அரசியல் அநாதைகளாக காலி மாவட்ட தமிழர்கள்

தென் மாகாணத்தின் தலைநகரம் காலி மாநகரம். இந்நகரம் அமைந்துள்ள மாவட்டம் காலி ஆகும். இம்மாவட்டத்தின் நீண்ட எல்லையாக தென்பகுதியில் கடற்கரை அமைந்துள்ளது. வரலாற்றுச் சின்னமாகக் காணப்படும் காலி கோட்டை பிரசித்தமானது. இக்கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டதாக வரலாற்றுப் பதிவுள்ளது. ஒல்லாந்தர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்று இருப்பைக் கொண்டதாகக் குறிப்பிடப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலும் காலி மாநகரத்திலேயே உள்ளது.

காலி மாவட்டத்தில் பெரும்பான்மையாகச் சிங்கள மக்கள் வாழ்கின்ற போதிலும் தமிழர்களும், முஸ்லிம்களும் பரந்து வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் தமிழ்மொழி மூலம் கல்வி வழங்கும் பாடசாலைகள் பதினேழு உள்ளன. அவற்றில் தமிழ்ப் பாடசாலைகள் நான்கும், முஸ்லிம் பாடசாலைகள் பதின்மூன்றும் அடங்குகின்றன.

முதலிலே காலி மாவட்டத்தின் பண்டைய சிறப்பைக் கவனத்தில் கொள்வோம். காலி மாநகரிலே அமைந்துள்ள பழம் பெரும் சிவாலயமான அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இலங்கைத்தீவின் தென்பகுதியில் பண்டைய காலத்தில் அதாவது பலநூறு ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய தமிழ் அரசரான பாண்டியரின் செல்வாக்கு மேலோங்கியிருந்துள்ளது. வரலாற்றின்படி இலங்கையில் ஆண்ட சோழத் தமிழர்களுக்கு எதிராகப் போராடிய சிங்கள அரசர்களுக்குப் படையுதவி அளித்து உறுதுணையாகச் செயற்பட்டவர்கள் பாண்டியர்கள் என்பதும் வரலாற்றுப் பதிவாகும்.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தீபகற்பத்திலிருந்து வந்த விஜயன் இலங்கையில் கரையொதுங்கியதாக மகாவம்சம் உள்ளிட்ட வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் கரையொதுங்கிய விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும் பாண்டிய நாட்டிலிருந்து தமிழ்ப் பெண்களை வரவழைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், விஜயன் பாண்டிய இளவரசி​ெயாருவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும் இலங்கையின் பண்டைய வரலாறு கூறுகின்றது. இதன் மூலம் 2500 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே தென்னிந்திய தமிழ் அரசான பாண்டிய நாட்டுக்கும் இலங்கைக்குமிருந்த தொடர்பும், உறவும் தெளிவாக விளங்குகின்றன.

இந்நாட்டின் சிங்கள இனத்தவர்கள் விஜயன் வழிவந்தவர்கள் என்று கூறப்படுவது போன்று தாய்வழி முன்னோர்கள் பாண்டியத் தமிழ் வம்சாவளியினர் என்பது தெளிவாக உறுதிப்படுத்தப்படுகிறது. பண்டைய சிங்கள, தமிழ் உறவு மறுக்க முடியாத உண்மையென்பதை நம் நாட்டின் வரலாற்றுப் பதிவுகள் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன.

காலி மாவட்டத்தில் காணப்படும் இந்துக் கோயில்களில் பெரும்பாலானவை அம்மன் கோயில்களாகும். முருகன், விநாயகர், சிவன் கோயில்களுமுள்ளன. இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தில் மொத்தமாக 32 இந்துக் கோயில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

காலி நகர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் வாயில் தூண்களில் பாண்டிய அரசின் சின்னமான மீன் சின்னம் கருங்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளமை சிறப்புடன் குறிப்பிடக் கூடிய ஒன்றாகும். இராமாயண காலத்தில் இராம_ இராவண யுத்தத்தின் போது அனுமான் சஞ்சீவி மலையை வான்மார்க்கமாகக் கொண்டு வந்த போது அதிலொரு பகுதி காலியின் ஒரு பிரதேசத்தில் விழுந்ததாக நூல்களில் கூறப்படுகின்றது. உணவட்டுன்ன என்ற அந்த இடத்தில் அரிய மருத்துவ மூலிகைகள் இன்னும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அனுமானுக்கான கோயிலும் உள்ளது.

இம்மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் தேயிலை, கறுவாத் தோட்டங்களிலேயே வாழ்கின்றனர். குறிப்பிடக் கூடிய எண்ணிக்கையினர் நகர்ப்புறப் பகுதியிலும் வாழ்கின்றனர். காலி நகர் சூழ் பிரதேச செயலகப் பிரிவு சிங்களத்துடன் தமிழ் மொழிக்கும் சமத்துவ நிர்வாக உரிமையுள்ள பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழர்கள் எதுவித அரசியல் பிரதிநிதித்துவங்களும் அற்றவர்களாகவுள்ளனர். இம்மாவட்டத்திலுள்ள நான்கு தமிழ்ப் பாடசாலைகளும் எல்பிட்டிய மற்றும் உடுமக ஆகிய இரு கல்வி வலயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்பாடசாலைகள் நான்கும் தென்மாகாண சபையின் நிர்வாகத்திற்குட்பட்டவையாக இயங்குகின்றன.

எல்பிட்டிய கல்வி வலயம்:

எத்கந்துர பிரதேசத்திலுள்ள திலித்துற தமிழ் கனிஷ்ட வித்தியாலயமும், இகல்கந்தவிலுள்ள இகல்கந்த தமிழ் கனிஷ்ட வித்தியாலயமும் இக்கல்வி வலயத்திலுள்ள இரு தமிழ்ப் பாடசாலைகளாகும். முதலாவது பாடசாலை சாதாரண தரம் வரை வகுப்புகளைக் கொண்ட பாடசாலையாகும். மற்றைய பாடசாலை ஆரம்பப் பாடசாலையாகும்.

உடுகம கல்வி வலயம்:

இக்கல்வி வலயத்திலுள்ள இரு பாடசாலைகளான தல்கஸ்வல தமிழ் கனிஷ்ட வித்தியாலயமும், நாக்கியதெனிய தலங்கஹ சரஸ்வதி தமிழ் கனிஷ்ட வித்தியாலயமும் சாதாரண தர வகுப்பு வரையுள்ள பாடசாலைகாளாகும். சரஸ்வதி தமிழ்ப் பாடசாலையே இப்பாடசாலைகளில் அதிக அளவு மாணவ, மாணவிகளைக் கொண்ட பாடசாலையாகும்.

இம்மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளின் நிலைமை பின்தங்கியுள்ளது. அத்துடன் தமிழ்ப் பிள்ளைகள் கற்பதற்கு போதிய தமிழ்ப் பாடசாலைகளும் இல்லை. அதனால் பெருமளவு தோட்டப்புறத் தமிழ்ப் பிள்ளைகள் சிங்கள மொழிப் பாடசாலைகளில் இணைந்து அம்மொழியிலேயே கற்கின்றனர். கனிசமான பிள்ளைகள் முஸ்லிம் பாடசாலைகளில் கற்று வருகின்றனர்.

சிங்களப் பாடசாலைகளில் கற்கும் தமிழ்ப் பிள்ளைகள் பௌத்த சமயத்தையும் அதேபோல் முஸ்லிம் பாடசாலைகளில் கற்போர் இஸ்லாம் பாடத்தையும் கற்க வேண்டிய நிலைமைதான் உள்ளது. தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளோ, அவதானமோ காலி மாவட்ட தமிழ் மக்களை எட்டியும் பார்க்காத நிலையில் அவர்கள் மொழிமாற்றம், இன மாற்றம், மதமாற்றம் என்று பல மாற்றங்களுக்கு உட்பட்டுவருவது தவிர்க்க முடியாததாயுள்ளது.

இப்பகுதியிலுள்ள பல தேயிலைத் தோட்டங்களில் தண்ணீர்ப் பிரச்சினையும் அதிகமாகக் காணப்படுகின்றது. பொருளாதார ரீதியில் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கபபட்டு வேலைகளை இழப்பதால் வேலை தேடி அங்குமிங்கும் அலையும் நிலையும் காணப்படுகின்றது.

முன்பு சந்தாவுக்காகத் தொழிற்சங்கம் நடத்தப்பட்டது. இன்று அரசியல் செய்வதற்குப் போதிய வாக்காளர் இன்மையால் காலி மாவட்டத் தமிழர்கள் தமிழ் அரசியல்வாதிகளாலும், தமிழ் தொழிற்சங்கவாதிகளாலும் அநாதரவாக விடப்பட்டுள்ளனர் என்பதே உண்மை நிலை.