மஹிந்தவும் 13 பிளஸூம்

தமது ஆட்சிக் காலத்தில், தாம் இந்தத் தீர்வை வழங்கவிருந்த போதிலும், அதற்கிடையில் தமது ஆட்சி முடிவடைந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

சிறிய தமிழ்க் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களுடன், கடந்த ஐந்தாம் திகதி, கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள தமது இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்ததையின் போதே, மஹிந்த ராஜபக்‌ஷ இக்கருத்தைத் தெரிவித்திருந்தார்.

தமது பதவிக் காலத்தில், வடமாகாண சபைக்குப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, குற்றத்தடுப்பு தொடர்பான பொலிஸ் அதிகாரங்களை வழங்க இருந்ததாகவும் அதற்குள் பதவிக் காலம் முடிவடைந்ததாகவும் அவர் அக்கூட்டத்தின் போது, மேலும் கூறியிருந்தார்.

தமது நான்காண்டு காலப் பதவிக் காலத்தில், வழங்க முடியாது போன தீர்வை, எதிர்வரும் இரண்டு வருடங்களில், வழங்குவதாக ஒருவர் கூறுகிறார்.

தமது ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், வழங்காத ‘13 பிளஸ்’ தீர்வை, அடுத்த முறை பதவிக்கு வந்து வழங்குவதாக, மற்றவர் கூறுகிறார்.

இவற்றை நம்பலாமா?

நம்பலாம் என்றும் வாதிடலாம்; நம்ப முடியாது என்றும் வாதிடலாம்.

கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், எவரையும் நம்ப முடியாது தான். ஆனால், அரசியலில் கடந்த காலத்தில் தவறு செய்தவர்கள் அனைவரும், தொடர்ந்தும் அதே தவறுகளைச் செய்வார்கள் என்று, உறுதியாகக் கூற முடியாது என்ற அடிப்படையில், ‘சிலவேளை’ இவர்கள், இனிமேல் ஏமாற்ற மாட்டார்கள் என, அப்பாவித்தனமாக நம்பவும் முடியும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, இந்த விடயத்தில் அவரது நேர்மையை, அவ்வளவாகச் சந்தேகிக்க முடியாது என்றும் கூறலாம்.

ஏனெனில், அவர் கடந்த காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றை உள்ளடக்கிய, புதிய அரசமைப்பொன்றை வரைந்து, நிறைவேற்றிக் கொள்ள முயற்சித்தார். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான ஒன்றிணைந்த எதிரணியினர், அதனை எதிர்த்ததன் காரணமாக, நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

அதேவேளை, தமிழ் மக்களுக்கு, நல்ல முகத்தைக் காட்டிக் கொண்டு, சிங்கள மக்கள் எதிர்க்கக்கூடிய வகையில், ‘ஒருமித்த நாடு’ போன்ற சில வார்த்தை ஜாலங்களை, அத்தீர்வுத் திட்டத்தில் திணித்து, அதன் மூலம், அது நிறைவேறாத நிலையை உருவாக்கிவிட்டதும், அரசாங்கமே என்றும் சிலர் வாதிடலாம்.

மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது அணியினரும் பதவியில் இருந்த காலத்தில், மஹிந்த விரும்பியிருந்தால், இனப்பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வையும் வழங்கி இருக்கலாம்.

ஏனெனில், அப்போது அவருக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் இருந்தது. அதேவேளை, பேரினவாதிகள் ஏறத்தாழ அனைவரும் அவரைச் சுற்றி இருப்பதால், அவர் தமிழ் ஈழத்தைக் கொடுத்தாலும், அவர்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை.

கடந்த காலத்தில், இனப்பிரச்சினை விடயத்தில் மஹிந்தவின் அரசாங்கம், எவ்வகையிலும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்து, இரண்டு வருடங்களில் அதாவது 2011ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் ஒரு வருட காலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், எந்தவொரு முடிவும் காணப்படவில்லை.

இரு சாராரும், சில இணக்கப்பாடுகளுக்கு வந்திருந்த நிலையில், அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்தது.

நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வீணாகக்கூடாது என்பதற்காக, எட்டிய உடன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே, தெரிவுக்குழு தமது பேச்சுவார்ததைகளை ஆரம்பிக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியது. ஆனால், அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை. இறுதியில், பேச்சுவார்த்தைகளும் இல்லை; தெரிவுக்குழுவும் இல்லை என்ற நிலை உருவாகியது.

வேறு எதைக் கொடுக்க முடியாவிட்டாலும், போர் முடிவடைந்து, நான்காண்டுகள் செல்லும் வரை, நாட்டின் சட்டத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்டு இருந்த, வடமாகாண சபைக்குத் தேர்தலை நடத்தவாவது, அவ்வரசாங்கம் முன்வரவில்லை.

இறுதியில், இந்தியாவின் தலையீட்டில், ஐ.நா மனித உரிமைப் பேரவை, இலங்கைத் தொடர்பான தமது 2012ஆம் ஆண்டு் பிரேரணையின் மூலம் ஏற்படுத்திய நெருக்குவாரத்தின் காரணமாகவே, மஹிந்தவின் அரசாங்கம், 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், தேர்தலை நடத்தியது.

போர் முடிவடைந்து ஐந்தாண்டுகளில் தான், மஹிந்த பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். அதுவரையும், அரசியல் ரீதியாக இனப்பிரச்சினையை அணுக, அவரது அரசாங்கம், இதயசுத்தியுடன் முன்வந்ததாகக் கூற முடியாது. வடக்கில் வீதிகள் செப்பனிடப்பட்டு, பல அரச கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு, அரச அலுவலகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவை வழங்கப்பட்டன என்பது, ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தான்.

ஆனால், அதிகாரப் பரவலுக்கான பொறிமுறையான, மாகாண சபை முறையாக இயங்கும் வகையில் உதவ, அவரது அரசாங்கம் முன்வரவில்லை. மாகாண ஆளுநராக, இராணுவ அதிகாரி ஒருவருக்குப் பதிலாக, சிவிலியன் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற, தமிழ்த் தலைவர்களின் கோரிக்கையை, மிக இலகுவாக நிறைவேற்ற முடிந்த போதிலும், மஹிந்தவின் அரசாங்கம், அதனை நிறைவேற்றவில்லை.

மாகாண முதலமைச்சருடன், மோதிக் கொண்டிருந்த மாகாண பிரதம செயலாளரை, மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இரண்டு கோரிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தே, நிறைவேற்றியது.

‘13 பிளஸ்’ என்பது, மஹிந்தவாலேயே 2012ஆம் ஆண்டளவில் வழங்கப்பட்ட வாக்குறுதியாகும். சென்னையில் இருந்து வெளியாகும், ‘ஹிந்து’ பத்திரிகையுடனான பேட்டியொன்றின் போது, “நீங்கள் இனப்பிரச்சினைக்கு வழங்கப் போகும் தீர்வு என்ன” என்று கேட்கப்பட்டது?

அதற்குப் பதிலாகவே அவர், ‘13 பிளஸ்’ என்று கூறினார். ஆனால், அது என்ன என்பதை, அவரும் அப்போது அறிந்திருக்கவில்லைப் போல்த்தான் தெரிகிறது. ஏதோ, வாய்க்கு வந்ததைக் கூறிவிட்டார்.

மாகாண சபைகளை உருவாக்கிய, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு மேலதிகமாக, ஏதோ வழங்கப் போகிறார் என்று தான், எல்லோரும் அதனை விளங்கிக் கொண்டனர். “செனட் சபை ஒன்றை உருவாக்குவதை, மனதில் வைத்துக் கொண்டே, அதனைக் கூறினேன்” என, ஒரு சில வருடங்களுக்குப் பின்னர், அவர் கூறியிருந்தார்; அத்தோடு அது மறக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், அவர் மீண்டும் தமிழர்களுக்கு ‘13 பிளஸ்’ வழங்கப் போவதாகக் கூறுகிறார்.

13 பிளஸை விமல், கம்மன்பில, தினேஸ் ஏன் எதிர்க்கவில்லை?

கடந்த வாரம், எதிர்க் கட்சித் தலைவரும் தற்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளவருமான மஹிந்த ராஜபக்‌ஷ, தமது இல்லத்தில் தமிழ் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடல், பல வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

இப்பக்கத்திலுள்ள பிரதான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், இனப் பிரச்சினைக்கான தீர்வாக, ‘13 பிளஸ்’ என்ற அவரது பழைய திட்டத்தை, அவர் சுட்டிக் காட்டியது மட்டுமல்லாது, வடமாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் அவர், அந்தக் கூட்டத்தின் போது கூறியிருந்தார்.

போக்குவரத்து, குற்றவியல் விடயங்களைக் கையாளக்கூடிய வகையில், வடமாகாண சபைக்கு, பொலிஸ் அதிகாரங்களை வழங்கத் தமது பதவிக் காலத்தில், தாம் திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால், அதற்கு முன்னர், தமது ஆட்சி கவிழ்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

1990ஆம் ஆண்டு மார்ச் மாதம், தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தியதாக, சிங்கள அரசியல்வாதிகளாலும் சிங்கள ஊடகங்களாலும் குற்றம் சாட்டப்பட்ட வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், அதே ஆண்டு ஜுன் மாதம், கிழக்கு மாகாணத்தில், புலிகளிடம் சரணடைந்த 600க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளைப் படுகொலை செய்ததாகச் சிங்கள அரசியல்வாதிகள், ஊடகங்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ள, புலிகளின் முன்னாள் அம்பாறை – மட்டக்களப்பு சிறப்புத் தளபதி கருணா அம்மானும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

அவர்கள், கடந்த ஞாயிறறுக்கிழமை நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் முதலாவது பேராளர் மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தலைவர்களுடனான மஹிந்தவின் இந்தக் கூட்டத்தின் விவரங்கள், சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆங்கிலப் பத்திரிகைகளிலும் ஒன்றில் மட்டுமே, அச்செய்தி பிரசுரமாகியிருந்தது.

தமிழ், முஸ்லிம் மக்களால் நம்ப முடியாத வகையில், இதற்கு முன்னரும், மஹிந்தவும் அவரது அணியினரும் இவ்வாறு கருத்து வெளியிட்டு இருந்தனர். 2016ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ‘எழுக தமிழ்’ பேரணியில் கலந்துகொண்டிருந்தபோது, மஹிந்த அணியின் முக்கியஸ்தர்கள், “விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும்” எனக் கூறினர்.

ஆனால், அதே ஆண்டு ஒக்டோபர் மாதம், தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்த மஹிந்த, “விக்னேஸ்வரன் ஓர் இனவாதியல்ல; அவர் தமது நலனுக்காக, அரசியலைப் பாவிக்கிறார்” என்றும் கூறியிருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறிய அவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளை, அரசியல் ரீதியாகக் கையாள முடியாது போனமைக்கு, வருந்துவதாகவும் கூறியிருந்தார். இந்தக் கூட்டத்தின் விவரங்களும் சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகவில்லை.

அன்று, மஹிந்த அவ்வாறு கூறினாலும், அப்போது தமது சகாக்கள், தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வதற்கு, எதிராகக் கோஷமிடும் போது, அவர் அதைத் தடுக்கவும் இல்லை.
2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், பசில் ராஜபக்‌ஷ, தமது புதிய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அங்கத்தவர்களைச் சேர்த்துக் கொள்ளும் முகமாக, வடபகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

அப்போது அவர், படையினர் கைப்பற்றி இருக்கும் பொது மக்களின் காணிகள், விடுவிக்கப்பட வேண்டும் என்றும் காணாமற் போனவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் விடுதலை புலிகளின் தலைவர்களை, நினைவு கூர்வது சரியென்றும் கூறியிருந்தார். இந்த விவரங்களும் சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகவில்லை.

அதற்கு அடுத்த வார இறுதியில், தமிழ்ப் பத்திகையொன்றுக்கு, பசில், தமது வடபகுதி விஜயத்தைப் பற்றி, பேட்டியொன்றை வழங்கி இருந்தார். புலிகளின் முன்னாள் யாழ்ப்பாணத் தலைவர் திலீபனை நினைவு கூர, யாழ். மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாக, யாழப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் தம்மிடம் கூறியதாகவும் தமது அரசாங்கம், மேலும் சிறிது காலம் நீடித்து இருந்தால், தாமும் அவ்வாறான நினைவு கூரல் நிகழ்ச்சிகளுக்கு, அனுமதி வழங்கியிருப்போம் என்றும் அப்பேட்டியில் கூறிய அவர், இராணுவத்திடம் உள்ள மக்களின் காணிகள், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

போரின் போது, போர்க் குற்றங்கள் இடம்பெறவில்லையாயினும் அவ்வாறான குற்றச்சாட்டுகள் இருப்பின், அவற்றைப் பற்றிய விசாரணைகள் நடைபெற வேண்டும் எனவும் இது அனுதாபத்துடன் அணுக வேண்டிய விடயம் என்றும் பசில் மேலும் கூறியிருந்தார்.

இப்போது, மஹிந்தவுடன் இணைவதற்காக, இனவாதத்தைத் தூண்டிக் கொண்டு இருக்கும், அத்துரலியே ரத்தன தேரரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி, ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது, “வடமாகாண சபைக்கு, பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், கடந்த காலத்தில் படையினர் வசமிருந்த காணிகளை, மீண்டும் பொது மக்களிடம் கையளிக்கும் போதும் சில கைதிகளை விடுதலை செய்யும் போதும் அரசாங்கம் புதிய அரசமைப்பொன்றை வரைய முற்பட்ட போதும் அவை நாட்டை பிரிக்கும் நடவடிக்கைகள் என, மஹிந்த அணியின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர்கள் கூச்சலிட்டனர். அப்போது மஹிந்த, பசில் போன்றோர் அதைத் தடுக்கவோ குறைகூறவோ இல்லை.

இப்போது, ‘13 பிளஸ்’ வழங்குவோம், பொலிஸ் அதிகாரங்களை வழங்குவோம் என்று மஹிந்த கூறும் போது, அவர் நேர்மையானவராக இருந்தால், விமல், கம்மன்பில போன்றோர்கள் மூலமாகவும் அவற்றைக் கூறச் செய்ய வேண்டும்; அல்லது விமல் போன்றோர்கள் தமது பிரசாரங்களில் நேர்மையானவர்களாயின், அவர்கள் இப்போது, மஹிந்தவைக் கைவிட்டுப் போக வேண்டும்; போவார்களா?