அடக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எதிர்கொள்ளும் கோட்பாட்டுச் சவால்கள்

(இளையதம்பி தம்பையா)
(இணை அழைப்பாளர் இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்)

(இக்கட்டுரை 2014.60.2014 அன்று ‘தந்தையின் தடங்கள்’ என்ற மகுடத்தின் கீழ் வெளியிடப்பட்ட அமரர் மாணிக்கம் திருநாவுக்கரசு அவர்களின் நினைவு மலரில் வெளிவந்ததாகும். இச் சிறிய கட்டுரையானது குறிப்பாக இடதுசாரிகள் என்று சொல்லப்படுபவர்கள் சுயநிர்ணய உரிமையை நேரடியாகவும் மறைமுகமாகவும் மறுதளிக்கும் போக்குகளை அம்பலப்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதாகும். இன்று இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு மாற்றம் பற்றிய முன்னெடுப்புகளின் போது சுயநிர்ணய உரிமை என்ற சொல் தீண்டதகாததாக மாற்றப்பட்டுள்ளது. பழைய, புதிய பாராளுமன்ற இடதுசார்கள் மட்டுமன்றி தமிழ்த்தேசிய வாதிகளும் பெருந்தேசியவாதத்திற்கு அடிபணிந்து சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காலப் பொருத்தம் கருதி இக்கட்டுரையை உங்களுடன் பகிர்கின்றோம்.)

அடக்கு முறைக்குள்ளாகிய தேசிய இனங்களாக பொதுவாக அடையாளம் காணப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் தேசிய இனங்களா என்றும் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருகிறதா என்றும், சுயநிர்ணய உரிமையின் பிரயோகம் தொடர்பாகவும் நேரிடையாகவும் எதிரிடையாகவும் பல கருத்துக்கள் இருந்து வந்துள்ளன. அவை பற்றி புனையப்பட்டு கட்டவீழ்த்து விடயப்பட்டுள்ள கோட்பாடுகள் பல தேசிய இனங்களின், குறிப்பாக தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு சவாவாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தேசிய இனங்களா?
தேசிய இனப்பிரச்சினை என்றும் எதுவும் கிடையாது என்று சொல்லும் பேரினவாதிகள் இருப்பதுடன் அவர்களின் கருத்துடன் ஒத்துபோகக்கூடியவாறு அதே கருத்தையே முன்வைக்கும் இடதுசாரி எனப்படுபவர்களும் இருகின்றார்கள். இதற்கு ஆதாரமாக இலங்கையே இன்னும் தேசமாக வளரவில்லையென்றும் அவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் எவ்வாறு தேசிய இனமாக முடியும் என்றும் வினவுகின்றனர்.

சிலர் சிங்கள மக்களை தேசிய இனமான ஏற்றுக்கொள்கின்றனர். தமிழ் மக்களையோ, முஸ்லிம் மக்கனையோ, மலையகத் தமிழ் மக்களையோ தேசிய இனமாக ஏற்கவில்லை. தமிழ் தiமைகள் எனப்படுபவர்களில் அனேகர் சிங்கள மக்களையும் தமிழ் மக்களையம் தேசிய இனமாக ஏற்றுக் கொண்டாலும் முஸ்லிம் மக்களையும் மலையக தமிழ் மக்கனையும் தேசிய இனங்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலைப்பாடு ஒரு மக்கள் கூட்டம் பொதுவான மொழி, பண்பாடு, ஆள்புலம், வரலாறு என்பவற்றை கொண்டிருப்பின் தேசிய இனமாகும் என்று ஸ்டாலின் கூறியதின் வரலாற்று வளர்ச்சியை புரிந்து கொள்ளாமை அல்லது ஏற்றுக்கொள்ளாமையின் விளைவுகளாகும். மேற்கூறிய தேசிய இனத்துக்கான நான்கு பண்புகளில் ஒன்;றிரண்டு குறைந்திருப்பினும் ஒரு கூட்டம் தேசிய இனமாகும் தகுதியை கொண்டிருக்கும் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு மொழியை பேசுபவர்கள் பல தேசிய இனங்களாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக தேசிய இன ஒடுக்குமுறைக்கு உட்படும் மக்கள் கூட்டமொன்று தன்னை தேசிய இனமாக கருதி நிலைநிறுத்திக்கொள்ளும் உரிமையை கொண்டுள்ளது.

இதனை மறுப்பவர்கள் பெருந்தேசியவாதிகளாகவும் பேரினவாதிகளாகவும், அடையாளம் காணப்படுகின்றனர். இதனை மறுக்கும் இடதுசாரிகள் அல்லது சமவுடைமைவாதிகள் எனப்படுவோர் சமூச தேசிய வாதிகளாக அடையாளம் காணப்படுகின்றனர்.

சாதிய தேசியம்
தேசிய இனமொன்றுக்குத்தான் தேசிய அல்லது தேசிய இனம் என்னும் கட்டமைப்பு இருக்க முடியுமெனில் அடக்கப்படும் சாதிகளுக்கும் தேசம் – தேசிய – தேசிய இனக்கட்டமைப்பு இருப்பதாகவும், நாட்டுத் தேசியத்துகள் இனத்தேசியம் இருப்பது போன்று இனத் தேசியத்துக்குள் சாதியத்தேசியமும் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். இது சாதி ஒடுக்குமுறை தகர்க்கப்படுவதற்கு பதிலாக தேசிய இன உரிமைக்குள் புகுந்து கொண்டு சாதியத்திற்கு தேசம் கட்ட எடுக்கப்படும் மலினமான குழப்பாமான நிலைப்பாடாகும். இவ்வாறாயின் குலம், சமயம், பெண்கள், முதியோர், சிறுவர்கள், வித்தியாசமான திறனுடையோர் சமபால்நிலையில் இருப்போர். ஆண் பெண் பாலாரின் அடக்க முடியாதவர்கள் போன்றோருக்கும் தனித்தனி தேசம் கட்ட வேண்டிவரும்.

சாதிய தேசம் பற்றி குறிப்பிடுவோர் இக்கோரிகையை இரட்டை தேசியம் என்கின்றனர். இந்த தேசத்திற்குள் தேசம் இருப்பதாக சொல்;பவர்கள் மாக்சும் ஏங்கல்சும் அயர்லாந்திற்கும் போலாந்திற்கும் பிரிந்து செல்வும் உரிமையடன் கூடிய சுயநிர்ணய உரிமை இருப்பதை வலியுறுத்திய காலக்கட்டதிலும் அவர்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இது அடக்கப்படும் தேசிய இனத்தின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மறுக்கும் நிலைபாடாகும். பிரிந்துபோவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது அடக்கு முறை அரசின் அடக்கு முறைகளும், பிரிந்து செல்லக்கூடிய ஆள்புள வாய்ப்பும் தேவையும் ஆகுமேன்றி சுயநிர்ணய உரிமை சுய பிரிவினையும் அல்ல சுயநிர்ண உரிமை சமன் பிரிவினையுமல்ல.

பொருளாதார சமத்துவம் பண்பாட்டுப்புரட்சி ஜனநாயகப்படுத்தல் போன்றவற்றினூடமாக தீர்க்கப்பட வேண்டிய சாதிய அடக்குமுறையை (தற்போது சாதிய அடிபபடையில் உற்பத்தி உறவுகள் இல்லை) ஒழிப்பதற்கு பதிலாக, சாதிய ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதன் அடிப்படையில் சாதிய தேசியம் கட்டுவதற்கு விடப்படும் அழைப்பு தேசியங்கள் அல்லது தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை மலினப்படுத்தும் கோட்பாட்டுச் சிதைவாகும்.

பிரிந்துசெல்லும் உரிமையை மறுக்கும் சுயநிர்ணயம்
ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை என்பது ஒடுக்குகின்ற தேசிய இனத்திலிருந்து ஒடுக்கப்படத் தேசிய இனம் தனியாக பிரிந்து சென்று தனியாட்சி அமைக்கும் உரிமையை கொண்டதாகும். இதில் பிரந்து செல்லும் உரிமை என்பது அனைத்து தேசிய இனங்களினதும் உழைக்கும் வர்கத்தின் வல்லமையை சிதைக்கும் வகையிலோ சிறு சிறு அரசுகளை அமைக்கும் வகையிலோ ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாகவோ இருக்க கூடாது.

பிரிந்து செல்லும் உரிமை என்பது பிரிவினைவாதமல்ல. சுயநிர்ணயம் என்பது ஒரு பக்க பிரிவினையையும் மறுபக்கம் ஐக்கியத்தையும் கொண்ட நாணயத்தின் இரு பக்கங்களாகும். பிரிந்து சொல்;லும் உரிமை என்பது ஒடுக்கும் முறை அரசிற்கு எதிராக போராடும் தேசிய இனங்களின் போராட்ட அடிப்படையாகும். அடக்குமுறை அரசில்லாவிடத்து பிரிந்து செல்லும் உரிமையின் நடைமுறைப் பிரயோகம் அவசியப்படாது. தேசிய இனங்களின் சுயேட்சையான ஒன்றிணைவு என்பது பிரிந்து செல்லும் உரிமை இருக்கின்ற போது தான் அர்த்தமுள்ளதாகும். சோவியத் யூனியனில் மட்டுமே பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ண உரிமை உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் சீனாவில் பிரிந்து செல்லும் உரிமையை தவிர்ந்த நிலையிலேயே சுயநிர்ணய உரிமை உறுதி செய்யப்பட்டது. சுயநிர்ணய உரிமை பிரயோகததின் புதிய வளர்ச்சி என்று கூறி சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லும் உரிமையை உள்ளடக்க வேண்டியதில்லை என்று சிலர் வாதிடுகின்றனர். அவர்கள் 1950கள் வரை சீனாவில் சோவியத் யூனியனில் இருந்தவாறே பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உறுதி செய்யப்பட்டிருந்தது என்பதை அறியாமல் இருகின்றார்கள்.

சோஷலிஸ சோவியத் யூனியன், சோஷலிஸ சீனா, சோஷஸிஸ நிக்கரகொவா என்பவற்றின் நிமைமை வேறு இலங்கையின் நிலைமை வேறு. இலங்கையின் அரசு சோஷலிஸ அரசல்ல புரட்சிக்கு மிக அண்மித்த நிலையில் இருந்த காலகட்டத்திலிருந்த சோவியத் சீன நிலைமைகள் வேறு இலங்கையின் தற்போதைய நிலைமை வேறு.

நிலத் தொடர்ச்சியற்ற பல பிரதேசங்களின் அல்லது பூகோள ரீதியாக சிதறி வாழும் மக்களுக்கு தனியரசு அமைப்பது கடினம் என்பது ஒரு புறமிருக்க ஏனைய சந்தர்ப்பங்களில் தேசிய இனங்கள் பிரிந்து செல்வதற்கான உரிமையை கொண்டிருக்க வேண்டும்.

அடக்குகின்ற அரசின் தேசிய இனத்தினர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் பிரிந்து செல்லும் உரிமையை உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தகூடாது என்றும மாறாக சுயாட்சியையே வேண்டுமெனவும் கூறுகின்றவர்கள் இருக்கின்றனர். இது இன்னொரு வகையான சமூக பெருந்தேசியவாத சமூக பேரினவாத நிலைப்பாடாகும். இதனை அடக்கப்படகின்ற தேசிய இனங்களின் மத்தியில் இருக்கும் மாக்சியர்கள் ஏற்றுக்கொள்ளும் போது அவர்கள் சமூக பெருந்தேசியத்திற்கான சமூக பேரினவாதந்திற்கான இயைபூக்கிகளாகின்றனர்.

பிரிந்து செல்லும் உரிமையின் பிரயோகம் என்பது வேறு. அதனை ஏற்றுக்கொள்வது என்பது வேறு. அவ்வுரிமையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சுயநிர்ணய உரிமையை இன்னொரு வகயில் மறுப்பவர்களே.

நடைமுறை சாத்தியமற்ற சுயநிர்ணய உரிமை
இனரீதியாக பிளவுப்பட்டிருக்கும் இலங்கை மக்களின் ஐக்கியத்திற்கு பாதகமாக அமைவதாலும் இலங்கையி;ன் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதாலும் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மட்டுமல்ல சுயாட்சி, அதிகார பங்கீடு போன்ற கோரிக்கையை கூட முன்வைக்க கூடாது, மாறாக தேசிய இனங்களின் சமத்துவம் என்பதையே முன்வைக்க வேண்டுமென்று சிலர் இன்று புதிய வாதத்தை முன்வைக்கின்றனர். சோஷலிஸ அமைக்கப்பட்ட பிறகு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயத்தை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர்.
அடக்குமுறைகள் அகோரமாகி தேசிய இனங்கள் அழிவிற்குள்ளாகி கொண்டிருக்கும் போது தேசிய இனச் சமத்துவ கோரிக்கையை முன்வைப்பது என்பது அடிப்படையில் பெருந்தேசிய வாதத்திடமும் பேரினவாதத்திடமும் சரணடைவதாகும். இலங்கை நவகாலனித்துவ ஆட்சிக்குட்பட்ட முதலாளித்துவ நாடு இந்நிலையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது முதலாளித்துவ ஐனநாயக கோரிக்கையேயன்றி சோஷலிஸ கோரிக்கையல்ல. ஒரு தேசிய இனத்தின் உரிமைகள் சுயநிர்ணய சுயாட்சி, சமத்துவம் என்பவற்றின் அடிப்படையிலேயே உறுதி செய்யப்பட முடியும் இதில் முதலிரண்டையும் கவ்வாத்து செய்துவிட்ட சோஷலிஸம் வரும் வரை காத்திருக்க சொல்லுவதும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தற்போது சமஉரிமையை மட்டும் கோரியே போராட வேண்டும் என்று சொல்லுவதும் சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை நிராகரிப்பதாகும்.
முடிவுரை
இங்கு அடக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எதிர்கொள்ளும் கோட்பாட்டு சவால்களில் சில மிகவும் சுருக்கமாக முன் வைக்கப்பட்டுள்ளன. எல்லா கோட்பாட்டு சவால்களையும் அறிந்து தொகுத்து விரிவாக ஆராந்து எதிர்வினை புரிவது சுயநிர்ணய உரிமையை எற்றுக்கொள்பவர்களின் கடமை ஆகும்.
இலங்கை வாழ் சிங்கள, தமிழ்; முஸ்லிம் மலையகத் தமிழ் தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயேட்சையான சகோதரத்துவத்துடன் பரஸ்பர நம்பிக்கையுடன் தேசிய இனங்களின் கூட்டிணைவாக இலங்கையை கட்டியெழுப்பும் போதே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.