’மின்சார வாகன சார்ஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதால் எவருக்கும் பாதிப்பில்லை’

தற்போது இந்த முழு உலகமும், பசுமைப் புரட்சியை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வது தொடர்பில், அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறான வாகனங்களின் உருவாக்கத்துடன், அவ்வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கான நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறாக சார்ஜ் நிலையங்களை, ஒழுங்கமைப்பது தொடர்பில், தற்போது இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இந்த ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில், சுமார் 5,500 மின்சார வாகனங்கள் பாவனையில் உள்ளன. அவற்றில் 4,500 வாகனங்கள், கார்களாகக் காணப்படுகின்றன. 1,000 மோட்டார் சைக்கிள்கள் காணப்படுகின்றன. இவ்வாகனங்களுக்காக இலங்கையில், 47 சார்ஜ் நிலையங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக, 10 ஓட்டல்களில் இந்த சார்ஜ் சேவை காணப்படுகின்றது. இவை தவிர, மேலும் 10 இடங்களிலும், இந்த சார்ஜ் வசதிகள் காணப்படுகின்றன.

 

இருப்பினும், மின்சார வாகனங்களின் எண்ணிக்கையும் அவற்றுக்கான சார்ஜ் நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால், இவை தொடர்பான பிரிதொரு சந்தையே உருவாகியுள்ளது. அவற்றுக்கு ஏற்ற கட்டணக் கட்டுப்பாடு, நுகர்வோர் பாதுகாப்பைப் பேணல், தொழில்நுட்ப ரீதியில் தரத்தைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. ஆதன் பிரகாரம், வாகனப் பயனாளர்களைப் போன்றே, மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்யும் நிலையங்களை நடத்தி வருபவர்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ஜ் நிலையங்கள் என்ற ரீதியில் பார்த்தாலும் மின்சாரப் பாவனையாளர்கள் என்று பார்த்தாலும், அனைவரும் எதிர்நோக்கும ஒரே பிரச்சினை, மின்சாரத் தடையாகும். நிலையங்களில் காணப்படும் சார்ஜ் இயந்திரங்களின் திரையில், எத்தனை வோட்டளவு மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் காணப்படுகின்றன. இருப்பினும், சில நுகர்வோருக்கு, இது தொடர்பில் நம்பிக்கை இல்லை. அதனால், சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னரான வோட்டளவைக் காட்டும் வாசிப்பொன்று, சார்ஜ் நிலையங்களில் காணப்பட வேண்டும் என்று, நுகர்வோர் எதிர்ப்பார்க்கின்றனர்.

 

சார்ஜ் நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பிலும், அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லீஃப் ரக வாகனம், ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லீப் ரக கார்களில், 20 அம்பியர் ரக செருக்கிகளே காணப்படுகின்றன. இதற்குப் பொறுத்தமான செருக்கியொன்றின் விலை, சந்தையில் 10,000 ரூபாய்க்கும் அதிகமாகவே விற்பனைக்கு உள்ளது. இதன் விலை அதிகம் என்பதால், தரம் குறைந்த செருக்கிகளைக் கொள்வனவு செய்வதில், பாவனையாளர்கள் அக்கறை செலுத்துகின்றனர். இது, மிகவும் அபாயகரமான நிலைமையாகும். வாகனமொன்று, தொடர்ந்து சுமார் 10 மணித்தியாலங்கள் சார்ஜ் செய்யப்படும் போது, இந்த தரம் குறைந்த செருக்கிகள் சூடாகி, உருகிப்போய்விட வாய்ப்புள்ளது. இதனால், வீடுகளில் சார்ஜ் செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுவது அவசியமாகும்.