அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும்

சுதந்திர இலங்கையின் எந்தவோர் அரசியலமைப்பின் உருவாக்கத்திலும் தமிழ்த் தேசத்தின் பங்கு உள்வாங்க ப்படவில்லை என்பதுதான், பட்டாவர்த்தனமான உண்மை. சோல்பரி அரசியலமைப்பு என்பது பிரித்தானியர்கள் நீங்கள் சிறுபான்மையினர், உங்களுக்கு பிரிவு 29(2) தரும் பாதுகாப்பே போதுமானது என்று, தமிழ்த் தேசத்தின் கோரிக்கைகளுக்குப் பதிலாக, 29(2) என்ற எந்த விளைபயன்தராத அரசியலமைப்புச் சரத்துடன் நின்று கொண்டது. 1972இன் முதலாவது குடியரசு அரசியலமைப்புருவாக்கத்தின் போது, தமிழ்த் தேசத்தின் குரல்கள் பட்டாவர்த்தனமாக நிராகரிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாகப் பெரும்பான்மையினத் தேசியத்தின் அரசியலமைப்பாகவே பிறப்பெடுத்தது. 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு, ஜே.ஆரின் குழந்தை. முதலாவது குடியரசு யாப்பிலிருந்த பெரும்பான்மையினத் தேசியத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அத்தனையும் அதிலிருந்தன என்பதோடு, ஜே.ஆரின் அதிகாரங்களைப் பலப்படுத்தும் சர்வாதிகார ஜனாதிபதி முறையும், அதன்பாலான அதிகாரக்குவிப்பும் கொண்டதான, அரசியலமைப்பாக அது அமைந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம், ராஜிவ் காந்தி அரசாங்கத்தினால், ஜே.ஆர். மீதான அழுத்தத்தின் விளைவாகத்தான், தமிழ் மொழியுரிமை, மாகாணசபைகள் உள்ளிட்டவை அரசியலமைப்புத் திருத்தங்களினூடாகக் கிடைத்தன. இவை தமிழ்த் தேசத்தின் அரசியல் அபிலாசைகளின் குறைந்தபட்சத்திலும் குறைந்தபட்சமானவை.

அரசியலமைப்பின் உருவாக்கம் தொடர்பில் ஃப்ரெஞ்ச் மொழியில் “pouvoir constituant” என்று ஒரு கோட்பாட்டுப் பதமுண்டு. அதன் அர்த்தம், அரசியலமைப்பு ஒழுங்கை ஸ்தாபிக்கும், அதிகாரம் என்பதாகும். சுருங்கக்கூறின் கோட்பாட்டு ரீதியாகப் பார்ப்பின் அரசியலமைப்பே ஒரு நாட்டின் அதியுயர் அதிகாரத்தின் வௌிப்பாடாக இருக்கும் போது, அதனையும் தாண்டிய, அந்த அரசியலமைப்பை உருவாக்கும் பலம்தான் “pouvoir constituant” என்று விளிக்கப்படுகிறது. இலங்கை அரசியலமைப்பின் முன்னுரை இந்த “pouvoir constituant” ஆக இலங்கை மக்களைக் குறிப்பிடுகிறது. ஆனால், யதார்த்தத்தில் சுதந்திர இலங்கையின் எந்தவோர் அரசியலமைப்பும் தமிழ் மக்களின், ஆமோதிப்புடன் நிறைவேற்றப்பட்டவில்லை என்பதைவிட, அதனை ஆக்கும் பணியில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின், ஊடாக வௌிப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் அபிலாசைகள் உள்ளடக்கப்படவில்லை. ஆக இலங்கையின் “pouvoir const ituant”இன் ஒரு பகுதி இந்த இந்த அரசியலமைப்புகளை ஆக்கவில்லை. ஆனால் இப்படிக் கூறுவதில் பல கோட்பாட்டுச் சிக்கல்கள் உள்ளன. “மக்கள்” என்பது ஒன்று, அதற்குள் பகுதிகள் இருக்க முடியாது என்பது மரபுரீதியான கோட்பாட்டுப் பார்வையாகும். ஃப்ரான்ஸின் சிவில் தேசம், பிராந்திய அடையாளங்களைக் கடந்த “ஃப்ரெஞ்ச்” தேசமெனும் “சிவில் தேச” அடையாளத்தைக் கட்டியெழுப்பி யதன்படி, “மக்கள்” என்பது, ஒன்று என்பது பிரச்சினைக்குரியதற்றதொன்றாகிறது. ஆனால், இனத்-தேசியத்தின்படி பிரிவடைந்துள்ள, குறைந்தபட்சம் இரண்டு இனத்-தேசங்களைக்கொண்டுள்ள நாட்டை, ஒற்றைச் சிவில் தேசத்தைக் கட்டியமைத்துள்ள ஃபிரான்ஸுடன் நேரடியாக ஒப்பிடுவது சிக்கலானது. ஆகவே, கோட்பாட்டு ரீதியில் இந்த வேறுபாட்டினை உள்வாங்கிக்கொள்வது அவசியமாகிறது. நிற்க.

வர்த்தமானியில், பிரசுரிக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 20வது திருத்த மசோதாவைப் பொறுத்தவரையில், அது “ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர அனைத்தையும் செய்யக்கூடிய,ஜே.ஆர் உருவாக்கிய சர்வாதிகாரமிக்க ஜனாதிபதியாக கோட்டாபயவை மாற்றும் மசோதாவாக இருப்பது வௌ்ளிடைமலை. இதை நாம் எதிர்பார்க்கவில்லை; என்று யாராவது வியப்படைந்தால், அவர்களுக்கு இலங்கை அரசியல் தெரியவில்லை என்று அர்த்தம். இந்த நாட்டின் வாக்காளர்கள் 2/3 பெரும்பான்மை வாரி வழங்கிவிட்டபின்னர், அதனை தமது அதிகாரத்தைத் தக்க வைக்க ஆட்சிபீடத்திலுள்ளோர் பயன்படுத்த மாட்டார்கள் என்று எண்ணுவதில் அர்த்தமில்லை. ஜனாதிபதி கோட்டாபய விடம் அதிகாரம் குவிவதன் அரசியல் விளைவுகளை, அதன் பயனாக உருவாகக்கூடிய உட்கட்சி முறுகல்களை, ராஜபக்‌ஷ குடும்பத்தினுள், எழக்கூடிய முரண்பாடுகளைப் பற்றியெல்லாம் ஆரூடங்கள் ஆயிரம் உரைக்கலாம். அவை, கிளர்ச்சியுண்டாக்கும் அரசியல் கட்டுரைகளாகக் கூட அமையும். ஆனால், அவற்றின் அரசியல்ரீதியிலான முக்கியத்துவம் என்பது மிகக் குறைவானது. எந்த வகையிலான முறுகலும் ராஜபக்‌ஷ தரப்பினைக் குறைந்தபட்சம், அடுத்த ஐந்து வருடங்களுக்கு உடைக்கப்போவதில்லை. அவர்களுக்குள் உள்ள எந்த முரண்பாடும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் வீட்டுவாசலைக் கடந்து சந்திக்கு வரப்போவதுமில்லை. ராஜபக்‌ஷ க்களின் பலம் என்பது அவர்களின் குடும்பம்தான். அதனை ராஜபக்‌ஷக்கள் மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். 20ஆவது திருத்தத்தினூடாக ஜனாதிபதி கோட்டாபயவிடம் அதிகாரங்கள் குவிவது என்பது பெரும் பனிமலையின் முகடு மட்டும்தான். இனிவரவிருப்பதுதான் இலங்கை மக்களுக்கு, குறிப்பாக தமிழ்த் தேசம் மற்றும் சிறுபான்மையினருக்கு பெரும் சவாலாக அமையக்கூடிய விடயம். அதுதான் புதிய அரசமைப்பு.

புதிய அரசமைப்பு என்பது, “சிங்கள-பௌத்த” தேசியத்தின் நலன்காக்கும் அரசமைப்பாக மட்டுமன்றி, அதன் நலன்களை முன்னிறுத்தும் அரசமைப்பாக இருக்கும் என்பது திண்ணம். இந்த முறை வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் ஆளும் மொட்டுக்கட்சிக்கும் (கிழக்கில்), அதன் ஆதரவு மற்றும் நேச சக்திகளுக்கும் (வடக்கில்) வாரி வழங்கிய குறிப்பிடத்தக்களவிலான வாக்குகள், அதன் மூலம் அந்தத் தமிழ்ப் பிரதிநிதிகள் இந்த “புதிய அரசமைப்புக்கு” வழங்கப்போகும் ஆதரவு, தமிழ் மக்கள் இந்தப் புதிய அரசமைப்புக்கு வழங்கிய அங்கிகாரமாக, பொருள்கோடல் செய்யப்படும் என்பதும் நிச்சயம். இதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். 2015-2020 வரை “நல்லாட்சி அரசாங்கத்தின்” பங்குதாரியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருந்தது என்பது வௌ்ளிடைமலை.

இந்தக் காலப்பகுதியில் வடக்கு-கிழக்கின் பொருளாதாரம் பற்றி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி இம்மியளவேனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யோசித்து, அதற்குரிய தீர்வுகளை நடைமுறைப்படுத்தியிருக்குமேயானால், வேலைவாய்ப்பு வேண்டித் தமது வாக்குகளை அடகுவைக்க வேண்டிய தேவை, தமிழ் மக்களுக்கு வந்திருக்காது. தேசியத்தை வாய்ச்சொல்லால் மட்டும் விற்றுப்பிழைத்துவிடலாம் என்ற கிழட்டுச் சிந்தனையை தமிழ் மக்கள் நிராகரிக்கத் தொடங்கிவிட்டதன் பட்டவர்த்தனமான சமிக்ஞை இது. ஆனால், இதன் விளைவுகூட தமிழ் மக்களை எதிர்மறையாகப் பாதிக்கத்தான் போகிறது.

13ஆம் திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்ற தீவிர “சிங்கள-பௌத்த” தேசியவாதிகளின் முப்பதாண்டுகளுக்கும் மேலான, அவா தற்போது நிறைவேறக்கூடிய வாய்ப்பு தென்படுகிறது. இந்தியா என்பது அதற்கான பெரும் முட்டுக்கட்டை. ஆனால், ராஜிவ் காந்தியின் 13ஆம் திருத்தத்தைப் பாதுகாக்க நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசாங்கம் எவ்வளவு அக்கறை காட்டும் என்பது முக்கியக் கேள்வி. இந்தியாவின் வௌியுறவுக் கொள்கை இன்னமும் தெற்காசியாவின் பெரியண்ணன் என்ற சிந்தனையின் தொடர்கிறதா என்பது அடுத்த கேள்வி. பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், இன்று நேபாளம் என அயல்நாடுகள் அனைத்துடனும் முறுகல் நிலையைச் சந்தித்து வரும் இந்தியாவுக்கு, இன்னோர் அயல் நாடுடன் முறுகலில் ஈடுபடும் சக்தி இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

மறுபுறத்தில் இந்திய நலன்கள் தொடர்பில் ராஜபக்‌ஷ அரசாங்கம் கவனத்துடன் நடந்துகொள்ளும்வரை, தமிழ் மக்கள் பற்றி இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்பது, இந்தியா இலங்கையில் தலையிடுவதற்கும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்குமான ஒரு துருப்புச் சீட்டு. அவ்வளவுதான். அதற்குத் தமிழ் மக்கள் மீதான கரிசனை, அக்கறை, மனிதாபிமானம் என, ஆயிரம் அலங்கார வார்த்தைகள் கொண்டு யாரும் அழகுசேர்த்துச் சொல்லலாம். ஆனால் அப்பட்டமான உண்மை யாதெனில், இந்தியாவின் அத்தனை நகர்வுகளும் இந்திய நலன் சார்ந்தது, மட்டுமேயன்றி வேறில்லை. ஆகவே, இன்றைய சூழலில் 13ஐத் தக்க வைத்துக்கொள்ள இந்தியா எவ்வளவு தூரம் அழுத்தம் கொடுக்கும் என்பது ஐயத்துக்குரியதே. 13ஆம் திருத்தமும் மாகாணசபைகளும் போய்விட்டால், தமிழ்த் தேசத்தின் அரசியல் நிலை என்ன?

(தொடரும்)