகழ்வில்கூட பாடியிருந்தார். அற்புதம்.

ஆனால், இப்போது அவர் பாடிய “ஆரோமலே” பாடல் காதுக்கு அருகில் தகரத்தை வைத்து உரஞ்சிக்கொட்டியதுபோல ஒரு கண்றாவி presentation. அந்த பாடலுக்கென்றொரு ஆன்மா உள்ளது. அந்த பாடலுக்கென்று ஒரு அழகிருக்கிறது. அதனை இலகுவில் யாராலும் மீளப்பாடி விடமுடியாது. இதுவரையில் அல்போன்ஸ் பாடிய அந்த பாடலை நேர் சீராக பாடிய ஒரே ஒருவர் என்றால் சக்தியின் நண்பர் சிறினிவாஸ்தான். (சக்தி பாடிய பாடலை முதல் பின்னூட்டத்திலும் சிறினிவாஸ் பாடிய பாடலை இரண்டாவது பின்னூட்டத்திலும் காணலாம்)

“ஆரோமலே” பாடலின் ஹைலைட்டே அந்த உச்சஸ்தாயியை சிந்தாமல் சிதறாமல் அடைவதுதான். குழறக்கூடாது. அதனை பாடுவதற்கு தேவையான நுட்பமும் அந்த ஸதாயியை தொட்டுவிட்டு நேர்த்தியாக மீள்வதும் மிகக்கடினமான ஒரு பாடுபணி. சில வேளைகளில் அந்த ஸ்தாயியை அடைந்த பின்னர், மொத்த குரலுமே பிசுறடித்துவிடும். நேற்று, சக்தி பாடியதை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. கழுத்து நரம்பு புடைந்தெழும்ப, நடுவர்களும் அவருடன் கூட எழும்ப, பழைய கள்ளுக்குடித்தவன் நான்காம் ஐந்தாம் தரம் வாந்தி எடுப்பதுபோல அவர் குழறுகிறார். “ஆரோமலே” பாடலுக்கு மாத்திரமல்ல, எந்த பாடலுக்கும் பொருந்தாத ஒரு நிலையில் அந்த உச்ச ஸ்தாயியை தொடுவதற்கு முயற்சித்து ஒருமாதிரி அந்த பாடலை பாடி முடிக்கிறார். நடுவர்களாக இம்முறை போய் அமர்ந்திருக்கும் கோஷ்டியும் விஜய் டி.வி. சொல்லி கொடுத்ததுபோல எழுந்து நின்று கூவுகிறார்கள். அதில் சிம்பு வேற.

“ஆரோமலே” பாடலை சக்தி கதற கதற கற்பழித்த அந்த சோகக்காட்சியை பார்த்து பரிதாபம் கொள்வதற்கு சங்கீத ஞானம் ஒன்றும் பெரிதாக தேவையில்லை. சாதரண இசை ரசிகனாக இருந்தாலே போதும். கேட்டுப்பாருங்கள்.