‘ஆடு’ நனைகிறதென்று ‘அமெரிக்கா’ அழுததாம்…

ஒருபுறம், உள்நாட்டில் அமெரிக்காவுக்கு எதிரான மனோநிலை தீவிரமடைந்துள்ளது. இது, எதிர்வரும் பொதுத்தேர்தலில், ஆளும் கூட்டணி எதிர்பார்த்திருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நோக்கி, அவர்களை நகர்த்தும்.

மறுபுறம், தமிழ்த் தரப்புகள் அமெரிக்கா, இன்னமும் தமிழர்கள் பக்கம் நிற்கிறது என்ற ‘புருடா’வை, இன்னொரு முறை எந்தவொரு வெட்கமும் இல்லாமல் சொல்வதற்கும் வழிவகுக்கும். இவற்றுக்கு மேல், இதன் பயன் ஏதுமில்லை.

அமெரிக்காவின் இந்தத் தீர்மானம், தமிழர்கள் மத்தியில் சிலாகிக்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்கள், புளகாங்கிதம் அடைந்துள்ளார்கள். ‘இன்னொரு ஜெனீவா விஜயம் உறுதி’ என, வழமையான ‘ஜெனீவா புரோக்கர்’கள் அகமகிழ்ந்தனர். அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் ‘அந்தர்பல்டி’ அடிக்கத் தெரிந்தவர்களுக்கும் மகிழ்ச்சிதான்!

இந்தப் பயணத் தடை, நகைச்சுவையானது. இதே அதிகாரி, அமெரிக்காவில் ஐ.நா அலுவலகத்தில், இலங்கையின் துணைப் பிரதிநிதியாகப் பணியாற்றிய போது, இவர் குற்றவாளியாகத் தெரியவில்லை; இப்போது தான் தெரிகிறார்.

இப்போதுதான் இவரது குற்றங்கள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டதா அல்லது, ‘அனைத்தும் நாமறிவோம்’ என்று சொல்லும் அமெரிக்காவுக்கு, இப்போதுதான் தெரியும் என்று நாம் நம்பவேண்டுமா? ‘கொப்பிக்குள் வைத்த மயிலிறகு குட்டி போடும் என்று’ சிறுபராயத்தில் நாம் நம்புவது போல!

இறுதிப் போர் நடந்தபோது இல்லாத அக்கறை, போர் முடிந்த பின்னர், முட்கம்பி வேலிகளுக்குள் இருந்தபோது இல்லாத அக்கறை, பின்னர், நல்லாட்சியோடு கூடிக்குலாவியபோது இல்லாத அக்கறை, இப்போது எங்கிருந்து, ஏன் திடீரென்று வந்தது?

அச்சப்பட நிறையவே இருக்கின்றன. இன்னொரு முறை, தமிழர்களின் பெயரால், அவர்களின் அரசியல் அரங்கேறுகிறது. MCC, சீனா என எத்தனையோ ஆக வேண்டியிருக்கிறது; அதுதான் ஓநாய் அழுகிறது. ஆனால், ஆடு நனைவதற்கு அது அழுகிறது என்று, நாம் நம்பவைக்கப்படுகிறோம்.

இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்பையும் இருப்பையும் அடையாளத்தையும் உறுதிப்படுத்துகிற தீர்வு பற்றி, அமெரிக்காவுக்கு அக்கறை இருக்கிறது என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

புலம்பெயர் தமிழர்களும் அமைப்புகளும் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் நிலைப்பாட்டை, இலங்கைத் தமிழருக்குச் சாதகமான திசையில் திருப்ப வல்லவர்கள் என்று, நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

மேற்குலக அரசியல் தலைவர்களுக்கு, இந்தவிதமான அக்கறை உண்டு என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

இதில் ஒரு பகுதியை நம்புவதற்கு, அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பு, பலருக்கு நியாயம் இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அந்த நியாயம் தொடர்ந்தது. அதற்குப் பிறகும், மேற்குலகு பற்றிய ஒரு நம்பிக்கை, இன்னோர் ஐந்து வருடங்கள் தொடர ஏதோ நியாயம் இருந்தது.

ஆனால், ஒரு கொடிய போரின் முடிவும் அதைத் தொடர்ந்த அகதி வாழ்வும் வாய்க்கப் பெற்ற பின்னர், நம்பிக்கை வைக்க என்ன இருக்கிறது?

அமெரிக்கா, இலங்கையில் பூரண கட்டுப்பாட்டை வேண்டுகிறது. அது, இயலாமல் போயுள்ள நிலையில், இலங்கைக்குக் குழி பறிக்கிறது. இலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு, தேசிய இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அமைதியான எதிர்காலம் ஆகிய எல்லாவற்றுக்குமே அது தொடர்ந்து குழிபறித்து வந்துள்ளது. ஆனால், அமெரிக்கா மீதான நம்பிக்கை, இன்னமும் தமிழ் மக்கள் மத்தியில் குறையவில்லை.

தமிழ் மக்கள், இன்னமும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மனந்திருந்தி, தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று எதிர்பார்ப்பவர்களாகவே இருப்பதில் வியக்க ஒன்றும் இல்லை.

ஏனெனில், தமிழ்ச் சமூகத்தில் பெரும் பகுதியானோர் இன்னமும் பகுத்தறிந்து பார்க்கும் சிந்தனைக்குத் திரும்பவில்லை. இன்னமும், தமிழரின் வசதி படைத்த வர்க்கத்தினரிடையே, ‘வெள்ளைக்காரர் நியாயமானவர்கள்’ என்கிற சிந்தனைப்போக்கு வலுவாகவே உள்ளது.

இப்போதும், அமெரிக்காவை நம்பச் சொல்கிறவர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள்.
அமெரிக்காவையும் மேற்குலகையும் விட்டால் போக்கிடம் இல்லை என்று நம்பச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் இப்போதைய அறிவிப்பை, தமிழ் மக்களுக்கான நீதிக்கான தொடக்கம் என்பவர்களும் அதை நம்புபவர்களும், தொடக்கத்தில் சொன்ன பழமொழிக்குப் பொருத்தமான சொந்தக்காரர்கள் ஆவார்கள்.