புலிகளிடமிருந்து சிறிலங்காவை காப்பாற்றிய மகிந்த! மைத்திரியிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்றி ரணில்! இந்த இருவரிடமிருந்தும் சஹ்ரான் போன்றவர்களையே காப்பாற்றி வைத்திருந்த மைத்திரி!

நாட்டில் சுமூக நிலை திரும்பிவிட்டது என்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து வழக்கம்போல குதூகலிக்கலாம் என்றும் மூன்று நாட்களுக்கு முன்னர் சத்தமான அறிவிப்பொன்றை விடுத்த ஜனாதிபதி மைத்திரி, நேற்று நாட்டிலுள்ள அனைத்து சமூக வலைத்தளங்களையும் இழுத்து மூடிவிட்டு, தன்னோடு 26 சங்கிகளையும் அழைத்துக்கொண்டு சீனாவுக்கு போய்விட்டார்.

ஆனால், நாட்டின் அமைதிக்காக தங்களது முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர்களாகவும் ஜனநாயக வழிகாட்டிகளாகவும் திகழ்ந்துகொண்டிருக்கும் சிறிலங்காவின் இரு பெருந்தலைவர்கள் சும்மா இருந்துவிடவில்லை. நேற்றிரவே குளித்து முழுகி தலைவாரிக்கொண்டு கமராவின் முன்னால் வந்திருந்துகொண்டார்கள். நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்கள்.

ஒருவர் – பௌத்த சமயமே நாட்டின் உயர்வான மதம் என்று அரசமைப்பை எழுதிவைத்திருக்கும் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அவரது அதே தோழமைக்கருத்தோடு வீதியில் வாள் – கத்தி – பொல்லுகள் என்பவற்றின் துணையோடு ஏனைய மதத்தவர்களின் உடமைகளை எரித்துக்கொண்டிருபவர்களை பார்த்து அதனை நிறுத்துமாறு அவர் சொன்னார்.

இன்னொருவர் – பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுபோட்டவரும் வெள்ளை வாகனங்களின் உள்ளே பல அப்பாவிகளை ஏற்றி சமாதி செய்தவருமான மகிந்த ராஜபக்ச. அவரும் வன்முறைகளை நிறுத்துமாறு அந்த தம்பிமாரை பார்த்து சொன்னார்.

அந்த தம்பிகள் பாவம்! நேற்றிரவு முழுவதும் ஊரடங்குவேளையில் ஆட்களை தேடித்தேடி வெட்டிக்கொண்டிருந்த பிஸியில் ஜனநாயக வழிகாட்டிகள் பேசியதொன்றும் அவர்களுக்கு கேட்கவில்லை. கேட்டிருந்தால் கையில் கிடந்த அத்தனை கதாயுதங்களையும் கீழே வைத்துவிட்டு குபீர் என்று சிரித்திருப்பார்கள்.

தம்பிகள், மினுவாங்ககொடவில் ஒரு மரத்தொழிலாளி வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டிச்சாய்த்திருக்கிறார்கள். அந்த அப்பாவி முஸ்லிமை குற்றுயிராக புத்தளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனபோது அங்கு அவர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஆனாலும் ரணில், மகிந்த போல இன்னும் பல ஜனநாயக வழிகாட்டிகள், அந்த தம்பிகளுக்கு நல்வழிகாட்டுவதற்கு நேற்றிரவு முழுவதும் காணொலிகளிலும் அறிக்கைகளிலும் கதைத்துக்கொண்டுதானிருந்தார்கள். எல்லோருமே கிட்டத்தட்ட சிங்களத்து சமூத்திரகனிகள் போல வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனா ஊனா என்றால் அட்வைஸ் காணொலியோடு ஆஜராகும் சங்கக்காரவை காணவில்லை. அவருக்கு பதிலாக மஹேல ஜெயவர்த்தன ஏதோ சொல்லியிருந்தார்.

எனக்கு இப்போதிருக்கும் பயம் ஒன்றுதான்!

“இந்த தாக்குதலை நடத்துபவர்கள் அனைவரும் சிங்களவர்கள் என்பது ஊர்ஜிதமாகியுள்ள நிலையில், உடனடியாகவே நாடு முழுவதிலுமுள்ள சிங்களவர்களின் வீடுகள் மற்றும் 12 ஆயிரத்துக்கு 239 விகாரைகள் ஆகியவற்றில் பொலீஸாரும் படையினரும் பாய்ந்து சென்று அங்கு வாள்கள், நீண்ட கத்திகள் மற்றும் ஆயுதங்கள் உள்ளனவா என்று தேடுதல் நடத்தப்படுமா” – என்று யாராவதொரு முஸ்லிம் அரசியல்வாதி கேள்வி கேட்டுவிடுவாரோ என்பதுதான்.

அப்படிக்கேட்டாலும் அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ளே தூக்கிப்போட்டு நாட்டில் ஜனநாயகத்தை ரணில் காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

புலிகளிடமிருந்து சிறிலங்காவை காப்பாற்றிய மகிந்த!

மைத்திரியிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்றி ரணில்!

இந்த இருவரிடமிருந்தும் சஹ்ரான் போன்றவர்களையே காப்பாற்றி வைத்திருந்த மைத்திரி!

இப்படிப்பட்ட தலைவர்களிருக்கும்போது சிறிலங்காவுக்கு என்ன குறை?