இன்னொரு கூட்டமைப்பு: சவால்களும் சாத்தியங்களும்

நிறுவன ரீதியாக ஒன்றுபடுவதற்குத் தடையாக இருக்கின்ற விடயங்களாக, சுயநலத்தையும் அகந்தையையும் குறிப்பிடுகிறார். ‘நாம் ஒவ்வொருவரும், எமது கட்சிகளை மட்டும் மேம்படுத்த, சுயநலத்துடனும் அகந்தையுடனும் உளங் கொண்டிருந்தால், ஒற்றுமை சாத்தியப்படாது. அதனால், எமது மக்கள் பாதிக்கப்படக்கூடும். ஒன்றுசேருவது பற்றி, நாங்கள் பேசிக் கொள்வது, மக்களின் கோரிக்கையின் நிமித்தமே; அவர்களின் நன்மை கருதியே ஆகும். மக்கள்தான், ஒற்றுமையை வேண்டி நிற்கின்றார்கள். ஆனால், எமது கட்சிகள், தமது தனித்துவத்தையும் தலைமைத்துவத்தையும் பாதுகாக்கவே முனைகின்றன’ என்று, அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தகாலத்தில், இந்தப் பத்தியினூடாகப் பலமுறை, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் அதேவேளை, அதன் முதற்படி, தேர்தல் கூட்டணியாகவோ நிறுவன மயப்படுத்தப்பட்டதாகவோ இருப்பது அவசியமில்லை என்ற கருத்தையும் உணர்த்தி இருக்கிறேன்.

இதற்குக் காரணம் இருக்கிறது. நீதியரசர் விக்னேஸ்வரன், தனது பதிலில் சிலபல விடயங்களைத் தொட்டுச் சென்றிருந்தாலும், அனைவர் கவனத்தையும் ஈர்த்த விடயமானது, தமிழ்க் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைவராக சட்டத்தரணி ந. ஸ்ரீ காந்தாவை, முன்மொழிந்ததாகும். அதை நியாயப்படுத்தும் அவர், ‘மாவை போன்ற ஒரு முக்கிய கட்சியின் தலைவர், கூட்டுக்கும் தலைமை வகித்தால், சிறிய கட்சிகள் வலுவிழந்து விடும். முக்கிய கட்சியின் கையே ஓங்கும்; அதன் செல்வாக்கே செல்லுபடியாகும்.

ஆனால், சிறிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டுக்குத் தலைமை வகித்தால், பெரிய கட்சிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சிறிய கட்சிகளும் அடையாளம் பெறும். சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்ததையும், எவ்வாறு சிறிய கட்சிகள் அவரால் புறக்கணிக்கப்பட்டன என்பது பற்றியும் யாவரும் அறிவர்’ என்கிறார்.

விக்னேஸ்வரன் எம்.பி, இங்கு குறிப்பிடும் பிரச்சினையை, உண்மையற்றது என்று ஒதுக்கிவிட முடியாது. இலங்கையின் தமிழ்த் தேசிய கட்சிகளிடையே, உருவான கூட்டுகள் சிதைந்தமைக்கு, எண்ணிக்கை சார்ந்து சமனற்ற மக்களாதரவு இல்லாத கட்சிகள் இடையேயான கூட்டணியில், பெரிய கட்சிகளின் வல்லாட்சியிலிருந்து, சிறிய கட்சிகளைப் பாதுகாக்கத்தக்க ‘தடைகளும் சமன்பாடுகளும்’ காணப்படாமை முக்கிய காரணமாகும். அன்று, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பிரியவும் பின்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல கட்சிகள் பிரிந்து செல்லவும் இது முக்கிய காரணமாக இருந்தது.

இந்த இடத்தில், பலமான கட்சிகளின் யதார்த்த சிந்தனையையும் நாம் மறந்துவிட முடியாது. சிறிய கட்சிகள், வாக்குகளுக்காகப் பயணிக்கும் வாகனமாக, தாம் மாறிவிடக் கூடாது என்பது பலமான கட்சியினரின் கவலையாகும். தேர்தல் வெற்றி என்று வரும் போது, அதில், குறித்த கூட்டுக்குள் எந்தக் கட்சியினர் அதிக வாக்குகளைக் கொண்டுவருகிறார்கள் என்ற கேள்வி அல்லது, குறைந்தபட்சம் சிந்தனையாவது எழும்.

இங்கு, கட்சிக்கான வாக்குகள், விருப்பு வாக்குகள் என்ற இரண்டு விடயங்களையும் கருத்தில் கொள்ளுதல் அவசியம். இன்னமும் வாக்காளர்கள், பெருமளவுக்கு கட்சி ரீதியாகவே வாக்களிக்கிறார்கள். ஏலவேயுள்ள கட்சிக் கட்டமைப்பைத் தகர்த்து, தனித்துத் தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெறும் பலம்மிக்க தனித்த ஆளுமை, இன்றைய தமிழ்த் தேசிய அரசியலில் இல்லை.

ஆனால், இன்று பிரிந்து நிற்கும் ஒவ்வொரு தரப்பிலும், ஒன்றிரண்டு நட்சத்திர அரசியல் ஆளுமைகள் இருக்கிறார்கள். இவர்களால் தனித்துப் போட்டியிட்டு, தேர்தல் வெற்றியை உடனடியாக அடையப்பெற முடியாது போனாலும், கூட்டணியாகப் போட்டியிட்டால், இவர்கள் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவார்கள். இந்த நிலையும், பெரிய கட்சியானது பலமான கூட்டணி அமைப்பதில், அக்கறை அற்றிருப்பதற்கு முக்கிய காரணமாகும்.

பெரிய கட்சிகளின் கருத்துப்படி, தனித்து நின்று வெற்றிபெற முடியாதவர்கள், கூட்டணியாக வெற்றி பெறுகிறார்கள் என்றால், அதற்குத் அவர்களது கட்சி வாக்குகள்தான் காரணம். நாம், மற்றவர்களை வெற்றிபெற வைக்க, ஏன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சிந்தனை, அவர்களுக்கு எழுவது யதார்த்தமானது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உடைபாட்டுக்கு, தமிழரசுக் கட்சியின் வல்லாதிக்கம் முக்கிய காரணமென்பது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஒவ்வொரு கட்சியினதும் கருத்துகளிலிருந்து புரிந்துகொள்ளக் கூடிய ஒரு விடயம் ஆகும்.

இன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகியவையாகும். டெலோவின் செல்வாக்கு என்பது, பெரிதும் வன்னித் தேர்தல் மாவட்டத்துக்கு உட்பட்டது. குறிப்பாக, மன்னார் மாவட்டம் டெலோவின் செல்வாக்குத்தளம். டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அங்குதான் போட்டியிடுகிறார்; தொடர்ந்தும் வெற்றி பெறுகிறார். தற்போதைய சூழலில், வன்னியைத் தாண்டிய தமது பிரதிநிதித்துவம் பற்றி, டெலோ அவ்வளவு அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

ஆகவே, தேர்தல் அரசியல் என்று பார்த்தால், தமிழரசுக் கட்சிக்கு டெலோவுடனான கூட்டு, ஒரு ‘வெற்றி-வெற்றி’க் கூட்டு. மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை பற்றியும் கொள்கைசார் விடயங்கள் பற்றியும் டெலோ அவ்வளவாகக் கரிசனை கொள்வதாகவோ, அதற்காக அடிபடுவதாகவோ தெரியவில்லை. இதுவும் தமிழரசுக் கட்சிக்குச் சாதகமானதொன்று.

புளொட்டைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய முன்பு, அவர்களது ஆதரவுத் தளம் வவுனியாவாக இருந்தது. ஆனால், அவர்களுக்குத் தேர்தல் வெற்றியென்பது, சிம்மசொப்பனமாக இருந்து வந்தது. கூட்டமைப்பில் இணைந்த பின்னர், புளொட் தலைவர் சித்தார்த்தன், யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும் வெற்றியை ஈட்டியிருந்தார்.

இதற்குத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சித்தார்த்தனின் தந்தையார் வீ. தர்மலிங்கத்துக்கு இருந்த தமிழரசுக் கட்சி வாக்குகள் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. ஆகவே, கூட்டமைப்பினுடனான இணைப்பு என்பது, புளொட்டுக்குத் தேர்தல் வெற்றியைச் சாத்தியமாக்கியது. அவர்கள் அதுபோதும் என, தலைமைத்துவச் சண்டைகளில் ஈடுபடாது அமைதியாக இருக்கிறார்கள்.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை, மூன்று கட்சிகளாவது இல்லாவிடில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது, அர்த்தமற்றது ஆகிவிடும். ஒப்பீட்டளவில் புளொட், தமக்கு இடைஞ்சல் குறைந்த கட்சியாக இருப்பதால், இதுவும் இரு கட்சிகளுக்கும் ‘வெற்றி-வெற்றி’க் கூட்டாகவே இருக்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கொள்கை முடிவெடுத்தாலும், இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டாலும், அது தமிழரசுக் கட்சியின் முடிவாகவே இருப்பது ‘வௌ்ளிடைமலை’. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திரிகளுடனான எத்தனை சந்திப்புகளில், டெலோ, புளொட் தலைவர்களைக் காணக் கூடியதாக இருக்கின்றது? தமிழ்த் தேசிய கூட்டமைப்பின், எத்தனை கொள்கை முடிவுகளில், டெலோ, புளொட் தலைவர்கள் பங்களித்திருக்கிறார்கள்? ஆனால், இவை பற்றி அவர்களே அக்கறை கொள்ளாததுதான், இன்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, குறைந்தது இந்த மூன்று கட்சிகளைக் கொண்டாவது அமைந்திருக்கக் காரணம் என்றால், அது மிகையல்ல.

மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது தாம் கொண்டுள்ள செல்வாக்குப் பிடியைத் தளர்த்த, தமிழரசுக் கட்சி விரும்பவில்லை. இதனால்தான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்தவர்கள், மீண்டும் ஒன்றிணையத் தயங்குகிறார்கள். இதனால்தான் நீதியரசர் விக்னேஸ்வரன், “தமிழரசுக் கட்சியின் தலைமை கூட்டமைப்புக்குத் தலைமைதாங்கக் கூடாது; மாறாக, மற்றொரு சிறிய அங்கத்துவக் கட்சிக்குத் தலைமை வழங்கப்பட வேண்டும்” என்கிறார்.

இதுவரையான அவருடைய கூற்று பொதுப்படையானதும், கொள்கை அடிப்படையானதும் ஆகும். ஆனால், அதற்கு ந. ஸ்ரீகாந்தாவை முன்மொழிந்தமை, அவருடைய தனிப்பட்ட கருத்தாகப் பார்க்கப்பட வேண்டியது. தனிப்பட்ட முன்மொழிவு இங்கு முக்கியமானதல்ல. ஆனால், தவிர்க்க முடியாமல் பலரது கவனமும் அதன் மீதுதான் பதிகிறது. அந்தத் தனிநபர் பெயர் முன்மொழிவைக் கடந்து, பெரிய கட்சியின் வல்லாதிக்கம் தொடர்பிலான ‘தடைகளும், சமன்பாடுகளும்’, ‘சிறுபான்மைத் தரப்பின் பாதுகாப்பு’ என்ற அடிப்படையில் நீதியரசர் விக்னேஸ்வரனின் அந்தக் கூற்று பார்க்கப்பட வேண்டும்.

ஆனால், இந்த விட்டுக்கொடுப்புகளைச் செய்து ஒரு கூட்டணியை ஸ்தாபிக்க வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் தமிழரசுக் கட்சிக்கு இருக்கிறதா?
ஏனைய தமிழ்க் கட்சிகள், கூட்டணியாக ஒன்றிணைவதை ஏற்குமா?

ஒருவரையொருவர் தேர்தல் மேடைகளில் விளாசித் தள்ளியவர்கள், இன்று எப்படிக் கைகோர்ப்பது? என்ற கேள்விகளும் கூட இதனை இன்னும் சிக்கலாக்குகின்றன.