மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை

(அ. அகரன்)

‘நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்’ (553) என்ற திருக்குறள் வாசகத்தின் பிரகாரம், ஒவ்வொரு நாளும் குடிமக்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, முறை செய்யாத அரசன், நாள்தோறும் மெல்ல மெல்லத் தன் நாட்டை இழப்பான் என்பதற்கிணங்க, அரசியல் என்பது அமைந்திருக்க வேண்டும்.

அரசியல் என்பது, வெறுமனே மனித செயற்பாடோ அல்லது மனித மனங்களால் பின்னப்பட்ட சித்தார்ந்தமோ அல்ல. அது உன்னதமான கலை. அந்தக் கலையைச் செவ்வனே கற்காத, செயற்படுத்த முடியாதவர்கள் அந்தக் கலைக்குள் தம்மை நிலை நிறுத்திக்கொள்வதென்பது ஏற்புடையதல்ல.

இது அரசியல் என்ற கலைக்கு மாத்திரமின்றி, அனைத்துக் கலைகளுமே இந்த வகைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே, எந்தக் கலையானாலும் காலத்துக்குக் காலம், பரீட்சைகள் மூலமான தேர்ச்சி வைக்கப்பட்டு, குறித்த கலை சார்ந்தவர்களின் முன்னேற்றமும், அதன்பால் அவருக்குள்ள வித்துவத்தையும் எடைபோட்டுக்கொள்ளப்படுகின்றது.

எனினும், அரசியல் என்ற கலைக்குள் இந்தத் தேர்ச்சி மூலமான நிலை அறியப்படாமையால் பல நாடுகளிலும் அதன் எதிர்வினைத்தாக்கம் உணரப்பட்டு வந்துள்ளதுடன், அரசியல் எனும் கலையைச் சிறப்பாக கைக்கொள்ளாதவர்களால், அக்கலை தாழ் நிலைக்கும் கொண்டு செல்லப்பட்டது.

அந்த வகையில், இலங்கை தேசம் வெறுமனே அரசியல் வித்துவம் நிறைந்தவர்களால் ஆளப்படுகின்றது என்பதற்கு மாறாக, சுயநலச் சாக்கடையில் ஊறிய மனித மனங்களுக்குள் சிக்குண்டு தத்தளிக்கிறது என்பதான தோற்றப்பாடுதான், அண்மைய நாள்களில் பிரதிபலித்து வருகின்றது.

புதிய நடைமுறையினூடாகத் தேசிய அரசொன்றை, ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் அமைத்திருந்தன. அதற்குக் காரணமாக அமைந்தது மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனி நபர் மீதான கோபமும் அவரது ஆட்சியில் இடம்பெற்ற வேண்டத்தகாத செயற்பாடுகளும் என, குறித்த இரண்டு கட்சிகளுமே தெரிவித்திருந்தன.

எனினும், இந்தச் செயன்முறை நீண்ட காலத்துக்குச் செல்லும் முன்பே, ஜனாதிபதியுடன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எற்பட்ட கோபங்களும் தனிநபர் மீதான வெறுப்புணர்வுகளும் இலங்கை அரசியலில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலை, பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனங்கள் தொடர்பாக, மக்களுக்குப் இதுவரைகாலமும் இல்லாத புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களாக,யார் ஆட்சி அமைப்பது என்பதான போட்டியில் பரிமாறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பணத் தொகைகள் ஒரு சாராரிடம் எப்படிக் குவிந்தது, என்ற கேள்வி எழுப்பப்படவேண்டியுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், தமக்குப் பேரம் பேசப்பட்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பேரம் பேசலில் சிக்குண்ட வியாழேந்திரனைத் தவிர, ஏனையவர்கள் தமது கட்சிக்குள் முரண்பாடான நிலை காணப்பட்டாலும் கூட, அதைக் கட்சிக்குள் வைத்துக்கொண்டார்களே தவிர, அதைப் பகிரங்கப்படுத்தவோ கட்சியை விட்டு வேறு பக்கம் பாயவோ முற்படவில்லை.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தனித்துச் செயற்படுகின்ற போதிலும் கூட, மஹிந்த தரப்புடன் பேரம் பேசல் இடம்பெற்றதற்கான ஆதாரத்தைத் தானாகவே வெளிப்படுத்தியிருந்தமை, அண்மைய நாள்களில் பேசுபொருளாகக் காணப்பட்டிருந்தது.

மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் புயலுக்குள் சிக்குண்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்து வரப்போகும் தேர்தல்களில் எவ்வாறு மக்கள் முன் சென்று தமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளனர் என்பதற்கப்பால், இவர்கள் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனரா என்ற கேள்வி மேலெழுகின்றது.

மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், மக்கள் மத்தியிலான தாக்கத்தின் பிரதிபலிப்பாக வெளிப்படும் காலம் தொலைவில் இல்லை என்பது வெளிப்படை. ஏனெனில் இலங்கை மக்கள் கடந்து செல்லப்போகும் நாள்கள் என்பது, இலகுவானதல்ல. வெறுமனே எரிபொருள் விலை குறைப்புகளும் பொருட்கள் சிலவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை அறிமுகப்படுத்துவதாலும் மக்களின் மனங்களை வென்று, அரசியல் தளத்தில் தடம் பதிக்கலாம் என்பது தண்ணீரில் எழுதிய எழுத்தாகிவிடலாம்
தமிழ் மக்களின் அரசியல் சாணக்கியத்தை, எவ்வாறு தமிழ்த் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ளப்போகின்றனர் என்பதே இன்றைய கேள்வியாகத் தமிழர்கள் மத்தியில் விரிந்து கிடக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பது போல், தமிழ் மக்களை அடகு வைத்து, தமிழ் தலைமைகள் ஒரு நபருக்காகவும் ஒரு கட்சிக்காவும் நிற்கின்றனரா, தமிழ் மக்கள் மீதான கரிசனை கொண்டு காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள முனைகின்றனரா என்பது தொடர்பில் பலத்த சந்தேகம் உள்ளது.

இவ்விடயம் தொடர்பாக, சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் ஆராயப்படவேண்டிய தேவையுள்ளது. ஏனெனில், அவரது குரலுடன் வெளிவந்த செய்தியில், மஹிந்த தரப்புடனான பேரம் பேசலை அவர் நிரூபித்துள்ளார்.

எனவே, தற்போதைய நிலையில், அவரது பேச்சுகளை, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாகவும் தமிழ் தலைமைகளைத் தமிழ் மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தில் பதிவிடவும் முனைப்புக் காட்டுவதாகவே கருத வேண்டியுள்ளது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செல்லும் பாதை, சரியானதா என்ற ஐயப்பாடும் ஓரத்தேயுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், கூட்டமைப்பின் போக்கு காணப்படுகிறதான நிலை காணப்பட்டாலும், அவர்கள் ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது 14 பேர் கையொப்பமிட்டு ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணிக்கான ஆதரவோ, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வுக்கான வழியாக அமையப்போவதில்லை.

தற்போதைய நிலையில், மஹிந்தவின் செயற்பாடுகளைத் தென்னிலங்களையில் உள்ள பாமர மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை உள்ளது. ஏனெனில், நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் என்ற செல்வாக்கு இன்றுவரை மஹிந்தவுக்கு இருந்து வருகின்றது.

தற்போதைய பதவி ஏற்புகள், அதில் சில களங்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, அதை நிவர்த்தி செய்யக்கூடிய ஆற்றல், மஹிந்தவிடம் உள்ளது என்பதை ஏற்றாக வேண்டும்.

இந்நிலையில் மஹிந்தவை வெறுத்து, தனித்து ஒரு நபர் சார்ந்தோ கட்சி சார்ந்தோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதானது அடுத்த தேர்தலுக்குப் பின்னரான காலத்தில், தமிழர்களுக்கான தீர்வில் பாரிய பாதிப்பை வெளிப்படுத்தி நிற்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடுநிலைச் செயற்பாடு என்பது, மஹிந்தவைச் சர்வசாதாரணமாக ஆட்சிப்பீடத்தில் ஏற்றி நிற்கும் என்ற கூட்டமைப்பின் வாதத்தையும் நியாயப்பாடாகவே பார்க்கவேண்டிய நிலையில், வெறுமனே மஹிந்த ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக, ரணில் விக்கிரமசிங்கவையோ சார்ந்த கட்சியையோ முழுமையாக நம்பி, ஆதரவைத் தெரிவிப்பதானது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கியதாகிவிடும் என்பது தொடர்பிலும் அவதானம் தேவை.

தமிழ் மக்கள் மத்தியில் கடந்த சில நாள்களாகத் தொடுக்கப்பட்டு வரும் மறைமுக அச்சுறுத்தல் நிலைமைகளும் முன்னாள் போராளிகள் மீதான கழுகுப்பார்வையும் மஹிந்த ஆட்சிப்பீடம் ஏறினால் என்னவாகும் என்ற அச்சத்தை மீட்டுப்பார்க்க வைக்கின்றது.

ஆனால், ரணிலின் ஆட்சி என்பது முதுகில் மெல்லத்தடவி சுகம் காட்டி, காலம் கடத்துவதாகவும் மஹிந்த ஆட்சி என்பது குத்தினால் நெஞ்சிலேயே என்ற போக்கும் உள்ள நிலையில், தமிழ் தலைமைகள் எதைத் தமது தெரிவாக்கிக் கொள்ளப்போகின்றனர்?

ஆக, மக்களின் நன்மை தீமைகளைக் கேட்டறிந்து, ஆட்சி செய்யும் அரசராக யார் இருக்கப்போகின்றார் என்பதை விடுத்து, தமது வைராக்கியம் நிறைந்த மனச்சாட்சிகளுக்கு அப்பாலான செயற்பாடுகளால், ஜனநாயகத்தை மரணிக்கச் செய்யவதானது எதிர்கால சந்ததிகளுக்கு விடுதலையற்ற வினைகளுடன் கூடிய தாக்கத்தையே ஏற்படுத்தப் போகின்றது என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

அதற்குமப்பால், சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது போன்றதாக, இன்றைய காலத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் தேவை மத்திக்குத் தேவையாகவுள்ள நிலையில், அதைச் சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்வியல் சார்ந்த உரிமைகளை வென்றெடுக்க முனையவேண்டும் என்பதே, இன்றைய அரசியல் களம் உணர்த்தி நிற்கும் பாடமாகும்.