இந்திய வம்சாவளித் தமிழர் என்றே அழைக்கப்பட வேண்டுமா?

(சாகரன்)
“….தொடர்ந்தும் மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் இந்திய வம்சாவளித் தமிழர் என்றே அழைக்கப்பட வேண்டுமா? அவர்கள் இலங்கை நாட்டுக்குரியவர்கள். அவர்கள் இலங்கைத் தமிழர்களாகக் கொள்ளப்படுதல் வேண்டும். அதற்கு வடகிழக்கு தமிழர்கள் என்ன கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிய ஆவலாக உள்ளேன்……” – அநுரகுமார திஸநாயக்க ( எதிர்கட்சி பிரதம கொறடா, தலைவர் JVP)


‘……தமிழர்களே கணக்கில் எடுக்கவிரும்பாத ஒரு விடையத்தை இந்த சிங்கள அரசியல்வாதியின் தமிழர்நலன்சார்ந்த இந்தத சிந்தனை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இலங்கையில் தமிழர்கள் குடிசன வீழச்சியை எதிர்நோக்குகின்ற இந்த காலத்தில் இவரின் இந்த கருத்து மிக முக்கியமானது. குமாரண்ணே! வடக்கு-கிழக்கில் வாழும் மக்களஇன் கருத்து ஒருபுறம்இருக்கட்டும் முதலில் மலையகத்தில் உள்ள இவர்கள் உங்கள் யோசனையை ஏற்றுக்கொள்வார்களா? அவர்கள் சிங்களவரைவிட யாழ்ப்பாணத்தவரையே அதிக அச்சத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்கின்றனர். இந்த நிலையை எப்படி மாற்றப்
போகின்றீர்கள்? ‘– என்கின்றார் ராஜன் செல்வபதி
அநுரகுமார சோமவன்சவிடம் இருந்து ஜேவிபி இன் பொறுப்புக்களை எடுத்த பின்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். நம்பிக்கை ஊட்டும் விதமாக இடதுசாரிகள் என்ற கூறிக்கொள்ளும் இவர்கள் ஏதாவது செய்வார்களா? என்று. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை வெறும் பயங்கரவாதப் போராட்டமாகவும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை இந்திய விஸ்தரிப்புவாதத்திற்குள் என்று முடக்க நினைத்ததையும்… சரி இலங்கை அரசியல் அமைப்பிற்குள் கிடைத்த மாகாண சபை முறமையை முழுமையாக எதிர்த்தது மட்டும் இல்லாது இதனை ஆதரித்த சிங்கள இடதுசாரிகளை வகை தொகையில்லாமல் கொல்ல முற்பட்டதையும் இறுதியில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை நீதிமன்றம் ஏறி இரண்டாக பிரித்து தமிழ் மக்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகளையும் சிதைத்தவர்கள் இவர்கள். சுனாமி எற்பட்ட போது சிங்களப் பிரதேசங்கள் எங்கும் இருந்து கடகத்தில் தலையில் சுமந்த வண்ணம் சிறப்பாக கிழக்கு மாகாணத்திற்கு நிவாரணம் செய்த நல்ல விடயங்களை மட்டும் இங்கு குறிப்பிடாமல்விட முடியவில்லை. கூடவே தென்னிலங்கையில் பேரினவாதிகளின் தமிழருக்கு எதிராக கலவரங்களை தடுப்பதிலும் சிறப்பாக செயலாற்றி இருந்தனர். இது நடைபெற்றது புலிகளின் பிரசன்ன காலத்தில் புலிகளின் குண்டு வெடிப்புக்களின் அப்பாவி சிங்கள் மக்கள் தென்னிலங்கையில் மரணித்த போது ஏற்படும் கலவரங்களை தடுத்து நிறுத்தியதில் இவர்களுக்கு கணிசமான பங்கு உண்டு. காலித்துறைமுகக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து காலியில் எற்பட்ட இனக்கலவரப் படபடப்பை தடுத்ததும் இவர்களே. ஆனாலும் தமிழ் மக்களைத் தேசிய இனமாக எற்றுக் கொள்ளாததையும். சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்ததையும் புரிய முடியவில்லை. தற்போது நடைபெறும் அரசியல் தீர்விற்கான முன்னெடுப்புக்களில் எந்த எதிர் மறையாக செயற்பாடுகளையும் செய்யாது இருப்பது நம்பிக்கை ஏற்படுத்துகின்றது. யாழ்பாணக் கிளையை ஆரம்பித்து இதற்கு சந்திரசேகரனை பொறுப்பாக நியமித்தது நல்ல முன்னேற்றகரமான விடயம். இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் எங்கள் மலையக மக்களைப்பற்றிய இவரின் கூற்று எந்த மிதவாதத்தலைவர்களும் கூறாத விடயம் கூட என்னை மிகவும் சிந்திக்க வைக்கின்றவிடயமும் கூட.
ஒரு சமயம் ஸ்கைப்பில் தனது தோழர்களுடன் கலந்துரையாடிய போது பார்வையாளராக அந் நிகழ்வில் கலந்து கொண்டு எனது கேள்விகளுக்கு அளித்த பதில்களில் இருந்த அரசியல் நேர்மை என்னை கவர்ந்ததும் என்னவோ உண்மைதான். ஆனாலும் இன்னும் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் சந்தேகங்கள் முரண்பாடுகள் இவர்கள் பற்றி என்னிடம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனாலும் ஒரு பொது வெளியில் சௌகரியமாக அரசியல் கதைக்கக் கூடிய அளவிற்கு அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள் இவர்கள்.