முட்டை கோழி பண்ணையாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு தர வேண்டும்!

 

அம்பாறை மாவட்ட கோழி வளர்ப்போர் சம்மேளன தலைவர் சுஹீட் உருக்கம்

முட்டை கோழி பண்ணையாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க எதிர்வரும் வரவு – செலவு திட்டம் மூலமாகவேனும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட கோழி வளர்ப்போர் சம்மேளன தலைவர் ஏ. சி. எம். சுஹீட் கோரி உள்ளார்.

குறிப்பாக முட்டை கோழி தீனிகளின் விலைகளை குறைக்கவும், முட்டை கோழி பண்ணையாளர்களுக்கு மானியங்களை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

இவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் முட்டை கோழி பண்ணையாளர்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்துக்காக இத்தொழிலை செய்கின்றபோதிலும் நிறை உணவான முட்டையை நாட்டு மக்களுக்கு கிடைக்க செய்வதன் மூலம் மகத்தான சேவையை புரிகின்றார்கள், ஆனால் இக்காலத்தில் முட்டை கோழி தீனிகளின் விலை ஏறி கொண்டே செல்கின்றது. மறுபுறம் முட்டைகளை இவர்கள் நியாயமான விலைக்கு விற்க முடிவதே இல்லை, ஏனென்றால் மொத்த கொள்வனவாளர்களும், கடைக்காரர்களும் மிக குறைந்த விலைக்கே இவர்களுடைய முட்டைகளை வாங்க முற்படுகின்றார்கள், அதாவது மொத்த கொள்வனவாளர்களும், கடைக்காரர்களும் சுமார் 11. 50 ரூபாய்க்கு நுகர்வோருக்கு விற்கின்றபோதிலும் அதிக பட்சம் 8.00 ரூபாய் கொடுத்தே முட்டைகளை கொள்வனவு செய்கின்றனர், எனவே உற்பத்திச் செலவு மிக அதிகமாக உள்ள நிலையில் முட்டை கோழி பண்ணையாளர்கள் பாரிய நஷ்டங்களை சந்திக்க நேர்கின்றது, தினமும் 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை நஷ்டப்பட்டு கொண்டே முட்டை கோழி வளர்ப்பை மேற்கொள்ள வேண்டி உள்ளது, இதே நேரம் இவர்கள் இத்தொழிலை செய்வதற்காக வங்கிகளில் இருந்து கடன்களை பெற்று அவற்றை மீள செலுத்த முடியாமல் மனம் உடைந்து காணப்படுகின்றனர், இவர்கள் விரக்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடிய பேராபத்தும் கண் முன் தெரிகின்றது, எனவே இவர்கள் விடயத்தில் அரசாங்கம் அவசியம் விசேட கவனம் எடுக்க வேண்டும் என்பதுடன் இவர்கள் பெற்று கொண்ட வங்கி கடன்களை ரத்து செய்து கொடுப்பது பேருதவியாக அமையும். கடந்த காலங்களில் ஆழி பேரலை அனர்த்தம் அடங்கலாக ஏனைய அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வடக்கு, கிழக்கு மாகாணத்தை சேராத கோழி பண்ணையாளர்கள் ஆகியோருக்கு இவ்விதம் வங்கி கடன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளபோதிலும் இந்நன்மைகள் வடக்கு, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கோழி பண்ணையாளர்களுக்கு கிடைக்க பெறவே இல்லை, மேலும் அனர்த்தங்களில் பாதிக்கப்படுகின்ற விவசாயிகளுக்கு அரசாங்கம் நஷ்டஈடுகள் வழங்குகின்றது, இருப்பினும் கோழி பண்ணையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குகின்ற முறையான கொள்கை திட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டிராமல் இருப்பது கவலைக்கு உரிய விடயம் ஆகும், மேலும் கடந்த கால 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதார எழுச்சிக்காக விசேட செயல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகவும், பொறுப்பாகவும் உள்ளது, இதே நேரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு போதுமான முட்டை கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது, எனவே வேறு மாகாணங்களில் இருந்து கிழக்கு மாகாணத்துக்கு முட்டைகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டிய தேவை உண்மையில் கிடையாது, கிழக்கு மாகாண முட்டை கோழி பண்ணையாளர்களுடன் ஒப்பிடுகின்றபோது குருணாகல், குளியாபிட்டி ஆகிய இடங்களை சேர்ந்த முட்டை கோழி பண்ணையாளர்கள் பிரமாண்ட தொழிலதிபர்கள் ஆவர், இந்நிலையில் கிழக்கு மாகாணத்துக்கு வேறு மாகாணங்களில் இருந்து கோழி முட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், எமது சங்கம் வெகுவிரைவில் அமைச்சர்கள் அடங்கலாக அரசாங்க முக்கியஸ்தர்களை சந்தித்தும் எமது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளது, அம்பாறை மாவட்டத்தில் 2000 பேர் வரை முட்டை கோழி வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளனர் என்றார்.