20ஆவது திருத்தம்; ‘பேசி தீர்மானிக்கலாம்’

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் இந்த திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், 20ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்ட மூலதில் இருந்து பின்வாங்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜனநாயக ரீதியிலும், வெளிப்படைத் தன்மையுடனும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

20 ஆவது அரசியல் யாப்பு திருத்த சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் திகதி அடுத்து நடைபெறவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“குழுவின் அறிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த குழு பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் பிரச்சினைகள் பல இருக்கக்கூடும். அரசியல் சம்பந்தமான விடயங்கள் இருக்குமாயின் அது குறித்தும் கலந்துரையாடப்படும். திருத்தம் தொடர்பில் நாம் பின்வாங்கப்போவதில்லை” என்றார்.

அத்துடன், அமைச்சர் ரமேஸ் பத்திரண கருத்து வெளியிடுகையில் “அமைச்சரவைக்கு இது தொடர்பில் கால அவகாசம் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றைக் கருத்தில் கொண்டு அவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. இதனைத் தயாரிப்பதற்கு முன்னிற்கு செயற்பட்டவர் ஜனாதிபதி. இருப்பினும் இது தொடர்பில் முழுமையான பொறுப்புடன் செயற்படுவது அமைச்சரவையாகும்” என்றார்.