ஆர்ப்பாட்ட உலகம்

பொதுவாகப் பார்த்தால் ஆயிரம் ஆயிரம் கிலோமீற்றர்கள் தொலைவில் இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் வீதிக்கு இறங்கியதில் ஒற்றுமைகள் பல உண்டு. இதில் சில நாடுகள் மற்றைய நாடுகளை பார்த்து வீதிக்கி இறங்கிய காரணிகளும் உள்ளன.

இதில் முக்கியமான காரணியாக விலை அதிகரிப்புகள் ஆர்ப்பாட்டங்களை தூண்டியிருக்கின்றன.

ஈக்வடோரில் கடந்த மாதம் போராட்டம் வெடித்ததற்குக் காரணம் எரிபொருள் மானியத்தை அரசாங்கம் திடீரென நீக்கியது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு ஏற்ப ஈவடோர் அரசு இந்தக் காரியத்தைச் செய்தது.

திடீரென்று எரிபொருல் விலை ரொக்கெட் வேகத்தில் ஏற அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வறிய அடித்தட்டு மக்கள்.

நெடுஞ்சாலைகளை மூடி, பாராளுமன்றத்தை முடக்கி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட மீண்டும் எரிபொருள் மானியத்தை கொண்டுவருவதைத் தவிர அரசுக்கு வேறு வழியிருக்கவில்லை.

ஈரானிலும் இதே கதைதான். அங்கேயும் எரிபொருள் மானியத்தை நீக்க மக்கள் வீதிக்கு இறங்கியபோது அதனை அரசு கையாண்ட விதம் வேறு. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் பலப்பிரயோகத்தை மேற்கொண்டபோது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் அரசு தலைகுணியவில்லை, ஆர்ப்பாட்டங்கள் இப்போது தணிந்திருக்கின்றன.

சிலியிலும் போக்குவரத்துக் கட்டணம் அதிகரித்ததே பெரும் ஆர்ப்பாட்டமாக வெடித்தது. உச்ச எரிபொருள் விலையும் நாணயத்தின் மதிப்பு இழந்திருப்பதுமே கட்டணம் அதிகரிக்கக் காரணம் என்று அரசு கூறினாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்பதாக இல்லை.

இத்தனைக்கும் சிலி என்பது ஒப்பீட்டளவில் லத்தீன் அமெரிக்காவின் செல்வந்த நாடுகளில் ஒன்று. ஆனால் அங்கே ஏற்றத்தாழ்வு அதிகம் என்பது பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

லத்தீன் அமெரிக்காவின் இந்த ஆர்ப்பாட்ட வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் நாடு கொலம்பியா. அடிப்படைச் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வரிச் சீர்திருத்தங்களுக்கு எதிராகவே மக்கள் வீதிக்கு இறங்கி இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் அமைதியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க படையினர் பலப்பிரயோகத்தை மேற்கொண்டதால் தீவிரம் அடைந்து அரசுக்கு தலையிடியாக மாறியிருக்கிறது.

லெபனானிலும் இதே நிலைதான், வட்ஸ் அப் அழைப்புகளுக்கு அரசு வரியை அதிகரித்தபோது அது இத்தனை தலையிடியாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நாட்டில் ஏற்கனவே இருக்கும் பொருளாதார பிரச்சினை, ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழல்கள் இந்த வட்ஸ்அப்பின் தலையில் விடிந்தது.

பல நகரங்களிலும் ஒருங்கிணைக்கப்படாத ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானது. பின்னர் அது அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக தீவிரமடைந்து பிரதமர் சாத் ஹரிரி பதவி விலகும் அளவுக்கு மோசமடைந்தது. ஒட்டுமொத்த அரசியல் முறையையே மாற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் இன்று நீடிக்கிறது.

அரசாங்கத்தின் ஊழல்கள், பொருளாதாரக் கொள்கைகளே இப்போதைய பிரச்சினைக்கு காரணம் என்று சராசரி மக்கள் கூறுகிறார்கள்.

“நாங்கள் வட்ஸ்அப்புக்காக இங்கு வரவில்லை. எரிபொருள் விலை, ரொட்டி விலை எல்லாவற்றுக்காகவுமே இங்கு வந்திருக்கிறோம்” என்று பெய்ரூட்டில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான அப்துல்லாஹ் கூறுகிறார்.

எப்போதும் இல்லாத வகையில் லெபனான் பெரும் பொருளாதார நெருக்கடி ஒன்றுக்கு முகம் கொடுத்திருக்கிறது. அங்கே கடன் சுமை உச்சத்தில் இருக்கிறது. பண மதிப்பும் குறைந்திருக்கிறது. என்ன ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் அங்கே ஓர் இரவில் எல்லாம் மாறிவிடாது. லெபனான் பெரும் பிரச்சினை வலைக்குள் சிக்கி இருப்பது பார்க்கத் தெரிகிறது.

லெபனானை விடவும் ஈராக்கின் நிலைமை படு மோசம். அங்கே எல்லாமே பிரச்சினைதான். ஊழல், பொருளாதார நெருக்கடி, பொதுச் சேவையை மேம்படுத்துவது என்று பல கோரிக்கைகளுடன் வீதிக்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை இராணுவத்தினர், பொலிஸார் துப்பாக்கிகளுடனேயே வரவேற்றார்கள்.

பலநூறு பேர் கொல்லப்பட்டார்கள். ஆர்ப்பாட்டங்கள் முடியவும் இல்லை, அவர்களுக்கு எதிராக வன்முறைகள் முடியவும் இல்லை. இதற்கு தீர்வு கொடுக்கும் திறமையும், திராணியும் அரசாங்கத்திற்கும் இல்லை.

ஆனால் ஐந்து மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் ஹொங்கொங் ஆர்ப்பாட்டம் வித்தியாசமானது. அரசியல் சுதந்திரம், சீனாவின் தலையீட்டை எதிர்த்து இளைஞர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் போராடி வருகிறார்கள்.

குற்றப் பின்னணி கொண்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்துவது குறித்த சட்டமூலம் ஒன்றுடன் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் இப்போது ஜனநாயக போராட்டமாக மாறியிருக்கிறது.

ஹொங்கொங் சீனாவின் ஓர் அங்கம் என்றாலும் அந்தப் பிரதேசத்திற்கு சுயாட்சி அந்தஸ்த்துகள் சிறப்புச் சுதந்திரங்கள் இருக்கின்றன. ஆனால் சீனாவின் செல்வாக்கு அங்கே நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபத்திற்குக் காரணம்.

அமைதியான ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியபோதும் யாரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அண்மையில் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவாளர்கள் அமோக வெற்றிபெற்று சீனாவுக்கு வலுவான செய்தி ஒன்றை கூறியிருக்கிறார்கள். சீனாவோ, எப்படி இருந்தபோதும் ஹொங்கொங் என்பது சீனாவின் ஒரு பகுதி என்று கூறி தனது நிலைபாட்டில் உறுதியாகவே இருக்கிறது.

ஸ்பெயினின் கட்டலோனியா பிராந்தியத்திலும் இதே நிலைமை தான். ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து தனி நாடாவதற்காக அங்கு போராட்டம் முடிந்தபாடில்லை. கட்டலோனிய தலைநகர் பார்சிலோனா வீதிகளில் அடிக்கடி ஆயிரக்கணக்கான மக்கள் கூடி பெரும் போராட்டம் நடத்துவார்கள். ஆனால் ஸ்பெயின் மத்திய அரசு கண்டுகொள்வதாக இல்லை.

மற்றொரு பரபரப்பான சூழல் நிலவும் நாடு பொலிவியா. அங்கே ஒரு தசாப்தத்திற்கு மேலே தனிக்காட்டு ராஜாவாக இருந்த எவோ மொராலஸ் மற்றொரு தவணைக்காக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது அதிகமானோருக்கு பிடிக்கவில்லை. வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்க மொராலஸ் இரண்டு வாரங்களுக்கு முன் பதவியை இராஜினாமா செய்து கொலம்பியாவுக்கு தப்பியோடினார். பிரச்சினை முடிவதாக இல்லை. இப்போது அங்கே மொராலஸ் ஆதரவாளர்கள் தீவிரமாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

நலிவடைந்தவர்கள், இளைஞர்கள், சம்பிரதாய அரசியல் கலாசாரத்தை எதிர்ப்பவர்கள் என்று உலகெங்கும் பரவி இருக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பவர்களை பொதுவாக வரையறுத்துவிடலாம். என்றாலும் இது எத்தனை அளவுக்கு சமூக, அரசியல் மட்டத்தில் தாக்கம் செலுத்தும் என்று கூற முடியாது.

எஸ். பிர்தெளஸ்