அடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும்

குறிப்பாக, இது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவைக் குறிவைத்துத் தெரிவிக்கப்பட்ட கருத்து என்ற பேச்சுப் பரவலாக உணரப்பட்டது. சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகத் தொடர்வது தொடர்பில், தற்போது நிச்சயமற்றநிலை உருவாகியுள்ளது.

ஒருபுறத்தில், ரணில் எதிர்ப்பாளர்களை, வெறுப்பாளர்களை இந்தக் கருத்து கவரக்கூடியதாக இருக்கிறது என்று சிலர் கருத்துரைத்தாலும், சுனந்த தேசப்பிரிய உள்ளிட்ட சிலர் சுட்டிக்காட்டுவதுபோல, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரிடையே இன்னும் கணிசமானளவு ஆதரவு இருக்கிறது. சஜித்தின் இந்தக் கருத்தானது, ரணில் ஆதரவாளர்களின் வாக்கை இழக்கச்செய்வதாகவே அமையும் என்ற கருத்திலும், உண்மை இல்லாமல் இல்லை.

மறுபுறத்தில், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகியவுடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த கட்ட நகர்வானது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கைப்பற்றி, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்து, ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ளுதல் என்ற ஊகங்களும், பரவலாகப் பேசப்படுகின்றன.

ஆனால், அடுத்ததாகப் பதவியேற்கும் இலங்கையின் ஜனாதிபதியானவர் ‘ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் நிறைவேற்றத்தக்க’ சர்வாதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருப்பாரா என்ற கேள்வி இங்கு முக்கியமானது.

குறிப்பாக, அரசமைப்புக்கான 19ஆவது திருத்தத்துக்குப் பின்னரான, நிறைவேற்று ஜனாதிபதி, அதிலும் குறிப்பான 19ஆம் திருத்தத்தை நிறைவேற்றும் போது, பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு அடுத்ததாகப் பதவியேற்கும் ஜனாதிபதியின் அதிகாரங்கள், மைத்திரிபால சிறிசேனவினதும், அவருக்கு முன்பு இப்பதவியை வகித்தவர்களினதும் அதிகாரங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாகவே உள்ளது. இந்தப் பத்தியானது, அடுத்த ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பற்றியும் வகிபாகம் பற்றியும் அலசும்.

முன்னர் பதவியிலிருந்த ஜனாதிபதிகளைப் போலவே, அடுத்த ஜனாதிபதியும் அரசின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் திகழ்வார். அரசாங்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில், அமைச்சரவையின் தலைமையையும் அவரே ஏற்பார். அமைச்சரவையின் செயலாளரை நியமிப்பது, ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

பிரதமரின் செயலாளர், ஏனைய அமைச்சுகளின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கே உண்டு. எனினும், அத்தகைய நியமனங்களை அவர் முறையே, பிரதமரினதும் குறித்த அமைச்சர்களினதும் வழிகாட்டுதலின் பெயரில் செய்வதற்குக் கடமைப்பட்டுள்ளார். மறுபுறத்தில், ஜனாதிபதியின் செயலாளரை நியமித்தல் உள்ளிட்ட, ஜனாதிபதி செயலகத்தின் மீதான சர்வ அதிகாரமும் ஜனாதிபதி வசமே தொடர்கிறது.

இலங்கையின் ஜனாதிபதியானவர், வெறுமனே அரசுத் தலைவரும் அரசாங்கத்தின் தலைவரும் மட்டுமல்ல; அவரே, இலங்கைப் படைகளின் தலைமைத் தளபதியுமாகிறார். இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகள், பாதுகாப்பு, உளவுத்துறை என்பன முழுமையாக ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டவையாகவே தொடர்கிறது. குறிப்பாக, யுத்தப்பிரகடனம், சமாதானப் பிரகடனம் என்பவை, ஜனாதிபதியின் சவாலுக்கு உட்படுத்தமுடியாத அதிகாரங்களாகவே தொடர்கின்றன.

ஆயினும், அமைச்சரவை மற்றும் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரங்கள் தொடர்பில் கணிசமானதும், முக்கியமானதுமான சில மட்டுப்பாடுகள், அரசமைப்புக்கான 19ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான மட்டுப்பாடு, மைத்திரிபால சிறிசேனவுக்குப் பின்னர் பதவியேற்கும் எந்த ஜனாதிபதியும் எந்த அமைச்சர் பதவியையும் இலாகாவையும் வகிக்க முடியாது என்பதாகும்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக மட்டுமல்லாது, பாதுகாப்பு அமைச்சராகவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். 19ஆம் திருத்தத்திலுள்ள நிலைமாற்று ஏற்பாடுகளுக்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த அமைச்சுப் பதவிகளையும் இலாகாக்களையும் வகிக்க இடமளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அடுத்து வரும் எந்த ஜனாதிபதியும், ஜனாதிபதி என்ற அடிப்படையில், அமைச்சரவையின் தலைவராக, அமைச்சரவையில் அங்கம் வகிப்பாரேயன்றி, அவரால் எந்த அமைச்சுப் பதவியையும் இலாகாவையும் தன்னகத்தே வைத்துக்கொள்ள முடியாது. முன்பிருந்த நிறைவேற்று ஜனாதிபதிகள், மிக முக்கியமான அமைச்சு இலாகாக்களைத் தம்மிடம் வைத்திருந்தமையை இங்கு சுட்டிக்காட்டலாம்.

ஜே.ஆர்.ஜெயவர்தன பாதுகாப்பு, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரம், திட்ட அமுலாக்கம், உயர்கல்வி ஆகிய அமைச்சு இலாகாக்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டார்.
ரணசிங்க பிரேமதாஸ, பாதுகாப்பு, புத்தசாசனம், கொள்கைத் திட்டமிடல் மற்றும் அமுலாக்கம் ஆகிய இலாகாக்களைத் தன்னிடத்தில் வைத்துக்கொண்டார்.

டி.பி.விஜேதுங்க, பாதுகாப்பு, நிதி, பௌத்த விவகார இலாகாக்களைத் தன்னகத்தே வைத்துக்கொண்டார்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு, சட்டஒழுங்கு, நிதி மற்றும் திட்டமிடல், ஊடகம், சமுர்த்தி விவகாரம், உல்லாசத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து, புத்தசாசனம், கல்வி ஆகிய இலாகாக்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டார்.

மஹிந்த ராஜபக்‌ஷ, பாதுகாப்பு, நகர அபிவிருத்தி, நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் கப்பற்போக்குவரத்து இலாகாக்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டார்.

ஆனால், இனிவரும் ஜனாதிபதியால், இதுபோன்று எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்கமுடியாது.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீது, 19ஆம் திருத்தம் கொண்டு வந்த மட்டுப்பாடுகளில், அடுத்து முக்கியம் பெறும் விடயம், பிரதமரின் பதவி தொடர்பானது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை, அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பிரதமர் பதவியானது வலுவற்றதொன்றாகவே காணப்பட்டு வந்துள்ளது. சில பலமான ஆளுமைகள் அப்பதவியை வகித்ததன் மூலமாக, அந்தப் பதவியானது வௌிப்பார்வைக்குப் பலமானதாகச் சிலசமயம் தென்பட்டிருப்பினும், 19ஆம் திருத்தத்துக்கு முன்னதாக, பிரதமர் பதவி ஏனைய அமைச்சுப் பதவிகளிலிருந்து, பெரிதும் வேறுபட்டதொன்றாக இருக்கவில்லை.

நிறைவேற்று ஜனாதிபதி, தாம் விரும்பும் நபரைப் பிரதமராக நியமிக்கவும் தான் விரும்பும் போது, பிரதமரைப் பதவி நீக்கவும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்.

19ஆம் திருத்தம், ஜனாதிபதிக்குப் பிரதமரின் நியமனம், நீக்கம் தொடர்பிலிருந்த அதிகாரங்கள் மீது, மட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரதமர் பதவியின் வலுவை அதிகரித்துமுள்ளது.

இதன் விளைவை நாம், 2018 ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான 52 நாள் அரசமைப்புச் சிக்கல் நிலையின்போது கண்டுகொண்டோம். 19ஆம் திருத்தத்தின் பின்னர், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நபரையே, பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்க முடியும்.

அத்துடன், பிரதமருக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பிரதமர் உயிர்நீத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தால், அவர் பதவி விலகினால் அன்றி ஜனாதிபதியால் பிரதமரைப் பதவி நீக்கவோ, இன்னொரு புதிய பிரதமரை நியமிக்கவோ முடியாது.

மேலும், 19ஆம் திருத்தத்தின் பின்னர், ஜனாதிபதியால்த் தான் விரும்பிய எவரையும் அமைச்சராகத் தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ முடியாது. மாறாக, பிரதமரின் ஆலோசனையின் பெயரில் மட்டுமே, ஜனாதிபதியால் அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்கவோ முடியும். இது முன்பு, நிறைவேற்று ஜனாதிபதிக்கு அமைச்சர்களின் நியமனம், நீக்கம் தொடர்பிலிருந்த தன்னிச்சையான அதிகாரத்தின் மீதான குறிப்பிடத்தக்க மட்டுப்பாடாகும்.

ஆனாலும், அமைச்சரவையின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல், அமைச்சர்களுக்கான இலாகாக்களை வழங்குதல், மாற்றியமைத்தல் தொடர்பில், பிரதமரை ஜனாதிபதி கலந்தாலோசிக்க மட்டுமே கடமைப்பட்டவராகிறார் என்பதுடன், இவை தொடர்பில், பிரதமரைக் கலந்தாலோசித்தபின், ஜனாதிபதி தானே தீர்மானிக்க முடியும். இது தொடர்ந்தும், ஜனாதிபதிக்கு அமைச்சரவை மீது செல்வாக்குச் செலுத்தத்தக்க பலத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

19ஆம் திருத்தம் கொண்டுவந்துள்ள இன்னொரு மிக முக்கியமான விடயம், ஜனாதிபதியின் அதிகாரம் மீதான மட்டுப்பாடானது, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குரிய அதிகாரம் தொடர்பிலானதாகும்.

முன்னர் இருந்த ஜனாதிபதிகள், அரசியல் சூழலுக்கேற்ப நாடாளுமன்றத்தை அதன் பதவிக்காலம் முடிய முன்பே, தன்னிச்சையாகக் கலைத்த சந்தர்ப்பங்களைக் கண்டுள்ளோம். ஆனால், 19ஆம் திருத்தத்தின் பின்னர், நாடாளுமன்றமானது தேர்தலொன்றின்மூலம், தெரிவுசெய்யப்பட்ட ஐந்தாண்டு பதவிக்காலத்தின், முதல் நான்கரை ஆண்டு காலப்பகுதியின்போது, நாடாளுமன்றத்தைத் தன்னிச்சையாகக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைத் தீர்மானத்தின் படி, நாடாளுமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் படி கோரினால் அன்றி, ஜனாதிபதியால் தன்னிச்சைப்படி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது. ஆயினும், நாடாளுமன்றப் பதவிக்காலத்தின் கடைசி ஆறுமாத காலத்துக்குள், ஜனாதிபதியால் தன்னிச்சைப்படி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

19ஆம் திருத்தத்தின் இந்த அம்சத்தை, 2018 ஒக்டோபர் முதல் டிசெம்பர் வரையிலான 52 நாள்கள் அரசமைப்புச் சிக்கல் நிலையின்போது, அனுபவ ரீதியாகக் கண்டுகொண்டோம்.

சம்பந்தன் எதிர் சட்டமா அதிபர் உள்ளிட்ட பத்து அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளில், 2018 டிசெம்பரில் இலங்கை உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் தலைமையிலான எழுவர் அமர்வு அளித்த தீர்ப்பானது, 19ஆம் திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தின் முதல் நான்கரை வருடங்களுக்கு, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தன்னிச்சையாகக் கலைக்க முடியாது என்பதை உறுதிசெய்ததுடன், நாடாளுமன்றத்தை அவ்வாறு கலைக்க, ஜனாதிபதி சிறிசேன எடுத்த முயற்சியை, நீதிமன்றம் சட்டவலிதற்றதொன்று என்றும் அரசமைப்புக்கு முரணானது என்றும் இரத்துச்செய்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், 19ஆம் திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியானவர் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புடையவராக ஆக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும், தொழில்நுட்ப ரீதியில், ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புடையவராக இருந்தாலும், அவர் நாடாளுமன்றத்துக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவரல்ல என்ற நிலையிலேயே, அவருடைய பொறுப்புடைமை அமைகிறது. இது, குறித்த பொறுப்புடைமையின் வலிமைக்குறைவை உணர்த்துவதாக அமைகிறது.

இறுதியாக 19ஆம் திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியின் அதிகாரம் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கியமான மட்டுப்பாடு என்பது, அரசமைப்புப் பேரவையில் ஸ்தாபகமாகும்.

இலங்கை அரசமைப்பின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுதந்திர ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள், அரசமைப்புப் பேரவையின் பரிந்துரையின் பேரில் மட்டுமே, ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட முடியும்.

அரசமைப்புப் பேரவை பரிந்துரை செய்து, 14 நாள்களுக்குள் ஜனாதிபதி குறித்த நியமனத்தைச் செய்யாது விட்டால், 14 நாள்கள் நிறைவில், குறித்த நியமனங்கள் சட்டத்தின் செயற்பாட்டின் ஊடாக வலுவுக்கு வரும்.

ஆகவே தொழில்நுட்ப ரீதியில், சுதந்திர ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள் அரசமைப்புப் பேரவையாலேயே செய்யப்படுகின்றன எனலாம். மேலும், உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட பல அரச உயர் பதவிகளுக்கான நியமனங்களை அரசமைப்புப் பேரவையின் அங்கிகாரத்துடன் மட்டுமே, ஜனாதிபதியால் செய்யமுடியும்.

ஆகவே, அரசின் முக்கிய பதவிகளுக்கு ஆள்களை நியமிப்பது தொடர்பில், ஜனாதிபதிக்கிருந்த அதிகாரம், பாரியளவில் 19ஆம் திருத்தத்தின் ஊடாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல, சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்புக் கூட, 19ஆம் திருத்தத்தின் மூலம் தளர்த்தப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி பொதுவான சட்டப்பாதுகாப்பைத் தொடர்ந்தும் கொண்டிருப்பினும், ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகச் செய்யும் காரியங்கள், செய்யாது விட்ட காரியங்கள் தொடர்பில், சட்டமா அதிபரைப் பதிலாளியாகக் குறிப்பிட்டு, அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். இது ஜனாதிபதியின் செயற்பாடுகளின் சட்டபூர்வத் தன்மையை, உயர்நீதிமன்றில் கேள்வி கேட்க வழிசமைத்துள்ளது.

ஆகவே, அடுத்த வரும் இலங்கை ஜனாதிபதி 19ஆம் திருத்தத்துக்கு உட்பட்ட அரசமைப்பின் கீழ், ‘சர்வாதிகாரம்’ கொண்ட ஜனாதிபதியாக அமையமாட்டார் என்பது தௌிவு. எனினும், மறுபுறத்தில் அவரை, அதிகாரமற்ற சம்பிரதாயபூர்வ ஜனாதிபதி என்றும் கூறிவிட முடியாது.

பாதுகாப்பு விடயங்களில், ஜனாதிபதியே முழுமையான அதிகாரங்களைக் கொண்டவராகத் தொடர்கிறார் என்பதுடன், அமைச்சரவை மற்றும் நிறைவேற்றுத்துறையின் தலைவராக அவர், கணிசமான அதிகாரங்களைத் தொடர்ந்தும் தன்னகத்தே கொண்டுள்ளார்.

ஆனால், ஒன்று மட்டும் உறுதி; நாடாளுமன்றத்தின் ஆதரவு இன்றி, அடுத்து வரும் ஜனாதிபதி, அது சஜித்தோ, கோட்டாவோ சட்டரீதியாகத் தாம் விரும்பும் ஒருவரைப் பிரதமராக நியமிக்க முடியாது.