‘சமூக சேவகியான எனக்கு மக்களின் மனங்களில் தனி இடம் உண்டு’

“மக்களின் மனங்களிலிருந்து மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றம் எது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” எனவும் கூறிய அவர், “மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் நிச்சயமாகப் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். செவ்வியின் முழு விவரம் வருமாறு:

கேள்வி – சமூக சேவைகள் மூலம், பிரபல்யமானவராக அறியப்பட்ட நீங்கள், ஏன் திடீரென அரசியலுக்குள் பிரவேசித்தீர்கள்?

அரசியல் பரம்பரை என்ற ரீதியிலேயே, நான் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளேன். ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டமை காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடக்கூடியவர், எனது தந்தை வழி வந்தவருக்கு வழங்க வேண்டுமென்று தீர்மானித்தமையால், நான் அரசியலுக்குள் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த அரசியல் பிரவேசம் என்பது, நான் எதிர்பார்த்த ஒன்றல்ல.

கேள்வி – உங்களுடைய சகோதரர் இம்ரான் மகரூப், ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிளவுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் போது, நீங்கள் ஏன் ஐக்கிய தேசிய கட்சியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

இதுவொரு ஜனநாயக நாடு. எனவே, எங்களுக்கு விரும்பிய கட்சியில் நாங்கள் இருக்கலாம். அத்துடன், எனது தந்தை வளர்த்த கட்சி என்று சொல்லும் போது, ஐக்கிய தேசிய கட்சியைப் பலப்படுத்தும் கடப்பாடு எனக்கு உண்டு. எனது தந்தை இருந்தது, வளர்ந்தது, மறைந்தது எல்லாமே ஐக்கிய தேசிய கட்சிதான். அதனால், அதைவிடப் பாதுகாப்பான கட்சி, எனக்கு வேறு இல்லையென்று நினைக்கின்றேன்.

கேள்வி – திருகோணமலை மாவட்டத்தில், உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை எதுவென நீங்கள் கருதுகின்றீர்கள்?

திருகோணமலை, கிண்ணியா தள வைத்தியசாலையில் சுமார் 30 வருடங்களாக, பெண் நோயியல் நிபுணர் (வி.ஓ.ஜி) ஒருவராக, பெண் ஒருவர் நியமிக்கப்படவில்லை. அதுதான் முதன்முதலில் தீர்த்துவைக்கப்பட வேண்டிய பிரச்சினையென நான் நினைக்கின்றேன். இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் திருகோணமலை மாவட்டத்தில், இன்றுவரை பெண் வி.ஓ.ஜி ஒருவர் இல்லை. எனவேதான், அந்தவிடயமே முதலில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையென நினைக்கின்றேன். நான் நாடாளுமன்றம் சென்று முதலில் தீர்க்கும் பிரச்சினை இதுதான்.

கேள்வி – இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் போது, பெண்களுக்கு நீங்கள் மேலும் வழங்கும் வரப்பிரசாதங்கள் யாவை?

பெண்களது சுய தொழில் வாய்ப்புகள் குறித்து, நான் அதிகளவு கரிசனை கொண்டுள்ளேன். பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரங்கள் தொடர்பிலேயே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை விருத்திசெய்யக்கூடிய திட்டங்களை வகுக்கவுள்ளேன். அதாவது, சுயதொழில் வேலை வாய்ப்புகள்தான் பெண்களது அடிப்படை வருமானமாக உள்ளது. எனவே, அவற்றுக்குரிய விடயங்களைத்தான் நான் அத்திபாரமாக இட்டுள்ளேன்.

கேள்வி – உள்ளூரில் மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகளுக்குப் புத்துயிர் வழங்கி, தொழில்வாய்ப்புகளை உங்களால் ஏற்படுத்த முடியுமா?

இல்லை. நான் ஏனைய நேர்காணல்களிலும் தெரிவித்தது போன்றுதான், தொழிற்சாலைகளை உருவாக்குவோம், வீதியைச் செப்பனிடுவோம், அபிவிருத்திகளைச் செய்வோம், கட்டடங்களைக் கட்டுவோம் என்பதெல்லாம், தற்போதைக்கு எனது சக்திக்கு உட்படாது. வரவிருக்கும் ஆட்சி எப்படியானதென்று இந்தத் தேர்தலின் முடிவுதான் தீர்மானிக்கும். அதை வைத்துத்தான் என்னுடைய திட்டங்களை முன்னெடுக்க முடியும். அடிப்படைத் தேவைகளே இல்லாமல் இருக்கும் போது, தொழிற்சாலைகளை அமைப்பது என்பது, நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

உணவுப் பற்றாக்குறை இருக்கும் போது, பொதுமக்கள் அதைப் பற்றித்தான் சிந்திப்பார்கள். அதைவிடுத்து, தொழிற்சாலைகளைத் திறக்க வேண்டுமெனச் சிந்திக்கமாட்டார்கள். என்னுடைய முழு எண்ணமும் அன்றாட உணவுக்குத் திண்டாடும் மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கேள்வி – மிகவும் பின்னடைவில் உள்ள கிழக்கு மாகாணக் கல்வி நிலையை உயர்த்தும் பொருட்டு, நீங்கள் முன்வைக்கும் ஆலோசனை என்ன? அதில் உங்களுடைய பங்கு எவ்வாறானதாக இருக்கும்?

என்னைப் பொறுத்தவரையில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் வாழ்வாதாரத்தை விருத்திசெய்தாலே, கல்வி நிலை தானாகவே வளர்ச்சியடையும். மக்களின் அன்றாடத் தேவைக்கான வருமானப் பற்றாக்குறை காரணமாகத்தான் இன்று, கல்வி மிகவும் பின்தங்கியுள்ளது. அன்றாடம் உழைக்கும் பணத்தைப் பொதுமக்கள் உணவுக்காகத்தான் செலவு செய்கின்றார்களே தவிர, கல்விக்காக அல்ல. அதை நாங்கள் கவனத்தில் எடுத்துச் செயற்படுத்தினால் கல்வி நிலையை முன்னேற்றலாம்.

வருமானம் தான் எல்லாப் பிரச்சினைக்கும் அடிப்படைக் காரணமாக உள்ளது. எனவே, சரியான வாழ்வாதார உதவிகளை மக்களுக்கு வழங்கினால் கல்வி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். இதனைச் சரியான முறையில் மேற்கொள்ளும் போது, நிதி நிறுவனங்களிடம் கடனுக்காகக் கையேந்தும் நிலைமையையும் பொதுமக்களுக்கு வராது. அதைக் கட்டக் கஷ்டப்படவேண்டிய நிலைமையும் வராது.

கேள்வி – இந்தத் தேர்தலில் உங்களுடைய தம்பியும் நீங்களும் ஒரே மாவட்டத்தில், இருமுனைப் போட்டியில் உள்ளீர்கள். அவர் உங்களுக்குப் போட்டியாகவும் சவாலாகவும் இருப்பார் எனக் கருதுகிறீர்களா?

அவரைப் பெரிய சவாலாக நான் நினைக்கவில்லை. காரணம், திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தின் அவசியத்தைப் பெண்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதனாலேயே தம்பியை பெரிய சவாலாக நினைக்கவில்லை. கடந்த 5 வருடங்களாக, சமூக சேவைகள் மூலம் நான், மக்களைச் சென்றடைந்துள்ளேன். எனவே, எனது தம்பி வாக்குக் கேட்டாலோ, வேறு ஒருவர் வாக்குக் கேட்டாலோ எனது இடம் மக்கள் மத்தியில் நிச்சயம் இருக்குமெனக் கருதுகின்றேன்.

கேள்வி – இதுவரை காலமும் நீங்கள் செய்த சமூக சேவைகளிலே மிகவும் சிறந்த சேவையென, எதைக் கருதுகின்றீர்கள்?

பெண்களின் சுய தொழிலை மேம்படுத்துவதற்காக தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளேன். அதையே, எனது வாழ்நாளில் சிறந்த சமூக சேவையாக நினைக்கின்றேன். காரணம், நான் முன்னரே கூறிய போது, பெண்களின் சுயதொழில் மூலம் வருமானத்தைக் கூட்டும் போது, ஒரு குடும்பம் வாழ்வாதாரம், கல்வியென எல்லாவற்றிலும் சிறந்து விளங்க முடியும்.

கேள்வி – உங்களுடைய எதிர்கால அரசியல் பயணம் எப்படியானதாக இருக்கும்?

இந்தத் தேர்தலின் முடிவைப் பொறுத்துத்தான், எனது அரசியல் பயணத்தை தொடர்வதா இல்லையா எனத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.

கேள்வி – தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியுமென நம்புகின்றீர்களா?

நிச்சயம் இணைந்து பயணிக்க முடியும்.

கேள்வி – கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டல் எவ்வாறுள்ளது?

எமது தலைவர், தூரநோக்கு சிந்தனை கொண்ட தலைவராக சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். மாகாண சபையில் பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டையும் அவரே கொண்டுவந்துள்ளார். அவரது வழிகாட்டல் என்பது எனக்கு ஓர் உந்துசக்தியாகவே இருக்கின்றது.

கேள்வி – மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எனக்கு வாக்களிக்க விரும்பும் மக்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிக்க விரும்புகின்றார்களோ, அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் என்று 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருக்கின்றேன். விரும்பியோ விரும்பாமலோ ‘பழைய குருடி கதவத் திறடி’ என்பது போல, பழைய அரசியல்வாதிகளின் ஊந்துதல்களில் அவர்களையே தொடர்ந்தும் மக்கள் ஆதரித்து வருகின்றனர். ஆனால், மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் நிச்சயமாக புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.
You May Also Like