அகதிகளுக்கு எதிரான அவுஸ்திரேலிய வலதுசாரிகளின் கூப்பாடு

அதாவது, “எக்காரணம் கொண்டும் படகில் ஏறி சட்டவிரோதமாக எங்களது நாட்டுக்குள் நுழைய முயற்சிக்காதீர்கள். you are not welcomed. ஆட்கடத்தற்காரர்கள் உங்களை ஏமாற்ற நினைப்பார்கள். ஏமாந்துபோகாதீர்கள்” – என்று தமிழ் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதில் ஆஸ்திரேலிய அரசு மிகுந்த அக்கறையோடு விளம்பரங்களை செய்துவருகிறது. இது இன்று நேற்றல்ல, கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவருகிறது. மறுபுறுத்தில், “அகதிகளால் ஆஸ்திரேலியா அழுக்கடைகிறது” – என்று நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போதெல்லாம் கூப்பாடு போட்டுவருகின்றன ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரிக்கோஷ்டிகள். அது வேறு.

கடந்த ஓகஸ்ட் மாதம் முதல், ஆஸ்திரேலியாவில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எங்கெங்கோ எல்லாம் எரியத்தொடங்கி நான்கு மாதங்களில் இன்று காலுக்கு கீழே வந்து எரிந்துகொண்டிருக்கிறது கட்டுக்கடங்காத காட்டுத்தீ. ஆஸ்திரேலியாவின் அத்தனை மாநிலங்களும் அச்சத்தில் அலறிக்கொண்டிருக்கின்றன. எரிந்த காட்டுத்தீயினால் நாடெங்கும் புழுதிப்புகார். நியூஸிலாந்துவரை இந்தப்புகை போயிருப்பதாக செய்திகளில் காட்டுகிறார்கள். பல கோடி காட்டு உயிரினங்கள் எரிந்து இறந்துவிட்டன. பல்லாயிரக்கணக்காக ஹெக்டேயர் பரப்பளவு நிலங்கள் கருகி நாசமகிவிட்டன. பல நூறுக்கணக்கான வீடுகள் புகை கக்கி இறந்துவிட்டன. புறநகர் பகுதி மக்கள் சாரி சாரியாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

நியூசவூத் வேல்ஸ் மாநிலத்தை சங்காரம் செய்துமுடித்த கொடுந்தீ இப்போது விக்டோரியாவின் புறநகர் பகுதியில் ஊழித்தாண்டவம் ஆடத்தொடங்கியிருக்கிறது. மாநிலத்தின் தென் கிழக்கு பகுதியில் சுற்றுலாவுக்கு போனவர்கள், திரும்ப வழியில்லாமல் அங்கேயே மாட்டியுள்ளார்கள். அனர்த்த நிலையை (state of disaster) அறிவித்துள்ள மாநிலத்தின் ஆளுனர், கடல் வழியாக சென்று அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்டுவர கப்பல் அனுப்பியிருக்கிறார். ஊர் மக்கள், உல்லாசம் செய்யப்போனவர்கள் எல்லோரும் கடல் வழியாக மீட்கப்படுவார்கள் என்று அவசர சேவைக்கு அழைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கடற்படையினர் கூறியுள்ளார்கள்.

இந்த அனர்த்தம் ஆரம்பகட்டத்தில் இருந்தபோது – அதாவது நியூ சவுத் வேல்ஸில் காட்டுத்தீ எரிந்துகொண்டிருந்தபோது – அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாது, ஹவாய் தீவிற்கு தனது குடும்பத்தோடு உல்லாச சுற்றுலா போன பிரதமர் ஸ்கொட் மொறிஸன் காற்சட்டையோடு கையில் கிளாஸை வைத்துக்கொண்டு படம் எடுத்துப்போட்டதுதான் 2019 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கோமாளித்தனம் எனலாம். “அட, கன்பரா கழிசடையே – நாடே எரிந்துகொண்டிருக்குது, உனக்கு இந்த நேரத்தில்தான் சுற்றுலா கேட்குதா” – என்று ஊடகங்களின் புண்ணியத்தில் ஒட்டுமொத்த நாடும் ஒரு கணம் பொரிந்து தள்ள, கையில் வைத்திருந்த கிளாஸை கீழே வைக்காமலேயே அடுத்த நாள் ஓடிவந்து ஊடகவியலாளர் மாநாட்டைக்கூட்டி மன்னிப்பு கேட்டார் மொறிஸன்.

அதற்கு பிறகு, காட்டுத்தீயால் எரிந்த ஊர்களை தேடி தேடிப்போய் கை தட்டி கூப்பிட்டு கூப்பிட்டு சனங்களோடு பேசினார். விட்டால், கங்காருகளுக்கும் கை கொடுத்து மன்னிப்பு கேட்டிருப்பார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களோ – “கனடா, நியூஸிலாந்து நாடுகளிலிருந்தெல்லாம் தன்னார்வத்தொண்டர்கள் வந்து இங்கு நெருப்பை அணைத்துக்கொண்டிருக்க, எங்க துரை மாத்திரம் எங்க போனீங்களாம்” – என்று கேட்காத குறையாக ஏளனமாக பார்த்தார்கள்.

கண்கள் கலங்க – கன்னம் சிவக்க – அவரும் இயலுமானவரைக்கும் குனிந்து நின்று தானொரு பொறுப்புள்ள பிரதமர் என்று காட்டுவதற்கு முயற்சித்துப்பார்க்கிறார். ஆனால், அவரது மெய்ப்பாதுகாவலர்களை தவிர, வேறு எவருமே அவரை கணக்கெடுப்பதாக தெரியவில்லை.

ஒரு சில தினங்களுக்கு முன்னர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத்தீயினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு இடத்துக்கு ஆறுதல் சொல்லப்போனார் பிரதமர் ஸ்கொட் மொறிஸன். சாம்பல் மணம் போகாமல் இன்னமும் அந்த வெக்கையிலேயே வெந்துகொண்டிருந்தவர்களுக்கு, இவரை பார்த்ததும் திரும்பவும் நெருப்பை பார்த்தது போலாகிவிட்டது. “என்ன இழவுக்கு இங்க வந்தீர்கள் பிரதமரே” – என்று தொடங்கி, பேயா, மடையா என்றும் பச்சைத்தூஷணத்தாலும் திட்டி கலைத்துவிட்டிருக்கிறார்கள். தலையை குனிந்துகொண்டு வாகனத்தில் ஏறி வந்துவிட்டார் மொறிஸன்.

அதிலும் அங்கு நின்று மொறிஸனுக்கு எதிராக கத்தியவர்களில் ஒருவன் மிகத்தெளிவாக – உரத்து – சொன்னான்.

“you are not welcome here”

எங்கயோ கேட்ட மாதிரி இருக்கல்ல?