வடக்கு – கிழக்கு தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி சமூக அரசியற் தலைவர்கள் அக்கறை செலுத்த வேண்டும்

தமிழ் இளைஞர்கள் போதைப் பொருட்களைப் பாவிக்கிறார்கள் – வாள்வெட்டு குழுக்களாக செயற்படுகிறார்கள் – அவர்கள் உடலுழைப்புக்குத் தயாராக இல்லை என பலவாறாக தமிழர் சமூக அரசியற் தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் அடிக்கடி குற்றம் சாட்டுவதைக் காண்கிறோம். மேலும் தமிழ் பட்டதாரி இளைஞர்கள் அரசாங்க உத்தியோகங்களைத் தவிர வேறெதற்கும் தயாராக இல்லை – இங்கு தனியார் துறைகளில் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருந்தும் தமிழர்கள் ஒழுங்காகவும் ஈடுபாட்டுடனும் வேலை செய்வதற்கு மிகக் குறைவானவர்களே தயாராக உள்ளனர். கட்டிடத் தொழில், மரவேலைகள், மின்சார இணைப்பு வேலைகள், உலோக வேலைகள், போன்றவற்றில் திறன் வாய்ந்த உழைப்பாளர்களை தமிழர்கள் மத்தியிலிருந்து பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது என அபிப்பிராயங்கள்; இங்கு பரவலாக உள்ளன. விவசாயக் கூலி அதிகமாக உள்ள அதேவேளை விவசாய வேலைகளுக்கான கூலித் தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது, அப்படித்தான் கிடைத்தாலும் அவர்களை முழு நேரமும் கவனிக்காவிட்டால் அவர்களிடமிருந்து உரிய அளவு வேலைகளைப் பெற முடியாதுள்ளது என விவசாயத் துறையில் உள்ளவர்கள் குறைப்பட்டுக் கொள்வதையும், உணவுக் கடைகள், பல சரக்குக் கடைகள், புடவைக் கடைகள் என பல்வேறு வர்த்தக நிலையங்களிலும் வேலை செய்வதற்கு ஊழியர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதாகவும் அப்படிக் கிடைத்தாலும் அவர்கள் சில நாட்களுக்குள்ளேயே வேலையை விட்டு ஓடி விடுகிறரகள் என வௌ;வேறு வர்த்தகர்கள் குறை சொல்வதையும் தமிழர் சமூகத்தில் அடிக்கடி கேட்கக் கூடியதாக உள்ளது.

26 ஆண்டுகால யுத்தத்தில் பல இலட்சக்கணக்கான உயிர் இழப்புக்களையும், பல்லாயிரம் கோடி ரூபாய்கள் பெறுமதியான சொத்து இழப்புக்களையும், சமூக பொருளாதார கட்டுமானங்கள் அனைத்தும் சீரழிக்கப்பட்டமையையும், ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் தேசத்தை விட்டே நிரந்தரமாக அந்நியமாகிப் போனதையும் அனுபவித்துள்ள ஒரு சமூகம் பொருளாதார ரீதியாக அழிவுகள் இழப்புகளிலிருற்து மீலெழுவதற்கும் ஏனைய சமூகங்களுக்க சமமாக தலைநிமிர்வதற்கும் மேற்குறிப்பிட்ட குறைகள், குற்றங்கள் நல்ல சகுனங்கள் அல்ல.

வடக்கு மற்றும் கிழக்கில் பல்லாயிரம் பெண்கள் தாமே உழைத்து அரை குறையாகவேனும் வருமானம் தேடி தமது குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டியவர்களாக உள்ளனர் என்று பல தரப்புகளிலும் அதன் எண்ணிக்கை பற்றி பல்வேறு தரவுகள் வெளியிடப்படுகின்றன. பல ஆயிரக் கணக்கான பட்டதாரிகள் வேலையில்லாமல் அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடுவதாகக் கூறப்படுகிறது. க.பொ.த.ப உயர்தர வகுப்பு படித்தவர்களில் கால்வாசிக்கும் குறைந்தவர்களே பல்கலைக் கழகங்களுக்கும் மற்றும் உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி நிறுவனங்களுக்கும் செல்கின்றனர். ஏனையவர்கள் தமது வருமானத்துக்கான வேலைவாய்ப்புகளை நோக்கி ஏங்கி நிற்கின்றனர். இவர்கள் தகுதிக்கும் திறனுக்கும் உரிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமையால் தவிர்க்க முடியாமல் தமது நிலைமை தமது குடும்ப நிலைமை காரணமாக ஏதோ ஒரு வேலைக்கு அதுவும் நிரந்தரமற்ற – வாரத்தில் எத்தனை நாள் வேலை கிடைக்கும் என்று கூற முடியாத வேலைகளுக்கு செல்வதாக கூறுகிறார்கள்.

வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் இளைஞர்களுக்கு குறைந்த பட்சம் அவர்கள் திருப்தியடையக் கூடிய உத்தரவாதமான வேலை வாய்ப்புகள் கிடைக்காமை என்பது தமிழர் சமூகத்தை ஆழமாக பாதிப்பதாகவே தெரிகிறது. பொருளாதார விருத்தியடைந்த நாடுகளை நோக்கி குடியேறுவதிலேயே தமிழ் இளைஞர்கள் பெரும்பாலும் விருப்பமும் அக்கறையும் கொண்டிருக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகள் இப்போது அரிதாகி விட்டன. அதேவேளை அவ்வாறான இளைஞர்களின் புலம் பெயர்வுகள் சொந்த மண்ணில் தமிழர்களின் சமூக அரசியல் இருப்புகளை பாதிப்பதுவும் கண்கூடு. ஒரு புறம் வேலையின்மை பிரச்சினை. மறுபுறம் இருக்கும் வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமை என்பது ஒரு வகையில் தமிழர் சமூக கட்டமைப்பிலுள்ள பிறழ்வுப் போக்கின் வெளிப்பாடேயாகும்.

வடக்கு கிழக்கில் தமிழர்களை அதிகமாகக் கொண்ட இரு பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இங்கு கூடிய பட்சம் 1000 தமிழ் பிரஜைகளுக்கு ஒரு தமிழ் அரசியற் தலைவரென பிரதிநிதிகள் பதவி நிலைகளிலும், பதவிகளிலில்லாவிடினும் செல்வாக்கான நிலைகளிலும் உள்ளனர் 1980களுக்கு முன்னர் இருந்ததை விட அதிக அளவில் சமயத் தலைவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க சமூகப் பிரமுகர்கள் இப்போது உள்ளார்கள், 20000 க்கு மேல் தமிழ் ஆசிரியர்கள், அரச அதிகாரத்தில் பல ஆயிரக்கணக்கில் தமிழ் அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் எல்லோருமே தமிழ் சமூகத்தின் தலைவர்கள் – பொறுப்புடைய சமூகப் பிரமுகர்களே.

தமிழ் இளைஞர்களை மேலெழுந்தவாரியாக சமூக விரோதிகளாகவும், சமூக அக்கறையற்றவர்களாகவும், தமது குடும்பங்கள் தொடர்பாக பொறுப்பற்றவர்களாகவும், ஒழுக்கக் கேடானவர்களாகவும். குற்றம் சாட்டி எதிர்மறையாக பிரபல்யப்படுத்துவது மிகவும் ஆபத்தான ஒரு விடயமாகும். தமிழ் இளைஞர்கள் ஆற்றல் அற்றவர்கள், அக்கறையற்றவர்கள் சமூகத்தின் தேவைகளுக்கு பொருத்தமற்றவர்கள் என்று கூறுவதன் மூலம் தமிழர் சமூகத்தின் தலைவர்கள் என நடமாடுவோர் தமது இயலாமையையும் சமூகத்தின் அடிப்படையான விடயங்களில் அவர்களது ஈடுபாட்டின்மையையும் மறைக்க முயல்கின்றனர் என்றே கருத வேண்டியுள்ளது. இது இரு தசாப்தங்களுக்க மேலாக உயிரைக் கொடுத்துப் போராடிய தமிழர் சமூகத்தையே அவமானப் படுத்தும் ஒரு போக்காகும். .

தமிழ் இளைஞர்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகள் பற்றி – அவர்களின் அடிப்படையான அவசியமான தேவைகள் பற்றி – அவை தொடர்பான காரணிகள் பற்றி சமூக பொருளாதார ஆய்வு பூர்வமாக ஆராய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அதற்கான தீர்வுகளை விஞ்ஞான பூர்வமாக கண்டறியும் சமூக முயற்சிகள் எதுவம் இங்கு நடைபெற்றதாகத் தெரியவில்லை. எழுந்தமானமான கலந்துரையாடல்களும், விவாதங்களும், குறைகள் கண்டு பிடித்தல்களும் குற்றங்கள் சாட்டுதலுமே இங்கு நடைபெற்றிருக்கின்றன. குடிகாரர்கள், போதை வஸ்து அடிமைகள், வாள் வெட்டுக் குழுக்கள், வேலை வெட்டியில்லாதோர் என தமிழ் இளைஞர்களுக்கு பட்டங்கள் சூட்டுதல்களும் இங்கு பொதுவாக சமூக உரையாடல்களிலும், ஊடகங்களிலும் நடைபெறுகின்றன. இது தமிழ் சமூகத்தின் முன்னேற்றகரமான வளர்ச்சிக்கு தடைகளை ஏற்படுத்தும் பாதகமான அம்சங்களேயாகும்.

எனவே தமிழ் இளைஞர்களுக்கு நல்வழிகளைக் காட்டுவதிலும், எதிர்கால முன்னேற்றங்களை நோக்கி அவர்கள் செல்வதற்கான நம்பிக்கைகளை ஏற்படுத்துவதிலும், அவர்கள் பல்வேறுபட்ட உற்பத்திசார் திறன்கள் உடையவர்களாக ஆகுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதிலும், அவர்களிடையே தாமாக சமூக பொருளாதார விடயங்களில் முன்னோக்கி செயற்படுவதற்கான தற்றுணிபுகளை வளர்த்து விடுவதிலும், அவர்களின் பொருளாதார முன்னேற்றங்களுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதிலும் தமிழ் சமூகத்தில் வெ’வ்’வேறு வகைகளில் தலைமைத்துவமான பாத்திரங்களை வகிப்பவர்கள் அனைவரும் காத்திரமாக செயற்பட வேண்டும். இவ்விடயத்தில் தமிழர் பிரதேசங்களிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், அரசியற் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், தொழில் முயற்சியாளர்கள், சமூக பொருளாதார முன்னேற்ற தன்னார்வ நிறுவனங்கள், ஊடக எழுத்தாளர்கள், கலை இலக்கிய படைப்பாளிகள் என சமூகத்தின் பொறுப்பு மிக்க பல்வேறு தரப்பினரும் அக்கறை காட்ட வேண்டும்.

தமிழ் இளைஞர்களுக்கு மொழி, இனவாத உணர்ச்சிகளை ஊட்டி அவர்களை அழிவு வேலைகளில் ஈடுபடுத்தியமையால் இலங்கைவாழ் தமிழர் சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் மிக அதிகமாகும். விடுதலை, சுதந்திரம், உரிமைகள் போன்ற அரசியல் விவகாரங்களை பதவிகளையும் வசதிகளையும் கொண்ட பெரிய மனிதர்களும் மக்கள் பிரதிநிதிகளும் பார்த்துக் கொள்ளட்டும். சமூக பொருளாதார முன்னேற்றங்களில்; இளைஞர்களை பெருமளவில் நம்பிக்கையுடன் நாட்டம் கொள்ள வைப்பது வீழ்ந்து கிடக்கும் தமிழர் சமுதாயம் சுயமரியாதையுடையதாக தலை நிமிர்வதற்கு மிகவும் அவசியமாகும்
எழுதியவர் – அ . வரதராஜ பெருமாள்