கிழக்கில் கொரோனா; மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

அம்பாறை – அக்கரைப்பற்று பிரதேசம் தற்போது சிவப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த பிரதேசங்களிலுள்ள மக்களின் தனிமைப்படுத்தல் சட்டத்தை இன்னும் சில தினங்களுக்கு இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம் என அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலையை அடுத்து, அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்படப்பட்டுள்ளதாவது, “அக்கரைப்பற்றில் கொரோனா வைரஸ் தொற்று அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு முடியுமானவரை பொதுமக்கள் அனைவரும் தத்தமது வீடுகளிலேயே தங்கி இருக்க கேட்கப்படுகின்றீர்கள்.

“வியாபார நிலையங்கள், விவசாய நிலங்களுக்கு செல்லுதல், வீதிகளில் நடமாடுதல் என்பவற்றை முற்றிலுமாக எமது மக்களின் நலனுக்காக சில தினங்கள் தவிர்ந்து இருந்து, சுகாதரத் துறையினர் மற்றும் பொலிஸ், இரானுவத்தினருக்கும், அரச திணைக்கள அதிகாரிகாரிகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று வினயமாக கேட்கின்றேன்.

“தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தபட இருப்பதால் வீணான அசௌகரிகத்தை தவிருங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு – ஏறாவூர் நகரில் 874 பேரிடமிருந்து நேற்று (28) பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷாபிறா வஸீம் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் மேல் மாகாண கொரோனா வைரஸ் தொற்று கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மீன் வியாபாரிகள், வாகன சாரதிகள் உள்ளிட்ட தொற்றுக்கு உள்ளாகக் கூடிய சாத்தியப்பாடான பிரிவினரை இலக்கு வைத்தே மேற்படி பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து , கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளனர் என, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 தொற்றாளர்களும், அம்பாறை மாவட்டத்தில் 74 தொற்றாளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 16 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.