பிரின்ஸ் காசிநாதர் அவர்கள் வாழும் போதே நினைவு மீட்கும் என் பதிவு.

என்ன மாதவம் செய்தேன் இத்துணை பெரியவர்களுடன் நானும் சரிசமமாக அமர என என்னை அன்று எண்ண வைத்த தருணம் நான் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண பேரவை தலைவராக தேர்வான தினமே. எமை அவையத்து முந்தி இருக்க செய்தல் தந்தை செயல் என்பதை எனக்கு செய்தது நான் இணைந்து செயல்ப்பட்ட நாபா தலைமையிலான ஈ பி ஆர் எல் எப் கட்சி என்பதை என்றும் மறவேன்.

 அதன் பின் நடந்த தேர்தலில் எனக்கு பிரின்ஸ் காசிநாதர் என்ற பெரும்தகையை அறிமுகப்படுத்தியதும் ஈ பி ஆர் எல் எப். அதுவரை ஆயுதம் ஏந்திய மாக்சிச சிந்தனை கொண்ட போராளிகளின் குழு என அறியப்பட்ட நான் சார்ந்த அமைப்பு, கிழக்கில் மக்கள் மனதில் கனவான்களாக இருந்த இருவர் எம்முடன் இணைந்த பின் எம்மை பற்றிய தங்கள் முடிவை புடம் போட்டு கொண்டனர்.

அவர்களில் ஒருவர் தான் திரு பிரின்ஸ் காசிநாதர். மற்றவர் திரு சாம் தம்பிமுத்து. ஆரம்பத்தில் எமக்கு உதவியவர் திரு சாம் தம்பிமுத்து. புலிகள் எம் மீது தாக்குதல் நடத்தியதால் துரைரட்ணம் உட்பட பல தோழர்கள் உகந்தை காட்டில் மறைந்து செயல்பட்ட வேளையில் அவரை அழைத்து வந்து நாம் இன்னமும் இயங்குகின்றோம் என பி பி சி யில் பேச வைத்தவர் திரு சாம் தம்பிமுத்து.

அதனால் தான் அவரை நாம் 1989ல் நடந்த மட்டக்களப்பு பாராளுமன்ற தேர்தல் களத்தில் எமது கட்சி சார்பாக போட்டியாளராக தேர்வு செய்தோம். ஆனால் அதுவரை எமக்கு திரு பிரின்ஸ் காசிநாதருடன் எந்த நேரடி தொடர்பும் இல்லை. அப்போது மணியம் மாஸ்டர் என்ற படுவான்கரை ஆதரவாளர் எம்மை சந்தித்து திரு பிரின்ஸ் காசிநாதர் போன்ற பெருமகனை எப்படி மறந்தீர்கள் என கேட்டார்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு அப்போது பொறுப்பாளராக இருந்த கிருபாவுக்கு அந்த கேள்வியின் அர்த்தம் புரியவில்லை. வழமைபோல் நாபாவிடம் விடயம் சென்ற வேளை 1978ல் கிழக்கில் சூறாவளி புனர்வாழ்வு வேலைக்கு சென்ற வேளை அரசடி மகாவித்தியாலயதில் இருந்து நாம் வெளியேறிய பின்பு மெதடிஸ்த பாடசாலையில் தங்குவதற்கு அனுமதித்த அதிபர் தான் திரு பிரின்ஸ் காசிநாதர் என்றார்.

நேரம் தவறாமை, உடன் முடிவு எடுத்தல், அஞ்சாமை, அடிபணிதல் இல்லாமை, என வாழ்ந்த ஒழுக்க சீலரிடம் எப்படி விடயத்தை இளையவரான நாம் எடுத்து செல்வது என்று பயந்த போது அதனையும் செய்தவர் மணியம் மாஸ்டர். அவர் விடயத்தை கூறியதும் ‘’பொடியளை பயப்பட வேண்டாம் என சொல்லுங்கள் நான் இப்ப பிரின்சிப்பல் அல்ல. பிழை விட்டால் அடி விழாது எனவும் கூறுங்கள்’’ என்றாராம்.

அவர் பெயர் அறிவிக்கபட்ட பின்பு தான் எமக்கான கனதி கூடியது. பிரின்ஸ் சேர் ஈபி ஆர் எல் எப் வேட்பாளராம் என்ற செய்தி காட்டு தீயாக பரவ எம்மீதான மதிப்பும் உயர்ந்தது. வடக்கில் எம்மீது சாதிய சாயம் கொண்டு இகழ்ந்தவர் போலவே கிழக்கிலும் முஸ்லிம் மக்களுடன் எம் நல் உறவும் ஏளனம் செய்யப்பட்ட காலம் அது. புலிகளின் திட்டமிட்ட செயல் எம்மை வடக்கிலும் கிழக்கிலும் பாதித்த காலம்.

ஆனால் பிரின்ஸ் வரவு எம்மை திரும்பி பார்க்க வைத்தது. கனதியான தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாக தோற்று விடுவேன் என என்னிடம் கூறினார் சாம் தம்பிமுத்து. ஏன் என்று கேட்டேன். மதரீதியாக பிரின்ஸ் மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் வாக்குகள் அதிகம் பெறுவர் அதனால் எனது வெற்றி நிச்சயம் இல்லை என்றார். தோழர்கள் காட்டில் இருந்த வேளை உதவியவருக்கு உதவும் நிலையில் நான்.

அப்போது எனது பதவி வடக்கு கிழக்கு மாகாண சபை சபாநாயகர். சபாநாயகர் அரசியல் செய்ய கூடாது என்பது பாராளுமன்ற மரபு. அதனையும் மீறி பிரச்சாரம் செய்ய மட்டக்களப்பு சென்றேன். மட்டு நகரில் பிரின்ஸ் அதிக வாக்கு பெறும் நிலை காணப்பட்டதால் நான் பிரசாரத்தை வாழைச்சேனையில் தொடங்கினேன். அங்கு சாம் அண்ணாவுக்கு முன்னுரிமை கொடுத்து பல கிராமங்களில் பிரச்சாரம்.

எமது வேட்பாளர்களான சாம் மற்றும் பிரின்ஸ் இரண்டு பேருக்கும் வாக்களித்த பின் மூன்றாவது விருப்பு வாக்கை டெலோ ஜனா (கருணாகரன்) அவர்களுக்கு போடும்படி நாபாவின் அறிவுறுத்தலின் படி பிரச்சாரம் தொடர்ந்தது. வழமை போல காலை உணவுக்கு பின் பிரச்சாரத்துக்கு போகா தயாரான வேளை தோழர் பெரிய சிவா வந்து பிரின்ஸ் காசிநாதர் சேர் வந்திருக்கிறார் என்றார்.

அதுவரை நான் அவரை சந்தித்ததில்லை. எமது தேர்தல் அலுவலக வாசலில் நின்றிருந்தார். நெடிய உருவம். புருவம் வரைந்த மீசை, சுருள் தலை முடி, கோடிட்ட சிவப்பு ரீ சேட்டை லோங்சுள் இன் செய்து கம்பீரமாக நின்றார். எடுத்த எடுப்பில் எனக்கு அவரை பார்த்ததும் தேன்நிலவு ஜெமினிகணேசன் தான் நினைவில் வந்தார். சேர் உள்ளே வாங்கள் என்றேன். சிவாஜி குரலில் கர்ஜிக்க தொடங்கினார்.

முதலில் உங்கள் ஆட்களை ஒழுங்காக நடக்க சொல்லுங்கள் அப்பதான் தேர்தலில் வெல்ல முடியும் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மிகவும் கண்ணியமாகவே எனது பிரச்சாரம் இருந்தது. என்ன பிரச்சனை என கேட்டேன். ஒரு கிராமத்தின் பாடசாலை பெயரை சொல்லி அங்கிருந்து மேசை கதிரைகளை தேர்தல் பிரச்சாரத்து எடுத்து சென்றதை கூறி மாணவர்களின் படிப்பு என்னாவது என்றார்.

உண்மையில் அப்படி செய்தது நாம் அல்ல. அது வேறு அமைப்பை சார்ந்தவர் என பெரிய சிவா அவரிடம் சொல்ல அவர் நீங்கள் எல்லாம் ஒரு கூட்டம் தானே என்றார். எனக்கு சுள் என்று கோபம் வந்துவிட்டது. காரணம் அந்த அமைப்பு எம் கூட்டில் இல்லை. அதனால் கடும் தொனியில் அவரிடம் மற்றவர் செய்கிற பிழைக்கு நான் பொறுப்பு எடுக்க முடியாது நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன்.

நான் வேட்ப்பாளர். நான்தான் மக்களுக்கு பதில் சொல்லவேண்டும் உங்கள் கட்சி அல்ல என்றார். கட்சி பற்றி கூறியதும் எனக்கு சுருக்கென்று இருந்தது. சேர் கட்சி பற்றி பேசாதீர்கள். நீங்கள் எங்கள் கட்சி வேட்பாளர். அதற்காக அதை விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. விரும்பினால் வேட்பாளராக நான் போகும் பிரச்சாரத்து வாருங்கள் இல்லை என்றால் மட்டக்களப்புக்கு திரும்பி போங்கள் என்றேன்.

பெரிய சிவா எமது ருத்திர தாண்டவத்தை பார்த்து திகைத்து நிற்க நான் தோழர்களுடன் பிரச்சாரத்துக்கு வாகரை சென்றுவிட்டேன். மதியம் வரை பிரச்சாரம் நடத்திவிட்டு உணவுக்காக ஒரு ஆதரவாளர் வீட்டில் இருந்த வேளை பெரிய சிவா வந்தார். அவரை கண்டதும் பின்பு என்ன நடந்தது என கேட்க்க ‘’நான் தான் கொதியன் எண்டுபாத்தா அவன் என்னை விட கொதியன்’’ என பிரின்ஸ் சேர் சொன்னதாக கூறி சிரித்தார்.

மாலை மக்கள் கூட்டத்தின் மத்தியில் மேடையில் பேசிக்கொண்டிருக்கையில் சலசலப்பு ஏற்ப்பட்டது. பார்த்தால் மிடுக்கு நடையில் மேடையேறி வருகிறார் பிரின்ஸ் சேர். என்பேச்சை உடன் முடித்து அவரை பேச வருமாறு அழைத்தேன். காலையில் நடந்த எதையும் தனது உடல் மொழியில் காட்டாது எடுத்த எடுப்பிலேயே ‘’ராம் போன்ற இளையவர் அழைப்பில் உங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்வது எனக்கு பெருமை’’ என்றார்.

நிறைகுடம் தளும்பாது என்பதற்கு நடைமுறை உதாரணம் பிரின்ஸ் சேர் என்பது அன்றைய என் அனுபவ அறிவு. ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் அவர் தூண்டுதலில் போட்டியிட்ட அமிர்தலிங்கம் கூட தோல்வி அடைய பிரின்ஸ் சேர், சாம் அண்ணா, டெலோ கட்சி ஜனா, என் பல்கலைக்கழக சீனியர் ஈரோஸ் கட்சி அழகு குணசீலன் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற வரலாறை மறக்க முடியாது.

மீண்டும் என் மாகாண சபை கூட்டுக்குள் நான் வசிக்க வந்த சில மாதங்களின் பின் சாம் அண்ணா எனக்கு ஒரு செய்தி கூறினார். பாராளுமன்றில் வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகம் பற்றிய புரிதல் இல்லாத நிலை காணப்படுவதால் உண்மை நிலைமை அறிய நேரில் தானும் பிரின்ஸ் காசிநாதரும் திருமலை வருவதாகவும் தங்குமிட வசதிகளை செய்ய முடியுமா எனவும் கேட்டார்.

நான் இருவரின் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு சிறு பங்களிப்பு செய்தவன் மட்டுமல்ல ராமர் பாலம் கட்டும் வேளை அணில் செயல்ப்பட்ட கதையும் கேட்டவன். அதனால் அவர்கள் இருவரும் தங்க எனது உத்தியோக இல்லத்தில் ஏற்ப்பாடு செய்தேன். பல விடுதிகளில் சமையல் செய்த விருந்தோம்பல் தெரிந்த எனது சமையலாளர் வீரையாவிடம் வேண்டியதை செய்யும் பொறுப்பை கொடுத்தேன்.

அவரும் அதை செவ்வனவே செய்தார். அதன் விளைவை அடுத்த மாதமே பிரின்ஸ் சேர் எனக்கு அறுவடையாக தந்தார். அன்று சபாநாயகராக இருந்த எம் எச் முகமட் அவர்களை சந்தித்து எமது நிர்வாகம் பற்றி சிலாகித்து நீங்கள் நேரில் சென்று பார்த்து உங்கள் கருத்தை ஜனாதிபதி பிரேமதாசா வுக்கு கூறுங்கள் என கூறினார். அதன்படி சபாநாயகர் திருமலை வந்தார், பார்த்தார், சென்றார்.

எம் எச் முகமட் பத்திரிகை மாநாட்டில் சீரான மாகாண நிர்வாகம் பேரவை செயலக செயல்ப்பாடு உறுப்பினர் தங்கும் விடுதி என எல்லாவற்றையும் சிலாகித்து பேசி அவர்கள் தனி அரசு நடத்த தகுதியானவர்கள் என சத்தியம் உரைத்தார். அதுவே பிரேமதாசா போன்ற பேரினவாதிகள் மூளையில் மாறாட்ட நிலையாகி வடக்கு கிழக்கு மாகாண அரசை கவிழ்க்கும் கழிசடை எண்ணத்தை விதைத்தது.

பிரின்ஸ் சேர் சொன்ன நற் செய்தியை நேரில் பார்த்து அதை ஒரு குடம் பாலாக சுமந்து சென்றவர் மர்ஹூம் எம் எச் முகமட். ஆனால் அதில் ஒரு துளி விஷம் கலந்தவர் பேரின வாத பிரேமதாச கூட்டு. கிழக்கில் இனவாதம் பேசாத மதவாதம் இல்லாத ஒரு பெருமகனின் முயற்சி கனவாக கானல் நீராக போயிருக்கா விட்டால் அன்று ஐந்து வருடங்கள் அந்த சபை நிலைத்து நீடித்திருக்கும்.

பிரின்ஸ் சேர் எனக்கு செய்த கைமாறு ஒன்று என் நினைவில். பெரிய சிவா குடும்ப சூழ்நிலையில் தவறுகள் செய்த நிலை வந்த போது அவரை பொலிசில் பிடித்து கொடுக்க ஒருவர் பிரின்ஸ் சேரிடம் உதவி கேட்க அவரும் ஒத்து கொண்டார். நேர்மையான அவரது முடிவு எனக்கு செய்தியாக வந்த வேளை நான் அவரிடம் தப்பு ஏன் எதற்காக நடந்தது என கூற அதை ஏற்று விலகிக்கொண்டார்.

வந்த பெரு நிதியை முக்கியமானவர்கள் தமக்கும் தம் உறவுகளுக்கும் முடக்கியபின் எஞ்சியதை ஏனையவர்க்கு பகிர்கையில் பலதும் நடந்தது. காத்தான்குடி பெண்ணை இச்சைக்காக சுகித்து புலி என மண்ணுள் புதைத்து மாகாண சபைக்கு வந்தவன், தன் குமர் பிள்ளையை கரை சேர்க்க வசதி இன்றி தப்பு செய்தவனை சிறைக்கு அனுப்புதல் என்ன நியாயம் என்பதே அன்று பிரின்ஸ் சேர் இடம் என் கேள்வி.

என்றும் என் பார்வைக்கு அவர் தேன்நிலவு ஜெமினிகணேசன் கர்ஜனைக்கு சிவாஜிகணேசன் நாவன்மைக்கு பண்டாரநாயக்க, அறிவூட்டலுக்கும் கட்டுப்பாட்டுக்கும் கண்ணியத்துக்கும் கடமைக்கும் மொத்தத்தில் ஆசிரியர் தொழிலுக்கும் உதாரணமாக வாழந்த பிரின்ஸ் சேர் வாழ்வு நாளைய சந்ததிக்கு பாடமாக படிப்பினையாக வழிகாட்டலாக உதாரணமாக அமைய அவர் நூறாண்டு வாழவேண்டும்.

சேர் எனது உத்தியோக வாசஸ்த்தலத்தில் வடக்கு கிழக்கு மாகாண பேரவை செயலக விருந்தினராக இருந்த நீங்கள், மட்டக்களப்பு திரும்பியபின் எனக்கு எழுதிய கடிதத்தில் எம் மாகாண அரசின் செயல்ப்பாடு பற்றியும் பேரவை செயலக விருந்தோம்பல் பற்றியும் எழுதிய நன்றி உரை கடிதம், என் நினைவில் இன்றும் வருகிறது. மட்டக்களப்பு மண்ணின் பெருமகனே உங்களை வரலாறு என்றும் மறக்காது.

இராமகிருஷ்ண பரகம்ஸ்சரை கண்ட விவேகானந்தர் அல்ல நான். பித்தன் என கூறியும் சிவனால் நாவுக்கு அரசன் என அழைக்கப்பட்டவனும் அல்ல நான். போதி மரத்தமர்ந்த சித்தார்த்தனும் அல்ல நான். சாதாரண குடும்பத்தில் பிறந்து ஞாலத்தில் அலைந்து வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் உழன்று நாபா எனும் மனிதத்தை கண்டு உங்கள் போல் பெரியவரை காணும் பாக்கியம் பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தோழன் மட்டுமே.

– ராம் –