இந்தோனேசியா முதல் இலங்கை வரை: அதிமனிதர்களுக்கான ஆவல்

உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் உலகின் மிக அதிகளவிலான முஸ்லிம்களைக் கொண்ட நாடாகவும் விளங்கும் இந்தோனேயாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் திங்கட்கிழமை வெளியாகின. அங்கும் தேர்தல் பரப்புரைகள், அதைச் சூழ்ந்த கதையாடல்கள், பொய்கள், கட்டுக்கதைகள் என்பன ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பெரிது.

இந்தோனேசிய ஜனாதிபதித் தேர்தல் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை நோக்குவதற்கான சில குறிகாட்டிகளை விட்டுச் சென்றுள்ளன. அவற்றை இங்கு நோக்கலாம். குறிப்பாக இந்தோனேசியாவின் கதை எமது கதைபோலவே தெரியக்கூடும். அரசியலின் அவலமும் ஆச்சரியமும் அங்குதானே ஒளிந்து கிடக்கிறது.

உலகின் அதிமோசமான சர்வாதிகார ஆட்சி இருந்த நாடுகளில் இந்தோனேசியாவுக்குச் சிறப்பிடம் உண்டு. 1965இல் இராணுவச் சதி மூலம் சுகர்னோவின் ஆட்சியை வீழ்த்திச் ஜனாதிபதியான இராணுவத் தளபதி சுகார்த்தோ 1998இல் பதவிவிலகும் வரையான 33 ஆண்டுகட்கு இராணுவத் துணையுடன் இந்தோனேசிய சர்வாதிகாரம் தொடர்ந் தது. 5 மில்லியன் உறுப்பினர்களுடன், ஆட்சியில் இல்லாத அதிபெரிய கம்யூனிஸ்ட் கட்சியாயிருந்த இந்தோனீசியக் கம்யூனிஸ்ட் கட்சி சர்வா திகாரம் நடைமுறைக்கு வந்து ஒரே ஆண்டில் முற்றாக அழிக்கப் பட்டது. 1965-66 காலப்பகுதியில் ‘கம்யூனிஸ்ட் களையெடுப்பு’ நிகழ்ச்சி நிரலின் கீழ் 3 மில்லியன் கம்யூனிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலையான இதுபற்றி அதிகம் பேசப்படுவதில்லை. சுகார்த்தோவிற்கு இருந்த அமெரிக்க ஆதரவும் ஆசியாவில் கம்யூனிஸ்ட் களையெடுப்புக்கு மேற்குலக ஆதரவும் இக் கொலைகளை மழுப்ப உதவின.

சர்வாதிகார ஆட்சி முடிந்து 16 ஆண்டுகளின் பின், 2014ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரி சுகார்த்தோவின் மருமகனும் முன்னாள் இராணுவ லெப்டினட் ஜெனரலுமான பிரபோவோ சுபைன்டோ குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். மூன்று தசாப்தங்கட்கு மேல் இராணுவ சர்வாதிகாரக் கொடுமைகளை அனுபவித்த இந்தோனேசியர்கள் ஏன் இன்னொரு சர்வாதிகாரி ஜனாதிபதியாவதை விரும்பினர் என்பது ஆய்வுக்குரியது.

இன்று 5 ஆண்டுகள் கழித்து மீண்டுமொருமுறை சுபைன்டோ 2014இல் வென்று ஜனாதிபதியாகிய ஜோகோ விடோடோவிடம் இம்முறையும் தோல்வியைத் தழுவியுள்ளார். ஆனால் இப்போதைய தேர்தல் முடிவுகளை அவர் ஏற்க மறுத்துள்ள நிலையில் இந்தோனேசியா போராட்டங்களினால் நெருக்கடிக்கு ஆளாகும் என்றவொரு எதிர்பார்ப்பும் உள்ளது.

இன்றைய இலங்கையின் திசைவழிகளை நோக்குகையில் பிரபோவோவின் கதை கவனிக்கத் தக்கது. அது பல இடங்களில் இலங்கையை நினைவூட்டும். இந்தோனேசிய இராணுவத்தில் பணியாற்றிய. பிரபோவோ இராணுவ உயர் பதவி பெறாதபோதும் சர்வாதிகாரி சுகார்த்தோவின் இரண்டாவது மகளைத் மணந்ததன் மூலம் தனது செல்வாக்கை உருவாக்கினார். அதன் பயனாக அவரது சகோதரர் இந்தோனேசியாவின் முக்கிய பணக்காரர்களில் ஒருவரானார்.

2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 2012ஆம் ஆண்டே ஆயத்தங்களைச் செய்தார். தனக்கென ஒரு அரசியற் கட்சியைத் தொடங்கினார். அதில் இராணுவத்தில் தனக்கு நெருக்கமாக இருந்தவர்கள், கடும்போக்குத் தேசியவாதப் பிரசாரகர்கள், வியாபாரிகள் ஆகியோரை இணைத்தார். அவரது பிரசாரம் இரண்டு அம்சங்களை முதன்மைப்படுத்தியது. முதலாவது இந்தோனேசியத் தேசப்பற்று.

ஆட்சியில் இருப்போர் நாட்டை அந்நிய சக்திகட்கு விற்பதாகக் குற் றஞ்சாட்டினார். நாட்டின் வளங்களை அந்நியருக்கு விற்பதே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்றார். இரண்டாவது, அரசாங்கத்தில் உள்ளோரின் ஊழலும் வினைத்திறனற்ற ஆட்சியும். ஊழலில் திளைத்த பாரம்பரிய அரசியல்வாதிகள் நாட்டை நிர்வகிக்கக் தெரியாதவர்கள் என்ற வாதத்தை முன்வைத்த அவர் அரசியல்வாதியல்லாத ஒருவரே இந்தோனேசியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல ஏற்றவர் என்று வாதித்தார்.

முரண்நகை யாதெனிற் பிரபோவோ விமர்சித்தவாறான அரசியல் செல்வாக்குள்ள பாரம்பரியத் தன்னலக்-குழு (Oligarchy) ஒன்றிலி ருந்தே அவரும் வந்தார். அவர் பற்றி ‘வெளியாள்’ ‘வேறுபட்டவர்’ போன்ற படிமங்களை; உருவாக்கிய அதேவேளை, வாக்காளர்களைக் கவர அவர் தனது குடும்பச் செல்வாக்கையும் பாவித்தார். அவர் ஜாவாவில் செல்வாக்கும் அதிகாரமும் மிகுந்த அரசியல் குடும்பமான ‘பிரியாயி’ குடும்பத்தில் இருந்து வந்தவர். அவ்வடையாளம் அவருக்கு மரியாதையையும் செல்வாக்கையும் வழங்கியது.

சுகார்த்தோவின் ஆட்சியின்போது அவரும் அவரது சகோதரரும் வியாபாரத்தின் மூலம் ஏராளமான செல்வஞ் சேர்த்தனர். சுகார்தோவின் வீழ்ச்சிக்குப் பின் நாட்டை நீங்கி ஜோர்தானில் நீண்டகாலம் இருந்தார். தனது வியாபார நலன்களும் அரசியல் நலன்களும் உறுதிப்பட்ட நிலையில் இந்தோனேசியாவுக்கு மீண்டார்.

தான் ‘பழிவாங்கப்படுவதாக’ தனது அரசியற் பிரசாரங்களில் விடாது தெரிவித்தார். தான் நாட்டின் நன்மைக்காகச் செய்த விடயங்கட்காகத் தன் மீது ‘ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாக’ முறையிட்டார். தனது தேர்தல் பிரசாரத்தில் சாதாரண கிராம மக்க ளின் செல்வாக்கைப் பெற அவர் மிக்க கவனங் காட்டினார். அவருடைய பிரசாரத் தூண்களாக மூன்று துறையினர் இருந்தார்கள்: சந்தை வியாபாரிகள், முன்னாள் இராணுவ வீரர்கள், சில தொழிற் சங்கங்கள்.

அவரது தேர்தல் பிரசாரத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று அவர் ஊடகங்கள் வழியாக முன்னெடுத்த பிரசாரம். குறிப்பாகப் பாரம்பரிய தொலைக்காட்சியும் வானொலியும் அவருக்கு முக்கியங் கொடுத்தன. இவ் விளம்பரங்கட்கு ஏராளமான பணம் செலவானது. சமூக வலைத் தளங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. அவரது சகோதரர் விளம்பரங் கட்கு நிதி வழங்கினார்.

தனது மேற்குலக உடை- நடை-பாவனையை மாற்றி முதலாவது இந்தோனிசிய ஜனாதிபதி சுகர்னோ அணிந்த வகையான ஆடைகளை அணிந்தார். தனது இராணுவ அனுபவங்கள், தனது செயற்பாடுகள் எனச் சுயகதைகளூடே பிரசாரத்தை முன்னெடுத்தார். இராணுவத்தில் தனது உறுதியான செயற்பாடுகளே தனது உரைகல் என்றார். ‘ஆயிரம் ஆடுகளை ஒரு சிங்கம் வழிநடத்தின் ஆடுகளும் கர்ச்சிக்கும். ஆனால் ஆயிரம் சிங்கங்களை ஒரு ஆடு வழிநடத்தின் ஆயிரம் சிங்கங்களும் செம்மறிகளாகும்’ என்றார். இவ்வாக்கியம் அவரது பிரசாரத்தின் மகுடவாக்கியமானது.

சர்வாதிகார ஆட்சி முறையே சிறந்ததும் வினைத்திறனானதும் என்றும் மேற்குலகப் பண்பாட்டின் அடையாளமான ஜனநாயகம் இந்தோனீசியா வுக்குப் பொருந்தாது என்றும் வாதித்தார். பல சிறிய கட்சிகளும், ஆட்சியில் இருந்த முன்னாட் குறுங்குழுக்காரர்களும், வர்த்தகர்களும் தேசியவாதிகளும் அவரை முற்றாக ஆதரித்தனர்.

பண பலம், இராணுவ பலம், செல்வாக்குடைய குழுக்களின் ஆதரவு எனப் பலவும் இருந்தும் பிரபோவோ தேர்தலில் தோற்றார். அத் தோல்வியும் ஆராயத் தக்கது. பிரபோவோவை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோகோ விடோடோ ஒரு பிரபல அரசியல்வாதி. தலைநகர் ஜகார்த்தாவின் மேயராகவும் பின்னர் ஆளுநராகவும் இருந்த அவர் மக்களுக்காகப் பல நலத்திட்டங்களை முன்னெடுத்தவர். அரசியல் செல்வாக்குள்ள குடும்பப் பின்னணியோ இராணுவப் பின்புலமோ அற்றவர். எனவே அவருக்குச் சாதாரண மக்கள் மத்தியில் நிறைந்த செல்வாக்கு இருந்தது. இதன் விளைவால் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பிரபோவோவைத் தோற்கடித்து ஜனாதிபதியானார்.

சர்வாதிகாரத்தாற் துன்புற்ற நாட்டில் அதே சர்வாதிகாரத்தையே அரச நிர்வாக முறையாக முன்மொழிந்த பிரபோவோ எவ்வாறு தேர்தலில் வெற்றியை நெருங்கினார் என்பதும் எச் சர்வாதிகாரத்தால் இந்தோனேசியர்கள் துயரங்களை அனுபவித்தார்களோ அதையே முன்வைக்கும் ஒருவரை எவ்வாறு அவர்களால் வழிமொழிய முடிந்தது என்பதும் கவனிப்புக்குரியன. இவை அரசியலின் வினோதங்கள். இது 2014 உடன் முடியவில்லை. 2019ம் ஆண்டுத் தேர்தலிலும் பிரபோவோ போட்டியிட்டார். முன்பை விட இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களுடன் நெருக்கம் காட்டி தன்னை இஸ்லாத்தின் பாதுகாவலாராக அவர் முன்னிலைப்படுத்தினார்.

ஜனாதிபதி விடோடோ நல்லதொரு முஸ்லிம் அல்ல. அவர் கிறீஸ்தவ மதநம்பிக்கையை உடையவர் என்ற பிரச்சாரம் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டது. அவர் மீண்டும் பதவிக்கு வந்தால் பாடசாலையில் மார்க்கக் கல்வியை இல்லாமல் செய்வார், ஓரினச் சேர்க்கையாளர்களை அனுமதிப்பார், தொழுகைக்கு தடைவிதிப்பார் என்றெல்லாம் பொய்கள் பரப்பப்பட்டன. தீவிர இஸ்லாமியக் கடுக்கோட்பாட்டுவாதியாக தன்னைக் காட்டிக்கொண்ட பிரபோவோ அதற்கான பலனை அடைந்திருக்கிறார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கணிசமான வாக்குகளை அவர் பெற்றார். அதேவேளை இந்து, கிறீஸ்தவ மக்கள் வாழும் பகுதிகளில் முழுமையான வாக்குகளும் விடோடோவுக்கே கிடைத்தன. கடந்த முறையை விட அதிகளவான வாக்கு வித்தியாசத்தில் விடோடோ வெற்றி பெற்றுள்ளார். ஆனால் கடந்த தேர்தலை விட இம்முறைத் தேர்தல் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதோர் என இரண்டாகப் பிளவுபட்ட நுண்ணரசியலை முன்நகர்த்தியுள்ளது.

மதமும் வலிய கருவியாகிறபோது அதன் நுண்ணரசியலும் அது கட்டமைக்கும் வெறுப்பரசியலும் தேர்தல்களைத் தாண்டியும் நிலைக்கும். இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும் என்ன தொடர்பு என்று இன்னமும் நினைப்பவர்கள் பெயர்களையும் மதங்களையும் மாற்றிவிட்டு மீண்டும் வாசியுங்கள். எங்கேயோ கேட்ட கதையொன்று கட்டவிழும். அதிமனிதர்களுக்கான ஆவல் இந்தோனேசியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இருக்கிறது என்பதை காலம் காட்டிச் செல்லும் வேளை அதிக தொலைவில் இல்லை.