ஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு–நாளை இறுதி தீர்ப்பு

2005ஆம் ஆண்டு மகிந்தவின் ஆட்சிகாலத்தில் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டவேளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு வடக்கு/கிழக்கு என்று இரண்டாக பிளவு பட்டு பரஸ்பர சகோதரப்படுகொலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இக்காலத்தில் மட்டும் கிழக்குமாகாணத்தில் பலநூறு கொலைகள் நடந்தன.

இச்சந்தர்ப்பத்தில்தான் மானிப்பாயை சேர்ந்தவரும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமாகவிருந்த ஜோசேப் பரராஜசிங்கம் இனம்தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். அவரைப்போன்று சகபாராளுமன்றஉறுப்பினர் கிங்ஸிலி இராசநாயகமும்,சக வேட்பாளரான இராஜன் சத்தியமூர்த்தியும் அதே சமகாலப்பகுதியில் கொல்லப்பட்டனர்.

இதில் ஜோசேப் பரராசசிங்கம் கொல்லப்பட்டபோது ‘மாமனிதர்’ என்று அவருக்கு வடக்கு புலிகள் புகழாரம் சூட்டினர். அதேவேளை அவரை கிழக்கு புலிகளே கொன்றார்கள் என்றும் குற்றம் சாட்டினர். ஆனால் ராஜன் சத்திய மூர்த்தியும் கிங்ஸிலி ராஜநாயகமும் கொல்லப்படவேண்டியவர்கள் துரோகிகள் என்று பிரச்சாரம் செய்து அக்கொலைகளுக்கு உரிமைகோரினர் பிரபாகரன் தலைமையிலான வடக்கு புலிகள்.

இந்நிலையில்தான் அவ்வேளைகளில் கிழக்கு புலிகளின் அணியில் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த பிள்ளையானின் தலைமையில்தான் ஜோசேப் பரராஜசிங்கத்தின் கொலை நடாத்தப்பட்டதாக புலிகளது ஊடகங்கள் செய்திகளை பரப்பின. சர்வதேச தமிழர்களிடையே வியாபித்திருந்த ஆயிரக்கணக்கான புலிகளது பினாமி இணையத்தளங்கள் நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் மற்றும் வானொலிகள் தொலைக்காட்சிகள் போன்றவை ஊடாக இச்செய்தி மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டது.

பத்து வருடங்களுக்கு மேலாக ஒரு செய்தியானது பல்லாயிரம் தடவைகளில் மீள மீள மக்கள் மனதின் பதியப்பட்டதனுடாக ‘ஜோசேப் பரராசசிங்கத்தை பிள்ளையானே கொன்றார்.’ என்கின்ற பரப்புரை தமிழர்களின் பொது மன உளவியலில் ஆழமாக பதியப்பட்டது..

மறுபுறம் பிள்ளையான் புலிகளிலிருந்து பிரிந்த கிழக்கு புலிகளை அடிப்படையாக வைத்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்கின்ற புதிய கட்சியை தொடங்கி அதனுடாக 2008ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலூடாக கிழக்குமாகாண முதலமைச்சராக தெரிவானார். 2014ஆம் ஆண்டுவரை அவர் ஆட்சியிலிருந்தார். அதனுடாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சவாலான ஒரு அரசியல் தலைமையாக வளர்ந்துநின்றார்.

இந்நிலையில்தான் 2015ஆம் ஆண்டு இலங்கையில் மகிந்த பதவியிழந்து மைத்திரி தலைமையிலான புதிய ஆட்சி ‘நல்லாட்சி’ உருவானது. கடந்தகால யுத்தக்குற்றங்கள் எல்லாம் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய புதிய ஆட்சியை உருவாக்குவதில் உறுதுணை வகித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பின்புலத்தில் ஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு தொடுக்கப்பட்டது.

ஆனால் அதே கட்சியை சேர்ந்தவர்களாயிருந்து அதே காலப்பகுதியில் கொல்லப்பட்ட கிங்ஸிலி இராஜநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றவர்களுக்கு யாருமே நீதி கோர முன்வரவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களமே பிள்ளையானுக்கெதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. அதனடிப்படையில் 2005ஆம் ஆண்டு பிள்ளையான் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பிரதீப் மாஸ்டர் என்பவர் குற்ற புலனாய்வு துறையினருக்கு வழங்கியதாக சொல்லப்பட்ட வாக்குமூலம் ஒன்றையே அடிப்படையாக கொண்டே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதேவேளை சந்தேக நபர்கள் நீதி மன்றத்தில் ஆஜர் ஆக்கப்பட்ட போது தனது பெயரில் குற்றப்புலனாய்வு தரப்பினர் சமர்ப்பித்த வாக்குமூலமானது தனது சொந்த விருப்பத்தின் பெயரில் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று பிரதீப் மாஸ்டர் அந்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் மறுதலித்திருந்தார். இலங்கை புலனாய்வு துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த பல்லாயிரம் இளைஞர்களுக்கும் நடந்ததுதான். எனவே பிரதீப் மாஸ்டரின் வாக்குமூலத்தை குறித்தவழக்கில் ஆதாரமாக கொள்ளலாமா இல்லையா என்பதையிட்டு கடந்த ஒருவருடமாக வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. இறுதியில் அந்தவாக்குமூலமானது கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டது. அதனடிப்படையில் பிள்ளையானுக்கு மட்டக்களப்பு நீதி மன்றம் கடந்தமாதம் பிணை வழங்கியுள்ளது. அந்த வேளையில் இந்த வழக்கில் பிள்ளையானுக்கு பிணை வழங்கப்படக்கூடாது என்று சுமந்திரன் தாமாகவே முன்வந்து வாதாடியமை பிள்ளையானின் கைதானது தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அரசியல் பழிவாங்கலே என்கின்ற குற்றச்சாட்டை மேலும் உறுதி செய்தது.

ஜோசேப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் அடிப்படை ஆதாரமாக கொள்ளப்பட்ட பிரதீப் மாஸ்டர் என்கின்ற சந்தேகநபர் வழங்கிய வாக்கு மூலம் ஒன்றை தவிர வேறு தடயங்களையோ ஆதாரங்களையோ,மனித சாட்சியங்களையோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த ஐந்து ஆண்டுகால அவகாசத்தில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கமுடியவில்லை. இந்நிலையில் நேற்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் இவ்வழக்கை தொடர்ந்து கொண்டு நடத்துவதற்கு எவ்வித ஆதாரங்களும் தம்மிடம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி கால அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சட்டமா அதிபரும் குறித்த சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட அரச தரப்பு சட்டத்தரணியுமே இவ்வழக்கை தொடர்ந்து நடாத்த தம்மிடம் வேறெந்த ஆதாரங்களும் இல்லை என்று கைவிரித்துள்ளனர்.

எனவே இவ்வழக்கின் இறுதி தீர்ப்பானது நாளை புதன்கிழமை வழங்கப்படவுள்ளது.

மீன்பாடும் தேனாடான்