ரணிலின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு போராட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோது, வைத்தியசாலை சுற்று வட்டத்தில் பொலிஸார் தடையை ஏற்படுத்தியமையால் ஏ9 வீதி சிறிது நேரம் முடங்கியது.

இன்றுடன் 907ஆவது நாள்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்களால், இன்று வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது போராட்ட களத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நீதிமன்ற வீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தைச் சென்றடைந்ததும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார், கலகம் தடுப்பு பொலிஸார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளதுடன், பஸ்ஸை குறுக்கேவிட்டு வீதியையும் தடை செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என். பி வெலிகள போராட்டம் மேற்கொண்ட உறவுகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

சுமார் 30 நிமிடத்தின் பின்னர் காணாமல் போன உறவுகளின் போராட்ட களத்திற்கு பிரதமரை அழைத்து வருவதாக, பொலிஸார் வாக்குறுதி வழங்கியதையடுத்து, காணாமல்போன உறவுகள் தமது போராட்ட களத்துக்குத் திரும்பியுள்ளனர்.

கூட்டமைப்பினரே வெளியேறு, எங்கே எங்கே எமது பிள்ளைகள் எங்கே என்ற கோசத்துடன் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இன்று மாலை 3 மணியளவில் வன்னி விமானப் படைத்தளத்துக்கு சொப்பர் விமானத்தில் அமைச்சர்களின் சகிதம் வந்திறங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாக போராட்ட களத்துக்குச் செல்லும் பிரதான கண்டி வீதி வழியாகச் தனது பயணத்தை மேற்கொள்ளாமல் வவுனியா மணிக்கூட்டுக்கோபுரம் ஊடாக பஜார் வீதி வழியாக இலுப்பையடி சென்று வைத்தியசாலையினை சென்றடைந்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாகவே, பிரதமர் பிரதான வீதியைப் பயன்படுத்தாமல் பல வீதிகளை சுற்றி நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.