அதிகாரத் தரப்புகளைத் திருப்தி செய்தே….ஒன்ராரியோ மாகாண சபைத் தேர்தல்

நடந்து முடிந்திருக்கும் ஒன்ராரியோ மாகாண சபைத் தேர்தலில் 2 தமிழர்கள் வென்றிருக்கின்றார்கள் என்பது எந்த விதத்திலும் கொண்டாட்டத்திற்குரியது அன்று. நல்லதோர் உதாரணமாக விஜய் தணிகாசலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாளிற்கும் கரும்புலிகள் தினத்திற்கும் பதிந்திருந்த முகநூல் குறிப்புகளை அவர் நீக்கி, தனது நிலைப்பாடு இப்போது அப்படி அல்ல என்று ட்வீற்றர் தளத்தில் குறிப்பிட்டிருந்ததை அவரது ஆதரவாளர்கள் கூட அவர் கட்சியின் அழுத்தத்தாலேதான் அப்படிச் செய்திருந்தார் என்றும் அதனையும் மீறி அவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதற்காக அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்திருந்தார்கள்.

அடிப்படையான கேள்வி என்னவென்றால் விஜய் தணிகாசலம் விடுதலைப் புலிகள் பற்றிய அவரது அதே நிலைப்பாட்டுடன் தொடர்ந்து செயற்படுவதற்கான வெளியைத் தராத கட்சியில் இணைந்து ஏன் தேர்தலில் போட்டியிடத் தீர்மாணித்தார் என்பதே. இதற்கும் அப்பால், அவர் அவரது விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையாலே தான் எதிர்க்கப்படுகின்றார் என்று கூறி விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றவர்களால் அவருக்கு ஆதரவுப் பிரச்சாரம் செய்யப்பட்டமை குறித்து எனக்குக் கடுமையான விமர்சனமே. நாம் தொடர்ச்சியாக அதிகாரத் தரப்புகளைத் திருப்தி செய்தே வாழ்கின்ற ஒரு சமுதாயம் ஆக மாறுவோவம் என்றால் அது மிகக் கடுமையான ஒரு சமூகப் பின்னடைவே.

அடிப்படையில் கன்சர்வேடிவ் கட்சி என்பதே சிறுபான்மையினரின் நலன்களைப் புறக்கணித்துச் செயற்படுவதாகவே இருக்கின்றது, இவர்களின் ஆட்சிக்காலம் மிகுந்த சவாலானதாகவே இருக்கப் போகின்றது.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர்களில் தொடர்ந்து சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டவரும், தன்னை முன்னிலைப்படுத்தாமல் சமூகச் செயற்பாடுகளுக்கு ஆதாரமாகவும் இருந்தவருமாக என்னால் வனிதா நாதன் ( juanita nathan) அவர்களை மாத்திரமே என்னால் குறிப்பிடமுடியும். ஆயினும் அவர் போட்டியிட்ட தொகுதியில் அவரால் வெல்ல முடியவில்லை என்பது ஒரு சமூகமாக எமக்குப் பின்னடைவே!

(Arunmozhi Varman)