அம்பி டு அந்நியன்…! (பணிவு பன்னீர் ‘செல்வம்’ சேர்த்த கதை! மினி தொடர்- 1 )

 

மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த ஐவரணியில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை, கூட்டணி… என தேர்தல் வேலைகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு இவர்களைப் பற்றிய அப்டேட்டில்தான் ஜெயலலிதா பரபரப்பாக இருப்பதாக பரபரக்கிறது கார்டன் வட்டாரம். அதுவும் தலைமைக்கு எதிராக தனி அணி திரட்டினார், ஜெயலலிதாவுக்கு எதிராக அசுவமேத யாகம் நடத்தினார், அமெரிக்க கம்பெனியை வளைத்தார்… என பணிவு பன்னீரைப் பற்றி வரும் செய்திகள் ஒவ்வொன்றும் பகீர் திகீர் ரகம்.

நெற்றி நிறைய விபூதி-குங்குமமும் கும்பிட்ட கையும் அமைதி தவழும் முகமுமாக வலம் வந்த பணிவு பன்னீர் செல்வம் எப்படி இப்படி திகுதிகு வளர்ச்சி கண்டார்?

பன்னீரின் அந்த ‘அம்பி டு அந்நியன்’ பயணத்தில் இருந்து…

பேச்சிமுத்து என்கிற ஓ.பன்னீர்செல்வம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஓட்டக்காரதேவர். பெரியகுளத்திற்கு பரவு காவல் செய்ய சொந்தங்களால் அழைத்து வரப்பட்டார். வந்த இடத்தில் வேளாண்மை பயிர்களை பாதுகாக்கும் பணியில் நல்ல வருமானம். அதை சேமித்துவைத்து காசு சேர்க்க ஆரம்பித்தவர், பிறகு உறவுக்கார பெண் பழனியம்மாளை திருமணம் செய்துகொண்டார். முதல் குழந்தைக்கு குலதெய்வமான பேச்சியம்மன் பெயரை வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டனர். ஆனால் முதலில் பிறந்ததோ மகன். அதனால் ‘பேச்சிமுத்து’ என்று பெயர் வைத்தனர். அந்த பேச்சிமுத்துதான் தமிழகத்தின் இன்றைய நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.

உடன்பிறந்தவர்கள்

பன்னீருக்கு அடுத்து ராஜா, சுசீந்திரன், பாலமுருகன், சண்முகசுந்தரம் என்று ஐந்து ஆண் பிள்ளைகள். பேச்சியம்மாள், சாமுண்டீஸ்வரி, சித்ரா, அமுதா என்கிற நான்கு பெண் பிள்ளைகள் என மொத்தம் ஒன்பது குழந்தைகள். போலீஸ் வேலையில் இருந்த சுசிக்கு நன்றாக சமைக்க தெரியும், அதனால் போலீஸ் வேலையை உதறி விட்டு சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வந்தார். ஓ.பி.எஸ் முதன் முதலாக முதலமைச்சசர் ஆனபோது பெரியகுளத்தில் இருந்து அவரின் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்… என்று பெரியகுளம், தேனியில் இருந்து ஏகப்பட்ட நண்பர்கள் பன்னீரை சந்திக்க சென்னைக்கு சென்றனர். ஆனால் தம்பி சுசி மட்டும் போகவில்லை.

பன்னீரின் பெயரை ஒருநாளும் அவர் எங்கும் பயன்படுத்தியது இல்லை. அவர் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் தன் வேலையை செய்து வந்தார். அப்படி வேலைக்கு போன இடத்தில் எதிர்பாராத விபத்தில் சுசி இறந்துவிட்டார். சகோதரி பேச்சியம்மாளும் இறந்து விட்டார்.

வட்டித்தொழில் செய்த நிதியமைச்சர்

மூத்த பிள்ளை பன்னீர், அவரது தாயார் பழனியம்மாள் செல்லம். பள்ளிப்படிப்பை பெரியகுளத்தில் படித்த பன்னீர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே அவரது அப்பாவுக்கு துணையாக ஃபைனாஸ் கொடுத்து வாங்கும் வேளையிலும் ஈடுபட்டார். முதலில் பெரியகுளம் மார்க்கெட்டில் வட்டிக்கு கொடுத்து வாங்கிய அவரது குடும்பம், அடுத்து லாரிகளுக்கு ஃபைனான்ஸ் கொடுக்கும் தொழிலிலும் கால் பதித்தது.

காங்கிரஸ் குடும்பமும்–திமுகவோடு உண்ணாவிரதமும்

பன்னீரின் குடும்பம் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம். பன்னீரின் அப்பா, சித்தப்பா… என்று அனைவரும் பெரியகுளம் காங்கிரஸ் நகர் மன்ற தேர்தலில் மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்கள். பன்னீரின் தம்பி பாலமுருகனோ தீவிர திமுக ஆதரவாளர். 1983-84 ம் ஆண்டு குட்டிமணி இறந்த பொழுது திமுக நடத்திய உண்ணாவிரத போராட்டங்களில் கலந்து கொண்டவர். உள்ளூர் தேர்தல்களில் திமுகவிற்கு வேலையும் பார்த்தவர். பன்னீரின் எழுச்சிக்கு பிறகு அவரும் அதிமுக பக்கம் வந்துவிட்டார்.

பன்னீர் கல்லூரி படிக்கும் காலங்களில் உத்தமபாளையம், தேனி பகுதிகளில் திரை கட்டி எம்.ஜி.ஆர் படங்கள் போடுவதுண்டு அதோடு இல்லாமல் சேர்த்துவைத்த பணத்தை வாரக் கடைசியில் எடுத்துக்கொண்டு மதுரையில் நடக்கும் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்க கிளம்பிவிடுவார்.

எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்துவிட்டு அவரின் ரசிகர் ஆனவர், பிறகு நண்பர்களோடு சேர்ந்து அவருக்கு ரசிகர் மன்றம் வைத்தார். 1980களில் எம்.ஜி.ஆர் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் சுற்றுப்பயணம் வந்த பொழுது சைக்களில் எம்.ஜி.ஆரை பார்க்க பன்னீரும் அவரது நண்பர்களும் கிளம்பினர். எம்.ஜி.ஆரை வழி நெடுங்கும் துரத்திதுரத்தி தூரத்தில் இருந்து ரசித்த அதே பன்னீர்தான் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அதிமுகவை கைப்பற்ற முயன்றார் என்ற ‘அதிர்ச்சி புகாரில்’ இன்று சிக்கியுள்ளார்.

பி.வி டீ ஸ்டாலிலிருந்து மாவட்டச் செயலாளர்

டிகிரி முடித்துவிட்டு என்ன வேலைக்கு போகலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தவருக்கு சொசைட்டியில் லோன் வாங்கி பால்பண்ணை வைக்கலாம் என்று அவரது நண்பர்கள் ஐடியா தந்தனர். பன்னீரும் பால்பண்ணை வைத்தார். கள்ளிப்பட்டியில் தன் குடும்பத்துக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் கரும்பு விவசாயம் செய்து வந்த இடத்தில் ஐந்து பசு மாடுகளை வாங்கி பால் கறக்க ஆரம்பித்தார். கூட்டுறவு பால் பண்ணைக்கு சப்ளை செய்வது, சில்லறை பாலும் ஊற்றுவது என்று இருந்த பன்னீர் எம்.ஜி.ஆர் மன்ற வேலைகளையும் பார்த்து வந்தார்.

மீதமான சில்லறை பாலை என்ன செய்வது என்று யோசித்தபோது உதயமானதுதான் ‘பி.வி டீ ஸ்டால்’. ‘.பி’ என்பது பன்னீர். ‘வி’ என்பது விஜயன் என்கிற அவரது நண்பர். இன்றளவும் பன்னீரின் டீக்கடை பிவி டீஸ்டாலாக இயங்கி வருகிறது. காரணம் தன் அரசியலில் அந்த டீக்கடை இமேஜ் நன்றாகவே வொர்க் அவுட் ஆனதால் அதை அப்படியே வைத்து இருக்கிறார். ஆனால் அந்த ‘வி’க்கு சொந்தக்காரரான விஜயன் இன்றளவும் பெரியகுளத்தில் பன்னீரின் டீக்கடைக்கு அருகிலேயே ‘ரிலாக்ஸ் கேன்டீன்’ என்கிற பெயரில் கடை நடத்தி வருகிறார்.

பதவியை பெற்றுத்தந்த நாட்டுக் கோழிக்குழம்பு

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் ஜெயலலிதாவும், ஜானகியும் தனித்தனி அணியாக நின்றனர். ஒன்றுபட்ட மதுரை மாவட்டமாக இருந்து வந்த காலத்தில், ஜானகி அணியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்தார் கம்பம் செல்வேந்திரன். அவர்தான் பன்னீருக்கு, ஜானகி அணி அதிமுகவில் பெரியகுளம் நகர செயலாளர் பதவியை, 1980 களில் முதன்முதலில் பெற்றுத் தந்தார். அப்போது செல்வேந்திரனுக்கும் மதுரை மாவட்டச் செயாலாளர் சேடப்பட்டி முத்தையாவுக்கும் நடந்துவந்த பனிப்போர் அரசியலில் செல்வேந்திரன் பக்கம் நின்றார் பன்னீர்.

1989-ல் போடிநாயக்கனூரில் சட்டமன்ற வேட்புமனு தாக்கல் செய்ய ஜானகியை அழைத்து வந்தபோது, ஜெயலலிதாவுக்கு எதிராக வேலைகள் செய்ததும், ஜானகியை பத்திரமாகப் பார்த்துக்கொண்டதும் பன்னீர்செல்வம்தான். அதன் பிறகு சில ஆண்டுகளில் எல்லாம் மாறியது. ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம். சேடப்பட்டியின் கை ஓங்கியது. எம்.எல்.ஏ., கட்சிப்பதவி என்று தொடர் வெற்றிகளில் இருந்தார் சேடப்பட்டி முத்தையா. அவர் பெரியகுளம் பாராளுமன்ற தொகுதியில் 1998-ம் ஆண்டு போட்டியிட்டபோதுதான் பன்னீர் செல்வம் சேடப்பட்டி முத்தையாவுக்கு அறிமுகம் ஆனார்.

அதற்கு முன்புவரை செல்வேந்திரனின் ஆள் என்பதால் பன்னீரை சேடப்பட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இருவரும் ஒரே சமூகம் என்பதால் பன்னீரை பிறகு சேர்த்துக்கொண்டார். அதன்பிறகு முத்தையா போகும் இடமெல்லாம் பன்னீருக்கும் மரியாதை. அதன் பிறகு பன்னீருக்கு எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்தார். அதன்மூலம் பன்னீருக்கு பல்வேறு தொடர்புகள் கிடைத்தன.

முத்தையா பெரியகுளத்தில் வென்று நாடாளுமன்றம் சென்றதும் அவரைப் பார்க்க கொடைரோட்டில் அவரின் பண்ணை வீட்டுக்கு செல்வார் பன்னீர். இன்று ஜெயலலிதா முன்பு எப்படி வளைந்து குனிந்து நிற்கிறாரோ, அதேபோல அன்று முத்தையா முன்பும் நிற்பாராம்.

உட்காரச் சொன்னால்கூட முத்தையாவின் முன்பு உட்கார மாட்டாராம். அந்த பணிவை வைத்துதான் பன்னீர் ஆட்களை கவிழ்ப்பாராம்.

முத்தையா அடிக்கடி வைகை அணையில் உள்ள பங்களாவில் தங்குவார். அதோடு தொகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் ரெகுலராக தங்குவார். நாளைடைவில் முத்தையாவை பார்க்க போகும்போதெல்லாம் அவருக்கு நாட்டுக்கோழிக் குழம்பும், ஆட்டு எலும்புக்கறி குழம்பும் வீட்டில் இருந்து சமைத்து எடுத்துக்கொண்டுபோய் கொடுப்பாராம். அப்போது முத்தையாவுக்கு பந்தி பரிமாறுவது முதல் சாப்பிட்டு கை கழுவும்வரை சகலமும் பன்னீர்தான்.

‘இவ்வளவு பவ்யமா இருக்கும் பன்னீருக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்’ என்று முத்தையா நினைக்க ஆரம்பித்தார்…பிறகு பன்னீரை பெரியகுளம் நகரச் செயலாளர் ஆக்கிவிடுகிறார். அதைத்தொடர்ந்து அவரை பெரியகுளம் நகர மன்ற தலைவர் தேர்தலுக்கும் சீட்டு வாங்கி கொடுத்து வெற்றியும் பெற வைக்கிறார்.

(Vikatan)