வவுணதீவு சம்பவத்தைக் கண்டித்து அம்பாறையில் ஆர்ப்பாட்டங்கள்

மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவர், சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டங்கள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன. திருக்கோவில் ஆர்ப்பாட்டம், திருக்கோவில் பிரதேச சமாதானத்தை விரும்பும் மக்கள் வணிகம் எனும் அமைப்பாலும், அக்கரைப்பற்று ஆர்ப்பாட்டம், மக்கள் ஒருங்கிணைப்புக் குழுவாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

திருக்கோவிலில், திருகோவில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டதுடன், இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தம்பிலுவில் வரை பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருந்தவர்கள், “சமாதான சூழலை சீர்குலைக்காதே”, “படுகொலைகள் வேண்டாம்”, “பொலிஸாரின் படுகொலையை கண்டிக்கின்றோம்” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, அக்கரைப்பற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், அக்கரைப்பற்று சந்தைக் கட்டடத்தொகுதிக்கு முன்பாக நடத்தப்பட்டது.

இவ்வார்ப்பாடத்தில் கலந்துகொண்டிருந்த, கிழக்கு மாகாண விவசாயத்துறை முன்னால் அமைச்சர் ரீ.நவரெத்தினராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

“வவுணதீவில் பொலிஸாருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்துடன், இந்த நாட்டிலே குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்ந்து வரும் மக்கள் மீது மீண்டும் ஒரு சந்தேகத்தையும், சீர்குலைவை இது ஏற்படத்தியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்” என்றார்.

“சமாதான சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான ஈனச்செயலானது மிகவும் கோழைத்தனமானதும், இது அமைதியை விரும்பாதவர்களினதும் செயலாக இருப்பதுடன் இதனை அனைவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.