செம்மணி புதைகுழியை உலகறியச்செய்த கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு! அறிந்ததும், அறியாததும்

ஆனால், இதுபற்றி பரவலாக பேசவும், எழுதவும்பட்டுவரும் விடயங்களில் வெளிப்படுத்தப்படாத சில உண்மைகளும் மறைந்து கிடக்கின்றன. கிருஷாந்தி கொலை மர்மத்தை வெளிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாகவும், அதுவே பின்னர் செம்மணியில் நூற்றுக்கானவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற உண்மை வெளிப்படக் காரணமாக அமைந்து செம்மணி படுகொலைகளை உலகறியச் செய்தது பற்றியும் பலரும் அறியாத சில விடயங்கள் இருக்கின்றன.

கிருஷாந்தி குமாரசுவாமியும், அவரது தாயார், சகோதரர் மற்றும் அயலவரும் காணாமல்போனது முதல் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர்களது உறவினரான எனது தகப்பனார், அன்றைய யாழ்ப்பாண பிரதம தபாலதிபர் சுப்பிரமணியம் கோடீஸ்வரன் மேற்கொண்ட நடவடிக்கைகளும், அதுவே செம்மணி புதைகுழியை உலகறியச் செய்தது என்பதும் பலரும் அறியாத விடயம். கிருஷாந்தி குமாரசுவாமி காணாமல்போன பின்னர் ஒருநாள், அவரது ஊரான கைதடியிலிருந்து யாழ் இந்துக் கல்லூரிக்கு சைக்கிளில் கல்வி கற்பதற்காக பயணம்செய்துகொண்டிருந்த எனது தகப்பனாரின் சகோதரியின் மகன், வழியில் அரியாலைப் பகுதியில் இருந்த சைக்கிள் கடையொன்றில் கிருஷாந்தியின் சகோதரரான பிரவணனின் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனைக்காகத் தொங்கவிடப்பட்டிருந்ததை அடையாளம் கண்டுவிட்டார்.

பிரணவனின் சைக்கிளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் ஒன்றை வைத்து அதனை அடையாளம் கண்ட அவர், உடனடியாக எனது தந்தையிடம் அந்தத் தகவலை அறியத்தந்தார். இந்த விடயத்தை யாழ்ப்பாண இராணுவத்தின் 512வது பிரிவுக்கு எனது தந்தையார் உடன் அறிவித்தார். விசாரணைகளை முன்னெடுத்த 512ம் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவப் பொலிஸார், எனது தந்தையாரான சு.கோடீஸ்வரனையும் அழைத்துக்கொண்டு யாழ் இந்துக் கல்லூரிக்குச் சென்று சைக்கிளை அடையாளம் கண்ட அவரது சகோதரியின் மகனையும் அழைத்துவந்த விசாரித்து விபரங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதனடிப்படையில் அந்தச் சைக்கிள் கடைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட இராணுவப் பொலிஸார், பிரணவனின் சைக்கிள் உதிரிப் பாகங்கள் செம்மணி முகாமுக்குச் சென்றுவரும் இன்னுமொருவர் ஊடாக அந்தச் சைக்கிள் கடைக்கு விற்பனைக்காகக் கொடுக்கப்பட்டதை கண்டறிந்தனர். தொடர்ச்சியான விசாரணைகள் மூலம், செம்மணி முகாமிலிருந்து பிரணவனின் சைக்கிளை விற்ற இராணுவச் சிப்பாயைக் கண்டுபிடித்த இராணுவப் பொலிஸார், கிருஷாந்தி குமாரசுவாமி செம்மணி காவலரணில் இருந்த படையினரால் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் அவரைத் தேடிவந்த தாய், சகோதரர், அயலவர் உள்ளிட்ட அனைவரும் கொன்று புதைக்கப்பட்ட உண்மையைக் கண்டறிந்தனர். கைதுசெய்யப்பட்ட இராணுவச் சிப்பாய் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பில் நீதிமன்ற விசாரணைகள மேறகொள்ளப்பட்டன. வழக்கு விசாரணைகளுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து அப்போது ஒரே போக்குவரத்து மார்க்கமாக இருந்த இராணுவத்தினரின் விமானம் மூலமே அடிக்கடி கொழும்புக்குச் சென்று சாட்சி கூறி கிருஷாந்தி கொலைவழக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு எனது தந்தையாரான சு.கோடீஸ்வரன் முக்கிய பங்கு வகித்தார். தனது சகோதரியின் மகனின் தகவலை அடிப்படையாக வைத்து உடனடியாக இராணுவத்தினரிடம் முறைப்பாடு செய்து, விசாரணைகளை முடுக்கிவிட்ட அவர், தொடர்ந்து வழக்கு விசாரணைகளிலும் பங்கெடுத்து வழக்கை முன்னெடுத்ததன்மூலம், செம்மணி பகுதியில் மேலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள் என்ற உண்மையும் வெளிப்படக் காரணமாக அமைந்தார். அன்றைய நெருக்கடியான, உயிராபத்தான சூழலில் அவர் இந்த முயற்சியை எடுத்திருக்காவிட்டால், கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்ட விடயமும், இன்னும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அதே செம்மணி வெளியில் கொன்று புதைக்கப்பட்ட உண்மையும் இன்றுவரை வெளியுலகம் அறியாத ஒன்றாகவே இருந்திருக்கும். குறிப்பு : 09-09-2009 அன்று எமைவிட்டுப் பிரிந்துவிட்ட எமது தந்தையார் சுப்பிரமணியம் கோடீஸ்வரன் நினைவாக…07-09-1996இல் கொல்லப்பட்ட எமது உறவினரான கிருஷாந்தி குமாரசுவாமிக்கு நடைபெற்ற அவலத்தையும், அந்த விசாரணைகள் மூலம் செம்மணி புதைகுழி விவகாரத்தையும் உலகறியச் செய்த அவரது துணிச்சலான செயற்பாட்டை… எமைவிட்டுப் பிரிந்த சகோதரி கிருஷாந்திக்கான உருக்கமான அஞ்சலிகளுடன் இங்கு பகிர்கிறேன்.