மிக முக்கியமாக கொரனா பற்றி ஆலோசனைகள்

அன்பான யாழ்ப்பாண மக்களே….
ஓர் வைத்தியராக உங்களுடன் சில விடயங்களை அறிவுறுத்த விரும்புகின்றேன்

தற்போது இலங்கை உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி அறியாதவர்கள் கிடையாது. அதன் தாக்கங்களும் வளர்ச்சியடைந்த நாடுகளே பதறியடிக்கின்ற நிலைமையையும் ஊடகங்களினூடாகவும் சமூக வலைத்தளங்களினூடாகவும் பார்த்த பிறகும் ஏன் அலட்சிய போக்கில் இருக்கின்றீர்கள்.

🚫 உங்களை வெளியிடம் செல்லாமல் வீடுகளில் இருக்க பரிந்துரைத்தும் வீதிகளில் நிற்கின்றீர்கள்.
கடைகளில், வீட்டு விழாக்களில், மத வழிபாட்டு இடங்களில் கூட்டம் கூட்டமாக செல்கின்றீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து கதைத்தல், ஊர் சுற்றுகின்றீர்கள்.

🚫 வைத்தியசாலைக்கு தேவையற்ற காரணத்திற்காக வருகை தருதல், நோயாளியை பார்வையிட கூட்டமாக குடும்பத்துடன் குழந்தைகளுடன் வருகின்றீர்கள்.

🚫 இருமல் காய்ச்சல் இருந்தால் மற்றவர்களுக்கும் பரவும் என்ற எந்த குற்ற உணர்வும் இன்றி (தனிமையாக இருக்காமல்) மற்றவர்களுக்கு அருகில் இருத்தல், அவர்களின் முகத்திற்கு நேராக இருமுதல்.

🚫 பாதுகாப்பாக இருப்பவர்களை பார்த்து ஏளனம் செய்தல்.

🚫 எனக்கு வராது என்ற தவறான எண்ணம். அறிகுறிகள் இருப்பின் கொரோனாவாக இருக்காது என்ற எண்ணம். தனக்கு அறிகுறி இருப்பதை மற்றவர்களிடம் மறைத்தல்.

🚫 வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தாமாக முன் வந்து வைத்தியசாலையை அணுகாமை. வருபவர்களை வீட்டில் மறைத்து வைத்திருத்தல். அவர்களை தேடி வரும் காவல் மற்றும் சுகாதார உத்தியோகத்தவர்களினது கடமைகளுக்கு ஒத்துளைப்பு வழங்காமல் இருத்தல்.

🚫 இந்த மோசமான நிலைமையை பயன்படுத்தி வியாபாரத்தை நடத்தி பணம் ஈட்ட நினைக்கும் கேவலமான எண்ணம். அதில் மக்களை கவர்ந்து நோய் பரவ வழிவகுத்தல்.

🚫 நோய் அச்சம் இன்றி வீட்டு சாமான்கள் வாங்கி குவிப்பதில் குறியாக இருத்தல்.

🚫இலங்கையில் பரவாது என்ற தவறான எண்ணம்.

இப்படியான செயல்கள் நிச்சயமாக உங்களுக்கு நோய் பரவ வழிவகுக்கும்.

நோய் கடுமையாக பரவினால்….

🚫 கட்டுப்படுத்த முடியாது. கண்ணுக்கு தெரியும் டெங்கு நோய் கிருமியை பரப்பும் நுளம்பையே கட்டுப்படுத்த முடியாத நாம் கண்ணுக்கு தெரியாத கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது.

🚫 கொரோனாவுக்கு மருந்தோ தடுப்பு மருந்தோ கிடையாது.

🚫 யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாசாலைகளில் கொரோனா கட்டுப்பாடின்றி பரவினால் வசதிகள் கிடையாது. வளர்ச்சியடைந்த நாடுகளிலே முடியாத ஒன்று யாழ்ப்பாணத்தில் முடியுமா?

🚫 எங்கள் மக்களுக்கு நோய் வந்தால் தனிமைப்பட்டு இருக்கும் வழக்கம் கிடையாது. தனக்கு ஏற்பட்ட நோயை இன்னொருவருக்கு பரப்புவதில் திருப்தி காணும் கேவலமான மனப்பாங்கு உடையவர்கள். நிச்சயமாக உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வந்தால் உங்களுக்கு பரவாமல் இருக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்க மாட்டார்கள்.

🚫 இந்த நோய் ஒரு கட்டத்திற்கு அப்பால் வைத்தியர்களினது கையை மீறிய ஒரு நோய். குணப்படுத்த முடியாது.

ஆகவே…

🚫 உங்கள் வீடுகளில் உள்ள வயது வந்தவர்கள் சலரோகம் , இருதய நோய், இரத்த அழுத்தம், புற்று நோய் போன்ற நோய் இருக்கும் உங்கள் அன்பிற்குரியவர்கள் உங்களுக்கு இடைஞ்சலாக இருப்பின் நீங்கள் எந்தவித தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது அவர்களை கொரோனாவால் கொல்லுங்கள்.

🚫 உங்கள் குழந்தைகள், மனைவி, சகோதரங்கள் நோயில் துடிப்பதை ரசிக்கும் மனம் உடையவர்களானால் தடுப்பு நடவடிக்கை வேண்டாம்.

🚫 நீங்கள் நீண்ட காலம் நோய் ஒன்றில் அவஸ்தைப்பட ஆசைப்பட்டால், மூச்சு எடுக்க முடியாமல் துடிதுடிப்பதை விரும்பினால், தொண்டைக்குள் குழாய் விட்டு இயந்திரம் மூலம் சுவாசிக்க ஆசைப்பட்டால் தடுப்பு நடவடிக்கை வேண்டாம்.

🚫 பல இடத்தில் இறப்புச் சடங்கு, எட்டு சாப்பாட்டு
சாப்பிட ஆசைப்பட்டால் தடுப்பு நடவடிக்கை வேண்டாம்.

🚫 ஒரு வேளை உங்களுக்கு மரணம் ஏற்பட்டால் யாரும் உங்கள் பிணத்தின் கிட்ட வராமல் நடு வீதியில் நாய்களுக்கும், காக்காய்களுக்கும், எறும்புகளுக்கும் விருந்திட்டு அனாதைப் பிணமாக ஆசைப்பட்டால் தடுப்பு நடவடிக்கை வேண்டாம்.

🚫 விழிப்புணர்வு மற்றும் சமூக அக்கறை அற்ற ஒருவர் தன்னை தானே கொரோனாவால் அழித்துக் கொண்டார் என்ற புண்ணியத்திற்காக சொர்க்கமோ…
அல்லது,
அழகான அன்பான குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களை தன் சமூக பொறுப்பற்ற நடவடிக்கைகளால் கொரோனாவால் கொலை செய்தார் என்ற குற்றத்திற்காக நரகத்தையோ சீக்கிரம் பார்க்க ஆசைப்பட்டால் தடுப்பு நடவடிக்கை வேண்டாம்.

இதுவே கசப்பான உண்மை.
மன்னிக்கவும்.
Dr. கௌதமன்.