தமிழர்களின் பிரச்சினை தீர வேண்டுமென்பதில் கூட்டமைப்புக்கு அக்கறையே இல்லை: முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கடும் சாடல்

யாழ்ப்பாணம் சர்வதேச மாக்சியக் குழுவின் ஏற்பாட்டில் “சமகால அரசியல் நெருக்கடி மீள்வதற்கான சந்தர்ப்பங்களும் சவால்களும்” எனும் தொனிப் பொருளிலான அரசியல் கலந்துரையாடல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(07) பிற்பகல் யாழ். பலாலி வீதி இலுப்பையடிச் சந்தியில் அமைந்துள்ள டிஎம்ஐ தொழில்நுட்பப் பிரிவு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

19 ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரப் பகிர்வு உள்ளடக்கப்படாதாது ஏன்? ரணிலுக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பான எந்தவொரு அக்கறையுமில்லை என்பது இதன்மூலம் தெளிவாகின்றது. எனவே, பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் ரணிலுக்கான திருத்தமே அன்றி வேறில்லை.

புதிய அரசியல் யாப்புத் திருத்தம் என்பது சாதாரணமானதொரு விடயமல்ல. அது பாரியதொரு செயற்பாடு. புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் ஒரு புறம் இடம்பெறட்டும். மாகாண சபையை வலுவாகச் செயற்பட வைக்கின்றதொரு திருத்தத்துக்கான முயற்சிகளைப் புதிய அரசியல் யாப்பு நடைமுறைக்கு வரும் வரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுத்தியிருக்கலாம். 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மாற்றாக இவ்வாறானதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்வதற்கு கூட்டமைப்புத் தவறிவிட்டது.

இலங்கையின் எதிர்கால அரசியலிலும் பெரும் மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை. இதே அரசாங்க இயந்திரம் தான் தொடர்ந்தும் நீடிக்கப் போகிறது. மாகாண சபையை கடந்த முறை ஆளுகை செய்தவர்கள் போன்று தான் மீண்டும் மாகாண சபையை ஆளுகை செய்யப் போகிறார்கள். நாடாளுமன்றத்தில் தற்போது அங்கம் வகிப்பவர்கள் போன்றவர்கள் தான் மீண்டும் நாடாளுமன்றம் செல்லப் போகிறார்கள். அவ்வாறெனில் அரசியல் மாற்றம் நிகழ்வது எங்ஙனம்?

தமிழ்மக்களாகிய எங்களிலும் தவறிருக்கிறது? இந்த விடயத்தில் எங்களை நாங்களே விமர்சிக்க வேண்டியுமிருக்கிறது.நாங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மாற்ற நினைக்கின்றோம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்கள் மத்தியில் காணப்படுகின்றதொரு அருவமான மாபெரும் சக்தி. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கெதிராக கதைப்பவர்கள் பலரும் தேர்தலென்று வரும் போது கூட்டமைப்புக்கே வாக்களிக்கின்றதொரு மனநிலை காணப்படுகிறது.

நான் மாற்றுக் கட்சி தொடர்பில் எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. இந்தளவு மனோ நிலையைத் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து மாற்றக் கூடிய எழுச்சியூட்டலை ஏற்படுத்துகின்ற, மாற்றமான உணர்வை ஏற்படுத்தும் மாற்று இயக்கம் எங்களிடமிருக்கிறதா? என்றே கேட்க விரும்புகிறேன். இவ்வாறான பெரு மாற்று இயக்கம் உருவாகுவதன் மூலமே மாற்றமொன்றை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் சர்வதேச மார்க்சியக் குழுவின் அமைப்பாளரும், அரசியல் விமர்சகருமான சொ. சிவபாலன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடல் நிகழ்வில் இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சருடன் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன்(சுகு), ஓய்வுநிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி. முத்துலிங்கம் எனப் பலரும் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.