அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர் குத்தேரஸ் வேண்டுகோள்

சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பொறுமை காக்க ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்தார். சிரியாவில் ரஷ்ய ராணுவம் முகாமிட்டிருப்பதால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி போரில் ஈடுபடும் அபாயம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறும்போது, ‘‘சிரியா விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமித்த கருத்து ஏற்படாதது கவலையளிக்கிறது. நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் சிரியா பிரச்சினையில் சுமூக உடன்பாட்டை எட்ட வேண்டும். இந்தப் பிரச்சினை வரம்பை தாண்டிவிடக்கூடாது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளும் பொறுமை காக்க வேண்டும். கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு சிரியாவில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.