நாளை முதல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மிர்

ஜம்மு காஷ்மிர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பின் 370ஆவது பிரிவு இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி இரத்துச் செய்யப்பட்டது. தொடர்ந்து மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசாங்கம் பிரித்து உத்தரவிட்டது.

அந்தவகையில், ஜம்மு காஷ்மிர் மாநிலம் நாளை முதல் ஜம்மு காஷ்மிர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறும். அதன் தலைநகரங்கள் ஸ்ரீநகர் மற்றும் லேவில் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு துணை ஆளுநர்கள் பதவியேற்பு மூலம் இந்த செயல்முறை தொடங்கும் என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

ஜம்மு காஷ்மிரின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் முதலில் ஸ்ரீநகரில் ஜி சி முர்முவுக்கு துணை ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். தொடர்ந்து லேவில் ராதா கிருஷ்ணா மஹூருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

நாடாளுமன்றம் இவ்வாண்டு ஓகஸ்ட் ஆறாம் திகதி நிறைவேற்றிய ஜம்மு காஷ்மிர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், ஜம்மு காஷ்மிர் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 107 இலிருந்து 114 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை கிடையாது. துணை ஆளுநர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படும்.

ஜம்மு-காஷ்மிர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 இன் கீழ் ஆட்சி செய்வதற்கான விதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.