அரசியல் தேக்க நிலையை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் இணக்கம்

தற்போதைய அரசியல் தேக்க நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்ைககளையும் மேற்கொள்ள, ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பிரதமர் ஆகியோர் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதில் அவர்கள் கரிசனை கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசியல் நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்காக எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை இணைந்து செய்வதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடன்பாட்டுக்கு வந்திருப்பதானது நாட்டில் விரைவில் அரசியல் திருப்பமொன்று ஏற்படலாமென்று நம்பப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 30) நடத்திய பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நடந்தது. அதில் முடிவுகள் எவையும் எட்டப்படாதபோதிலும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையின்போது தற்போதைய அரசியல் நெருக்கடியை, பொருளாதார நெருக்கடியாக மாறும் முன் அதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். குறிப்பாக, 2019இற்கான வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான நடவடிக்ைககளுக்குத் தேவையான பணத்தை இடையூறு இல்லாமல் பெற்றுக்ெகாள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பெரும்பான்மையை நிருபிப்பார் என்று ஜனாதிபதி கருதும் வேட்பாளருக்குத் தமது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தச் சந்திப்பின்போது உடன்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்ைக விடுத்தனர். எனினும், ஜனாதிபதி தொடர்ச்சியாக மறுதலித்ததன் காரணமாக, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, பாராளுமன்ற சிரேஷ்ட உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோரின் பெயர்கள் பிரதமர் பதவிக்காக முன்வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரில் ஒருவரும்

பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடியவர்கள் என்று அச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது கட்சி அரசியலைப்பற்றியல்லாமல், நாட்டின் நலன் கருதி முடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்ெகாண்டுள்ளார்.

மேலும், ஓர் இணக்கமான முடிவை எட்டுவதற்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் பசில் ராஜபக்‌ஷவும் கூட உடன்பாட்டுக்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன. பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்குப் பிரதமர் பதவியை வழங்க வேண்டும் என்பதை இருவரும் ஏற்றுக்ெகாண்டுள்ளபோதிலும் அவர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் அதனை விரும்பவில்லை என்றும் தொடர்ந்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. அதேநேரம், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பதவி விலகும் யோசனையை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணாயக்கார ஆகியோர் கடும் ஆட்சேபனையைத் தெரிவித்திருப்பதுடன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அடுத்து வரும் சில தினங்களில் ஜனாதிபதி வாபஸ்பெறக் கூடுமென்றும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், அடுத்த புதன்கிழமை (05) பாராளுமன்றம் கூடுகின்றபோது மற்றொரு நம்பிக்ைகயில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.