இலங்கை குண்டு வெடிப்பும் அதன் தொடர்ச்சியும்

இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இலங்கையில் இயல்பு நிலையை குழப்புதல் என்ற உள்நோக்கம் இருப்பதாக உணரப்படுகின்றது. வழமை போல் வெளிநாட்டு சக்திகளின் கைவண்ணம் இது என்ற செய்திப் பரவலாக்கமும் இதில் குறிப்பாக இந்தியாவின் பெயர் முதன்மையாக அடிபடுவதும் இலங்கையிற்குள் முதன்மையாக முஸ்லீம் சமூகத்தின் கைவண்ணம் இது என்ற செய்திகளையும் இதனைத் தொடர்ந்து சிங்கள சக்திகள் என்ற செய்தி பரவலாக்கத்தையும் தம் இஷ்டத்திற்கு பலராலும் கூறுவது ஒரு பொறுப்பற்ற தன்மையாகவே பார்க்க முடியும்.

உரிய விசாரணைகள் நடைபெற்று குற்றவாளிகள் அறியப்படும் வரை இப்படியான ஊகங்கள் இலங்கையிற்குள் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை குழப்பும் முயற்சியாகவே அமையும் என்பதை யாவரும் உணர்ந்து நிதானத்துடன் அவதானமாக எச்சரிகையாக செயற்பட வேண்டும். இதே போல் இந்தியா போன்ற அயல் நாடுகளுடனான நட்புறவுகள் அவசரப்பட்ட ஊகங்களினால் அடிபட்டும் போகக் கூடும் என்பதுவும் உணரப்பட வேண்டும்.
ஓரிடத்தில் என்று இல்லாமல் ஒன்பது இடங்கள் என்று பல இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு செயற்பாடுகளில் பல கேள்விகளை எழுப்பி அதில் உள்ள ஓட்டைகளை காட்டி நிற்கின்றது. பாதுகாப்பு விடயத்தில் அது தோற்றே விட்டது. இது அவர்கள் தம்மை சுய மீள்பார்வையிற்குள் உள்ளாக்க வேண்டியதை எடுத்தியம்பி நிற்கின்றது.

இவ் வேளையில் இலங்கை மக்கள் யாவரும் தமது சமூக் பிரிவு தனித்துவத்தை முன்னிறுத்தாமல் ஐக்கியப்பட்டு இருத்தல் இன்றைக்கு அவசியமாகின்றது என்பது உணரப்பட வேண்டும். இதன் மூலமே இலங்கையில் நிரந்தரமான சமானத்தை சமூகங்கள் இடையேயான நல் இணக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனை செயற்படுத்துவதற்கு சிங்களவர் தமிழர்கள் முஸ்லீம்கள் மலையகத்தவர் என்று பிரிந்து நிற்காமல் நாம் இலங்கையர் என்று ஐக்கியப்பட்டு நிற்றல் இன்றைய அவசியமான செயற்பாடு ஆகும். இதனை சகல சமூகத் தலைவர்களும் தமது சமூகத்திற்கான அறை கூவலாக விடுதல் வேண்டும்.

யேசு உயிர்த்தெழுந்தார் என்று நம்பப்படும் தினத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வில் மரணித்த காயமடைந்தவர்களின் உறவுகளின் துன்பங்களுடன் நாமும் இணைந்து கொள்ள வேண்டும். இனியும் இது போன்ற செயற்பாடுகள் நடைபெறாத வண்ணம் நாம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். அதே வேளை இலங்கை அரசு இதில் அறம் சார்ந்து செயற்பட்டு குற்றவாளிகளை இனம் கண்டு சட்டத்தின் முன்பு நிலைநிறுத்த வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும்