இடைக்காலத் தடை விதித்திருப்பது நீதித்துறையின் சுயாதீனத்தைக் காட்டுகிறது

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது நீதித்துறையின் சுயாதீனத்தைக் காட்டுகிறது.

“இலங்கையில் நீதித்துறையும் அரசியல் அதிகாரத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளது. நீதியாளர்களும் விலைபோயிருக்கிறார்கள்” என்று சொல்லப்பட்ட அபிப்பிராயங்களுக்கு மாறாகவே உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது ஓரளவு ஆறுதலளிக்கும் விசயம்.

இது இறுதித்தீர்ப்பல்ல என்றாலும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் உத்தரவை நீதித்துறை சுயாதீனமாக மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், யதார்த்தத்தில் அரசியல் நெருக்கடிகள் வலுக்கப்போகின்றன. அதுவும் நாட்டுக்குப் பாதிப்பே.

தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் நிலவரங்கள் நமக்குச் சில சேதிகளைச் சொல்லியிருக்கின்றன.

1. அரசியலமைப்புக் குறித்த விழிப்புணர்வு சற்று பொதுமக்களிடத்திலும் ஏற்படுவதற்கான வாய்ப்பு.

2. அரசியலமைப்பை தெளிவாக – ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் உருவாக்கவில்லை என்றால் அது அரசியல் நெருக்கடியை உண்டாக்கும் என்பது.

3. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு எதிராக உச்ச நீதிமற்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடியும் என்பது.

4. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் உத்தரவு சட்டரீதியாக தவறு என்றால் அதையிட்டு உச்ச நீதிமன்று மறுமுடிவு (தீர்ப்பு) வழங்கும் என்பது.

5. எத்தகையதொரு அரசியல் அதிகாரம், அரசியல் செல்வாக்கு, பணம் ஆகியவற்றினால் எல்லாச் சந்தர்ப்பத்திலும் எல்லோரையும் விலைக்கு வாங்க முடியாது, நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது என்பது.

6. தமக்கு அரசியல் நெருக்கடி ஏற்படும்போது மட்டும் ஜனநாயக நெருக்கடி எனக் கூச்சல், கூப்பாடு போடுவோர், நீதிமன்றத்தை நாடுவோர், சட்டரீதியான நடவடிக்க எடுக்க முனைவோர் எல்லாம் தமக்கு அப்பால் நிகழ்ந்த – நிகழும் மனித உரிமை மீறல், ஜனநாயக விரோதம் போன்றவற்றில் அமைதி காத்தல். பாராமுகமாக இருத்தல். கண்ணை மூடி அந்த அநீதியைக் கடத்தல் என்பது.

7. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கொண்டுள்ள அக்கறையைக் காட்டிலும் ஐ.தே.க அரசை (ரணில் விக்கிரமசிங்கவை) காப்பாற்றத் துடிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறங்காப் பணிகள். தீவிர உழைப்பும் விசுவாசமும் சாதனையும்.

8. இலங்கை மீதான மேற்குலகத்தின் செல்வாக்கு. அதைப் பிரயோகிக்கும் வடிவங்கள். அந்தச் செல்வாக்கிற்குட்பட்டிருக்கும் தரப்புகள்.

9. நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருப்பவரின் (ஜனாதிபதியின்) தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் நாட்டில் எத்தகைய குழப்பங்களையும் நெருக்கடிகளையும் உருவாக்கியுள்ளன என்பது.

10. அரசியல் குழப்பங்கள், அரசியலமைப்புப் பற்றிய பிரச்சினைகள் போன்றவற்றுக்குக் காரணமான அரசியல் தரப்புகள்.

11. இவ்வாறு ஜனநாயக மீறல்கள், மனித உரிமை மீறல்கள் அனைத்துக்கும் எல்லாத் தரப்புகளும் இணைந்து முயற்சித்தால் நாட்டை விரைவில் ஜனநாயக விழுமியங்களினால் மேலுயர்த்தலாம் என்பது

12. இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர் அல்லாத ஏனைய தேசிய இனங்களின் உரிமை மீறல்களுக்கும் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கும் எதிராக ஜனநாயக – முற்போக்குச் சக்திகள் இவ்வாறு கிளர்ந்தெழுவார்களா? போராடுவார்களா? நீதியை நாடுவார்களா என்பது.

(Karunakaran Sivarasa)