மீண்டும் கொரனாவிற்குள்…. உலகத்தின் இரண்டாவது சனத்தொகை நாடு இந்தியா


ஆனால் ஒரு கிழமையில் ஆயிரம் பேர் தங்கக் கூடிய வைத்திய சாலையை உருவாக்கி, நோய்த் தொற்று உள்ளான மகாணத்தை முழுமையாக அடங்கு நிலையிற்கும் ஏனைய பிரதேசங்களில் இருந்து துண்டித்தல் என்று முழு முச்சுடன் வைரஸ் இன் தீவிரத் தன்மையை உணர்ந்து செயற்பட்ட சீனா இன்று அந்த எண்பதினாயிரம் தொற்றாளர் என்ற எண்ணிக்கையுடன் கொரானவுடன் வாழப் பழகுதல் என்ற நிலையிற்கு தன்னை உருவாக்கிக் கொண்டது.

தொடர்ந்து தனது பொருளாதாரத்தையும் இந்த தொற்று நோய்கான கருவிகளை எந்தெந்த நாடுகள் கேட்கின்றவோ அந்த நாடுகளுக்கு விநியோகம் செய்தும் ‘நற்பெயரை” உம் தன்னில் தங்கியிருக்க வேண்டிய உலக நிலமையையும் ஏன் தனது வலுவான பொருளாதார அடித்தளத்தையும் ஆட்டம் இன்றி முன்னெடுத்துச் செல்கின்றது.
ஆனால் இந்த வைரஸ் ஐ ஆரம்ப காலத்தில் மிக அலட்சியமாக பார்த்து இது பற்றி எக்காளம் இட்ட அமெரிக்கா இன்று தொற்றில் முதல் இடத்தில் இருக்கின்றது. சீனாவிற்கு அடுத்த நிலையில் உலக சனத் தொகையை அதிகம் கொண்ட நாடு இந்தியா தொற்றை மெத்தனமாக பார்த்து இன்று அமெரிக்காவை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கின்றது. சின்ன ட்றம் என வர்ணிகப்படும் அமேசன் காடு எரிப்பை இலகுவாக எடுத்துக் கொண்ட பிரேசில் கிடு கிடுவென 2ம் நிலையிலும் உள்ளன. (ரஷ்யா பற்றி பிறிதொரு பதிவில் பார்ப்போம்).

கொரனாவின் தாக்கம் ஒரு புறம், பட்டினிச் சாவு மறு புறம், தமது பிறப்பு வீடுகளை நோக்கிய புலம் பெயர் தொழிலாளர்களின் கால் நடைத் துன்பம் இன்னொரு புறம் என்று அல்லோகல்லல்படும் இந்திய நிலமைக்கு இந்திய மத்திய அரசின் தவறான அணுகு முறையே முக்கிய காரணம்.

ஆரம்பத்தில் எல்லாவற்றையும் தானே ‘பார்த்து’க் கொள்கின்றேன் என்று மாநிலங்கள் அளவிற்கு எதனையும் செய்வதற்குரிய நிதி வளங்களையும், மருத்துவ உபகரணங்களையும் கிடைப்பதற்குரிய இறக்குமதி நாடுகளுடனான இராதந்திர செயற்பாடுகளையும் முறைப்படி செயற்படுத்தாதன் விளைவுகளை இந்தியா சந்தித்து நிற்கின்றது ஐந்தாவது ஊரடங்கு என்ற நிலயை அடைந்த பின்பும்.
இன்று கொரனா பெருக்கலுக்கு பொது மக்களே காரணம் என்று பொது மக்கள் மீது குற்றத்தை ஒப்புவித்த ஒரே நாடாக இந்தியா உலகில் திகழ்கின்றது என்றால் எவ்வளவு பொறுபற்ற தன்மையுடன் அந்த அரசு செயற்பட்டிருக்கின்றது… செயற்படுகின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

மாநிலங்களுக்கான நிதி வழங்காமை, மருத்துவ உபகரண ஆதாரங்களை போதியளவு வழங்காமை, சேகரிப்பில் உள்ள உணவுத் தானியங்களை போதுமான அளவு உரிய நேரத்தில் வழங்காமையினால் மக்களின் இடம் பெயர்வும் வீதி நடை மரணங்களும் வருமானம் இன்றிய பட்டினிச் சாவும் ஊரடங்கை மீறி தம் பிள்ளைகளுக்கு சாப்பாடு தேடும் மக்களின் ஊரடங்கை மீறிய செயற்பாடுகளும், கை தட்டல், விளக் கேற்றல், மணியடித்தல் என்ற கொண்டாட்டத்திற்குரிய பிரச்சாரங்கள் மக்கள் தமக்கிடையேயான இடைவெளிகளை சமூக பரம்பலை தடுப்பதில் தோல்விகளை சந்திப்பதற்குரிய காரணிகளாக அமைந்தன.

போதிய அரச மருத்து வசதிகள் இல்லாமை இங்கு முக்கியமான விடயமாக அமைகின்றது இந்தியாவின் மருத்துவமனைகளில் 75 விழுக்காடு தனியார் மருத்துவ மனைகளாக இருக்கின்றன. ஏனைய 25 விழுக்காடு 75 விழுக்காட்டிற்கு மேற்பட்ட தின உழைப்பு மக்கள் மருத்துவ சேவையை இலவசமாக பெறும் சூழல் அற்ற நிலையில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் அதற்கான பராமரிப்புகளை ஆரம்ப முதல் இறுதி வரை பெறமுடியாமல் உள்ளமையினால் தொற்று உள்ளவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு மேலும் தொற்றை அதிகமாக்கி கொண்டு செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பத்தி எழுதும் போது ஐந்தாம் இடத்தில் இருக்கும் இந்தியா இன்னும் இரண்டு படி நிலை மேலே எழும் அபாயமான நிலமையில் உள்ளது என்பது வருத்தத்திற்குரியதும் எச்சரிக்கப்பட வேண்டியதும் ஆகும்.

வாழ்வாதாரப் பிரச்சனையை தீர்ப்பதற்கான கொடுப்டபனவுகளை சரியாக செயற்படுத்தாமையினால் பட்டினிச் சாவுகளும் தமது பிறப்பிடங்களை நோக்கிய நடைப் பயணமும் ஊரடங்கை மீறி தொழில் தேடும் நிலமைகளும் அதிகம் உருவாகின. இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களை எதிர் கொள்ள முடியாமல் பகுதியாக ஊரடங்கை தளர்தல் என்பதில் ஆரம்பித்துள்ள இந்திய மத்திய மாநில் அரசுகளின் செயற்பாடே இன்று முதல் இடத்தை தவிர்த்து அதற்கு அருகில் செல்லும் வேகத்தில் கொரனான வீச்சாக வேகமெடுப்பதன் முக்கிய காரணியாக அமைகின்றது. கூடவே போதியளவு தொற்றுக்கான பரிசோதனை இன்மை இரண்டாவது காரணியாகின்றது.

மரணங்களின் தொகை ரஷ்யா போல் குறைவாக இருப்பதை மட்டும் காரணம் காட்டி தப்பிக் கொள்ளப் பார்க்கும் இந்தியா பொருளாதாரத்தை ஏற்கனவே இருந்த மோசமான நிலையில் இருந்து தூக்கி வைப்பதற்காக மக்களுக்கு இலவச அத்தியாவசிய உணவு, மருத்துவம் போன்றவற்றில் படு கஞ்சத்தனமாக நடக்கின்றது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறும் காரணங்கள் இந்தியாவை சரியான பாதையில் எடுத்துச் செல்லுமா என்றால் இல்லை என்பதே பதில்.

இது நோயற்றவர்கள் இருந்தால்தான் பொருளாதாரத்தை எதிர் காலத்திலாவது கட்டி எழுப்பலாம் என்பதற்கான சாவு மணியாகவே பார்க்கப்படுகின்றது. உலக வல்லரசாகும் கனவுகள் கனவுடன் நிற்காமல் நனவாக வேண்டுமாயின் முதலில் மக்களை காப்பாற்ற முயவேண்டும். அது கொரனா தொற்று நோயில் இருந்து மட்டும் அல்ல பட்டினிச் சாவில் இருந்தும்.

இன்று கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக புள்ளி விபரங்கள் மூடி மறைக்க முடியாத அளவிற்கு எகிறிய பின்பு ஆரம்பத்தில் எல்லாப் புகழும் தனக்கே(சங்கிகளுக்கே) கிடைக்க வேண்டும் என்று மாநிலங்களின் செயற்பாட்டை திட்டமிட்டு நிதி வழங்காமல் முடக்கிய மத்திய மோடி அரசு தற்போது மாநிலங்களே தொற்றிற்கான பொறுப்பை மக்களுடன் இணைந்து ஏற்க வேண்டும் என்று தப்பி ஓடும் செயற்பாட்டில் இறங்கி இருக்கின்றது.

கேரளா போன்ற மாநிலங்களின் திறமையான கொரனா தொற்று நோய் கட்டுப்பாடு செயற்பாடுகளின் அனுபவங்களை உள்வாங்கி செயற்பட முடியாத தாழ்வு மனப்பான்மை செயற்பாட்டினால் உலகின் சனத் தொகையில் இரண்டாம் நிலை நாடு தன்னைத் தானே அழித்துக் கொள்ளத் தயாராகின்றது என்பதை புள்ளி விபரங்கள் காட்டி நிற்கின்றன.

இந்திய மக்களின் மீட்சிக்காகவும் நாம் உலக மக்கள் குரல் கொடுத்தே ஆக வேண்டும்.