அரசியல் காரணங்களுக்காக பதற்ற நிலை மேலும் தொடரலாம்

மேற்குறிப்பிட்ட இருவரினதும் மற்றும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனினதும் இராஜினாமாவை வலியுறுத்தி, அத்துரலியே ரத்ன தேரர் அதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர், கண்டி தலதா மாளிகை வளவில், உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். அதனால், பௌத்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அந்த இடத்துக்குச் சென்ற பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், “நாளை (அதாவது திங்கட்கிழமை) நண்பகலுக்கு முன்னர், ரிஷாட்டும் அஸாத் சாலியும் ஹிஸ்புல்லாஹ்வும் பதவி நீக்கம் செய்யப்படாவிட்டால், நாடு முழுவதிலும் ‘செனகெலி’ (திருவிழா) நடைபெறும்” என்று கூறியிருந்தார்.

‘திருவிழா’ என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் பேருவளையில் நடைபெற்ற கூட்டமொன்றில், முஸ்லிம்களை இகழ்ந்தும் தாக்கியும் பேசிய போது, பேருவளை, அளுத்கம முஸ்லிம்களுக்கு ‘அபசரனய்’ என்ற புதிய சிங்கள சொல் ஒன்றின் மூலம் அச்சுறுத்தினார்.

அன்றே பேருவளை, அளுத்கம, வெலிபென்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்த நிலையில், ‘திருவிழா’ நடத்தப்படும் என்றால், என்ன என்பது மிகத் தெளிவாக இருந்தமையால், சம்பந்தப்பட்ட மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளும் இராஜினாமாச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இங்கே தெளிவாகவே, வன்செயலைத் தூண்டியவருக்கு எதிராகப் பொலிஸார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை; நடவடிக்கை எடுக்குமாறு எந்தவோர் அரச தலைவரும் பொலிஸாரைப் பணிக்கவும் இல்லை.

எனவே, அவர்கள் இராஜினாமாச் செய்யாதிருந்தால், பெரும்பாலும் நாடு முழுவதிலும் அல்லது பெரும்பாலான பகுதிகளில், முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கும்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களைத் தடுத்து, சிங்கள வாக்குகளை இழக்க விரும்பாத ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீது, நம்பிக்கை வைக்க முடியாது. ஜனாதிபதிக்கு நெருக்கமாக ரத்ன தேரர் இருந்தவர். அதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிராகப் பேரினவாதிகள் பெரும் கோஷத்தை நடத்திக் கொண்டு இருக்கும் போது, ஞானசார தேரரை மன்னித்து, சிறையிலிருந்து விடுதலை செய்தவரும் ஜனாதிபதியே.

2014ஆம் ஆண்டு பேருவளை, அளுத்கம போன்ற பகுதிகளிலும், கடந்த வருடம் காலியில் கிந்தோட்டையிலும் கண்டியில் திகன, தெல்தெனிய போன்ற பகுதிகளிலும் பொலிஸாரும் ஏனைய பாதுகாப்புப் படைகளும் தாக்குதல்களுக்கு இடமளித்துவிட்டு, பின்னர் தாக்குதல் நடைபெற்ற இடங்களுக்கு வந்ததாகவே கூறப்படுகிறது. சில இடங்களில் அவர்களின் கண் முன்னே தாக்குதல்கள் இடம்பெற்றன எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. எனவே பாதுகாப்புக்காக, முற்றிலும் பாதுகாப்புத் தரப்பினர் மீது தங்கியிருக்கவும் முடியாது. இந்த நிலையில் தாக்குதல்களைத் தற்காலிகமாகவேனும் தடுப்பதற்காக, இந்த இராஜினாமாக்கள் இன்றியமையாதவை என்றே கூற வேண்டும்.

உயிர்த்த ஞாயிறன்று, கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுடன், இந்த மூன்று அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் குற்றஞ்சாட்டியே பேரினவாதிகள், அவர்கள் இராஜினாமாச் செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்.

முஸ்லிம்களுக்கு எதிரான, மிக மோசமான பிரசாரத்தின் மத்தியிலேயே இம்மூவரும் இலக்கு வைக்கப்பட்டனர். ஆதாரமின்றி, மேற்கொள்ளப்பட்ட அந்த இனவாத நெருக்குதலால் இவர்கள் இராஜினாமாச் செய்ய நேர்ந்தமை அவர்களுக்கு மட்டுமன்றி, நாட்டில் வாழும் சகல முஸ்லிம்களுக்கும் தலைகுனிவுதான். ஆனால், அதைவிட, முஸ்லிம்களின் பாதுகாப்பு முக்கியமானதாகும்.

ரிஷாட்டின் இராஜினாமாவுக்கு முன்னரே, (ஹிஸ்புல்லாவினதும் சாலியினதும் இராஜினாமாச் செய்தியைக் கேட்டவுடனேயே) ரத்ன தேரர், தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். ஆனால், இரு ஆளுநர்களை விட, ரிஷாட் மீதே பேரினவாதிகளின் கோபம் அதிகமாக இருந்தது. எனவே, அவரும் இராஜினாமாச் செய்ய வேண்டிய நிலையிலேயே இருந்தார்.

இரண்டு ஆளுநர்களின் இராஜினாமாவை அடுத்து, திங்கட்கிழமையே அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமாச் செய்ய முன்வந்தமையால், ரிஷாட்டுக்கு ஏற்படவிருந்த தலைகுனிவு மறைக்கப்பட்டுவிட்டது. இந்த நெருக்கடியால், முஸ்லிம்களுக்கு ஏற்படவிருந்த தலைகுனிவும் குறைக்கப்பட்டது.

இந்த விடயத்தில், முஸ்லிம் அமைச்சர்கள் தமது சமூகத்தின் தலைகுனிவைக் குறைக்கக் கட்சிகளிடையிலான போட்டாபோட்டியை மறந்து, முன்வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக, பேரினவாதிகளின் தாக்குதலால் முஸ்லிம்கள் மத்தியில் பலம் பெற்றுத் தமக்கு சவாலாகி வரும் ரிஷாட்டை, அவர் எதிர்நோக்கியிருக்கும் இக்கட்டான நிலையில், தனிமைப்படுத்தாதிருக்க முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் முன்வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இராஜினாமாச் செய்த அமைச்சர்கள், ஒரு மாத காலத்துக்குள் குற்றஞ்சாட்டப்பட்ட இரு ஆளுநர்களுக்கும் ரிஷாட்டுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், விசாரணை செய்ய அவர்களுக்கு எதிராக, இரகசியப் பொலிஸாரிடம் முறையிடப் போவது யார்? அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களோ அல்லது உண்ணாவிரதமிருந்தவரோ முறைப்பாடு செய்யப் போவார்களா? அவ்வாறு, அவர்களிடம் அதற்கு ஆதாரம் இருந்தால், அவர்கள் இது வரை ஏன் இரகசியப் பொலிஸை அணுகவில்லை? பிரச்சினை இத்தோடு முடிவடையப் போவதில்லை. அரசியல் ரீதியாகப் பலருக்கு, தற்போதைக்கு வன்முறை இல்லாவிட்டாலும், பதற்ற நிலையாவது அவசியமாக இருக்கிறது.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிந்திருந்தும், அவற்றைத் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரச தலைவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளது. எனவே அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, சிலருக்கு ஏதாவது முக்கிய சம்பவங்கள் அவசியமாக இருக்கின்றன. அதற்கு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

அதேவேளை, சிறுபான்மை மக்களின் வாக்குகள் தமக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை அறிந்திருக்கும் எதிர்க்கட்சியினர், அவற்றைப் புறக்கணித்துவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள வாக்கு வங்கியை, மென்மேலும் சூறையாட முற்பட்டுள்ளனர். அதற்காக, அவர்களுக்குச் சிறுபான்மையினருக்கு எதிரான பிரசாரமொன்று அவசியமாகிறது. கிறிஸ்தவர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் அவர்களுக்கு நல்லதொரு நிலைமையை உருவாக்கிக் கொடுத்துள்ளது. எனவே, எதிர்க்கட்சியைச் சார்ந்த ஊடகங்கள், ஊடக ஆசாரங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, படு மோசமான முறையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அவர்கள் இந்தப் பதற்ற நிலைமையை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரை வைத்திருப்பார்கள் என்றே ஊகிக்க முடிகிறது. சிலவேளை, அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் வரை, அவர்கள் பதற்ற நிலையை வைத்திருக்கவும் கூடும். எனவே, பிரச்சினை இத்தோடு முடிவடைந்தது என்று திருப்தியடைய முடியாது.

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் நிலைப்பாடு

நாட்டில் பதற்றமான நிலை, மேலும் தொடரும் என்றே தெரிகிறது. அந்த நிலையிலேயே, பலர் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிப் பேசுகிறார்கள். இன்னுமொரு வகையில் பார்த்தால், பதற்ற நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப் போகிறது என்பதை விட, ஜனாதிபதித் தேர்தலைக் கருத்திற் கொண்டு, சில சக்திகள் நாட்டில் பதற்ற நிலை தொடரும் வகையில், மிகச் சாதுரியமாக நடந்து கொள்கிறார்கள்.

அரசமைப்பின்படி, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்துக்கும் இரண்டு மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், தேர்தல் நடைபெற வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தல், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியே நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கு அடுத்த நாள், அதாவது 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதியே பதவியேற்றார்.

ஜனாதிபதியின் பதவிக் காலம், ஐந்து ஆண்டுகளே எனக் கடந்த வருடம் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதியே முடிவடைகிறது. சட்டப்படி அதற்கு ஒரு மாதத்துக்கும் இரண்டு மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். அதாவது இந்த வருடம் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் டிசெம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், தேர்தல் நடைபெற வேண்டும்.

ஆனால், தேர்தல்கள் சனிக்கிழமைகளிலேயே நடைபெற வேண்டும் என, மற்றொரு சட்டம் கூறுகிறது. அதன்படி நவம்பர் 9, 16, 23, 30 மற்றும் டிசெம்பர் 07 ஆகிய திகதிகளில் ஒன்றிலேயே ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது சத்தியப் பிரமான வைபவத்தில் கலந்து கொள்ள, கடந்த வாரம் புதுடெல்லிக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டிசெம்பர் 07ஆம் திகதியே தேர்தல் நடைபெறும் என, இந்திய ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

நடைமுறையில், ஜனாதிபதிகள் விரும்பிய நாள்களிலேயே தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஏனெனில், தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதியின் கருத்தை மதிப்பார். ஆனால், சட்டப்படி தேர்தல் திகதியை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. அவருக்கு அதற்கு அதிகாரம் இல்லை. அதேவேளை, டிசெம்பர் மாதத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை நடைபெற இருக்கிறது. அப்பரீட்சை, டிசெம்பர் மாத ஆரம்பத்திலேயே ஆரம்பிக்கும். எனவே, ஜனாதிபதி குறிப்படும் நாளில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறுகள் குறைவாகவே தெரிகின்றன.

இத்தேர்தலில் போட்டியிட விரும்பும் பிரதான அரசியல்வாதிகள், இன உணர்வுகளைப் பாவித்தே களத்தில் இறங்கப் போகிறார்கள் என்பது தெளிவானதாகும். தாம் ஒரு முறை தான் ஜனாதிபதியாக இருப்போம் எனக் கூறி, பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, பின்னர் இரண்டாவது முறையாகவும் போட்டியிட விரும்பினார். எனவே தாம் மஹிந்த ராஜபக்‌ஷவை விடவும் சிங்கள பௌத்த இன உணர்வாளர் என்று காட்டிக் கொள்வதற்காக, அவர் ஆங்கிலேயர் இலங்கையை ஆளும் போது, துரோகிகள் எனப் பிரகடனப்படுத்தியிருந்த நூற்றுக்கு மேற்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களைக் கடந்த வருடம் இரண்டு முறைகளில் தேசப்பற்றாளர்களாக பிரகடனப்படுத்தினார்.

அத்தோடு அவர் சில மாதங்களுக்கு முன்னர், பௌத்தர்களின் பிரதான வேதக் கிரந்தமான திரிபீடகத்தைத் தேசிய மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தினார். அதனை, ஐ.நா மூலம் உலக மரபுரிமையாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளவும் நடவடிக்கை எடுத்தார். இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக, மிக ஆவேசமான வெறுப்புப் பிரசாரத்துக்கு மத்தியில், ஞானசார தேரரை விடுதலை செய்திருக்கிறார்.

ஆனால், அவருக்குப் போட்டியிடக் கட்சியொன்று இல்லைப் போல் தெரிகிறது. அவர் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மக்கள் ஆதரவை இழந்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 49 இலட்சம் வாக்குகளைப் பெறும் போது, ஸ்ரீ ல.சு.க 15 இலட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றது. எனவேதான், அவர் மஹிந்தவைத் திருப்திப்படுத்தி பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் நோக்கில், கடந்த ஒக்டோபர் மாதம், ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மஹிந்தவைப் பிரதமராக நியமித்தார்.

ஆயினும், அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. பொதுஜன பெரமுனவின் சார்பில், முன்னாள் பாதுகாப்புச் செய்லாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ போட்டியிட முன்வந்துள்ளார். மஹிந்தவின் குடும்பம் அதனை விரும்பவில்லை என்று கூறப்பட்ட போதிலும், தாம் போட்டியிடப் போவதாகக் கோட்டாவே அறிவித்திருக்கும் நிலையில், யாராலும் இப்போது தடுக்க முடியாது.

உயிர்த்த ஞாயிறன்று, பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றவுடன், முஸ்லிம் பயங்கரவாதத்தை அடக்குவதற்காகத் தாம் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்தார். இது சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் முஸ்லிம் விரோத உணர்வுகளை பாவித்து, அரசியல் இலாபம் அடைய மேற்கோள்ளும் முயற்சியேயன்றி வேறொன்றுமல்ல.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லிம்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எவராக இருந்தாலும், அவரே வெற்றி பெறும் சாத்தியங்கள் அதிகமாகத் தெரிகின்றன. தமக்கு எதிராக, மஹிந்த அணியினர் இப்போது மேற்கொண்டு வரும் மிக மோசமான பிரசாரங்களால், முஸ்லிம்கள் ஐ.தே.கவுக்கே ஒட்டுமொத்தமாக வாக்களிக்க முற்படலாம். ஆனால், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றிபெற்றால், முஸ்லிம்கள் பழிவாங்கப்படுவதற்கு அது மேலும் ஒரு காரணமாகலாம். முஸ்லிம்கள் என்ன செய்வார்கள்?