சம்மந்தனின் அரசியல் நேர்மை…?

மலையக மக்களை இழிவு படுத்தும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறியமைக்கு எதிராகத் தமது கண்டனத்தைத் நேற்று முன்தினம் (12.07.2017) வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியப் பிரதிநிதிகள் கண்ணியமான முறையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனிடம் நேரில் தெரிவித்தனர். இதன்போது மேற்படி விடயம் குறித்த தமது கண்டன அறிக்கையையும் சம்மந்தனிடம் பிரதிநிதிகள் கொடுத்திருந்தனர்.

இருந்தும் இதுவரையில் இதைக்குறித்துச் சம்மந்தன் எந்தப் பதிலையும் பொதுவெளியிலோ குறித்த பிரதிநிதிகளிடத்திலோ தெரிவிக்கவில்லை. குறைந்த பட்சம் தன்னுடைய கவலைகளைக்கூட வெளிப்படுத்தவில்லை.

மெய்யாகவே இந்த மக்களின் கவலைகளைக் குறித்த அக்கறை சம்மந்தனுக்கு இருந்திருந்தால், உடனடியாகவே குறிப்பிட்ட தினம் கிளிநொச்சியில் நடந்த தமிழரசுக் கட்சியினரின் கூட்டத்தில் அதைக்குறித்துப் பேசியிருப்பார். குறைந்த பட்சம் அன்று முழுவதும் கிளிநொச்சியில் நின்ற அவர், சம்மந்தப்பட்ட பிரதிநிதிகளைத் தேடிச் சென்று சந்தித்திருப்பார். அல்லது அழைத்துப் பேசியிருக்க வேணும். எதையும் அவர் செய்யவில்லை. ஆகவே இந்தப் பிரதிநிதிகளை அவமதித்ததுடன், அவர்களுடைய கோரிக்கையையும் சம்மந்தன் புறக்கணித்திருக்கிறார்.

சம்மந்தனுடைய பார்வையில் அவருக்கு முக்கியமாகப்படுவது சிறிதரனே தவிர, மலையக மக்கள் இல்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. இதுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மெய்யான அரசியல் முகமாகும். சம்மந்தன் மட்டுமல்ல, கூட்டமைப்பிலுள்ள பிற தலைவர்களோ, பிற உறுப்பினர்களோ கூடதமது கண்டனங்களை இதுவரையில் தெரிவிக்கவில்லை. எல்லோரும் கள்ளத்தனமாகவே இருக்கின்றனர்.

மட்டுமல்ல இந்த இழிசெயலுக்கான தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவம் விதமாக கூட்டமைப்பிலுள்ள மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கூட வாய்திறக்கவில்லை. இறுதிய மௌனத்துடனனேயே உள்ளனர். இதற்கான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினால், தமது அரசியல் எதிர்காலமும் பதவிகளும் பறிபோய் விடும் என்ற நல்லபிள்ளைத் தனமாக புலனடக்கி இருக்கின்றனர்.

இதேவேளை அன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடந்த தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் சம்மந்தனுடன் மேடையில் மலையக மக்களின் சார்பான பிரதிநிதி (ஜெயக்குமார்) ஒருவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதி (சிவபாலன்) ஒருவரும் பயன்பாட்டுப் பொருட்களாக – கருவிகளாக முன்னமர்த்தப்பட்டுள்ளனர்.

இது எல்லோரையும் தாம் சமனாக நடத்துகிறோம் என்று வெளியே காட்டும் மிக மோசமான தந்திரமாகும். முன்னுக்கு சிரித்துப்பேசி முதுகில் காறித்துப்பும் காரியத்தின் வெளிப்பாடே இது. இது ஒன்றும் புதிய உத்தி கிடையாது. புளித்துப்போன பழைய உபாயச் சரக்காகும்.
(கருணாகரன்)