இலங்கை, தேயிலை, தமிழர்கள், உலகம்!

(மீரா ஸ்ரீநிவாசன்)

தேயிலைத் தூள் அடங்கிய ‘டீ பேக்’-ஐ வெந்நீரில் முக்கி கொஞ்சம் பாலும் சர்க்கரையும் சேர்த்து ஒரு கோப்பைத் தேநீர் தயாரிக்கும் எண்ணம் இருந்தால், அதை மெரில் பெர்னாண்டோவுக்குப் பரிமாறிவிடாதீர்கள்.“டீ பேகை வெந்நீரில் போட்ட பின்னர், கோப்பையை ஒரு சாஸரால் மூடி மூன்று அல்லது ஐந்து நிமிடங்கள்  வரை வைத்திருங்கள். அதன் நறுமணம் வெளியேறாமல் இருக்கும். நினைவில் வைத்திருங்கள், சிறந்த தேநீர் என்பது பாலோ சர்க்கரையோ கலக்காமல் தயாரிக்கப் படுவதுதான்” என்கிறார் கண்டிப்பான தொனியுடன். இலங்கையின் புகழ்பெற்ற தேநீர் நிறுவனமான ‘தில்மா’வை நிறுவியரும் அந்நிறுவனத்தின் தலைவரும் மெரில் பெர்னாண்டோதான்.

என் கையில் இருக்கும் தேநீர்க் கோப்பையின் நறுமணம் அவரது வாதத்தை நிரூபிக்கிறது. இந்த நறு மணம், ஏறத்தாழ 100 நாடுகள் வரை பரவியிருக்கிறது. சிட்னியின் நட்சத்திர ஹோட்டல்கள் முதல் மாஸ் கோ வின் உணவகங்கள் வரை, புடாபெஸ்ட் நகரின் தேநீர் விடுதிகள் முதல் மேற்காசிய விமானங்களின் உணவுத் தட்டு வரை!

87 வயதான பெர்னாண்டோவை, கொழும்புவின் புற நகரான பேலியகொடையில் உள்ள தில்மா நிறுவனத் தின் தலைமையகத்தில் சந்தித்தேன். தினமும் காலை சரியாக 8.30 மணிக்கு வந்துவிடுகிறார். முழுக்கை சட்டை யும் சாம்பல் நிற கால்சட்டையும் அணிந்திருக்கிறார். ஜெல் பூசி பின்னோக்கி அழுத்திவாரப்பட்ட தலைமுடி. பழைய பாணி தொழிலதிபர்கள் தலைமுறையைச் சேர்ந்தவர். பேரார்வம், கடும் உழைப்பு, துணிச்சலான முடிவு கள் நிறைந்த கதை அவருடையது. தனது 20-களில் பிரிட்டனுக்குச் சென்றதை நினைவுகூர்கிறார். “இலங்கையின் தேநீருக்கு பிரிட்டனில் இருந்த பிராண்டிங்கையும் சந்தையையும் பார்த்து அசந்துபோனேன். மட்டமான தேயிலைத் தூள்களைக் கலந்து ‘சிலோன் டீ’ என்று விற்றுவந்தனர். அந்தக் காலகட்டத்தில் அவற்றின் விலை அதிகம். நுகர்வோர் ஏமாற்றப்படுவதாக எனக்குத் தோன்றியது” என்கிறார். தேயிலை ஏற்றுமதிசெய்யும் நாடு என்பதைத் தாண்டி, இலங்கையை பிரிட்டன் வணிகர்கள் மதிக்கவில்லை.

பெர்னாண்டோவுக்கு அப்போது வயது 24. உலகின் எல்லா பிராண்டு தேநீரும் வணிகர்களுக்குச் சொந்த மானவையாக இருந்தன என்றும், மிக மலிவான விலைக்கு தேயிலையை வாங்கி, தேயிலை உற்பத்தியாளர்களை ஏமாற்றிய வணிகர்கள், மிக மட்டமான தேநீரை விற்று நுகர்வோரை ஏமாற்றினர். “தேநீர் மீதான மதிப்பே குலைந்துவிட்டது” என்கிறார் பெர்னாண்டோ.

இலங்கை திரும்பிய பின்னர், சிறிய அளவில் தேயிலை பயிரிடத் தொடங்கினார் பெர்னாண்டோ. ஆங்கிலேயக் குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனத்தில் சில ஆண்டு கள் பணிபுரிந்தார். பணியில் அவர் காட்டிய ஈடுபாட்டால் கவரப்பட்ட நிர்வாகம், இயக்குநர் குழுவில் அவரை நியமித்தது. தேயிலை மொத்த விநியோகத்தில் வெற்றி கரமாக ஈடுபட்டார். அதேசமயம், இலங்கையின் தேயிலை அதன் தூய்மையான வடிவிலேயே நுகர் வோருக்கு நேரடியாக விற்கப்பட வேண்டும் எனும் தனது கனவை விட்டுவிடவில்லை. “நானே சுயமாக ஒரு பிராண்டை உருவாக்க வேண்டும் எனும் எண்ணம் என்னை ஆட்கொண்டது” என்கிறார்.

இலங்கையிலிருந்து தேயிலையை வாங்கும் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டிபோட வேண்டியிருக்கும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். கடினமான விஷயம்தான். எனினும், ஏதோ ஒரு சக்தி தன்னை இயக்கியதாகச் சொல்கிறார் அவர். அப்போது அவருக்கு வயது 34 தான். 1988-ல் ‘தில்மா’ நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 58. தொடக்க விழா ஆஸ்திரேலியாவில் நண்பர்கள், வாடிக்கை யாளர்கள் என்று நம்பகமானவர்கள் புடைசூழ நடந்தது. அவர்களில் பலர் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்.

“பணம் பற்றாக்குறையாக இருந்தது. ஒரு சிறு எறும்பைப் போன்ற நான், பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டும் என்றால் வித்தியாசமான சிந்தனை தேவையாக இருந்தது” என்கிறார். தனது மகன்கள் தில்ஹான், மாலிக் ஆகியோரின் பெயர்களை இணைத்து ‘தில்மா’ என்று தனது நிறுவனத்துக்குப் பெயரிட்டிருந்தார். முதலில், 300 சொச்சம் ஏக்கரில் தொடங்கிய தில்மா நிறுவனம், தற்போது இலங்கையின் மலையகப் பகுதியில் 50,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடுகிறது. பெரும்பான்மையான நிலங்கள் மத்திய மாகாணத்தில் உள்ளன. கிட்டத்தட்ட 20,000 ஊழியர்கள் பணிபுரியும் இந்நிறுவனம், ஆண்டுக்கு 15 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்திசெய்கிறது. மதிப்புக் கூட்டல் தொடர்பான பணிகளையும் அந்நிறுவனமே மேற்கொள்கிறது. 90-களில், தேயிலைத் தோட்டத் துறையைத் தனியார்மயமாக்குவதில் இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகளும் பெரு மளவுக்குச் சாதகமாக அமைந்தன. தேசியமயமாக்கப்பட்டிருந்த தேயிலைத் தயாரிப்பு நிறுவனங்களைத் தனியாருக்கு இலங்கை அரசு வழங்கியது. லாபம் தொடர்பான தகவல்களை தில்மா வெளியிடுவதில்லை என்றாலும், நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு 500 மில்லியன் டாலர் என்கிறார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான தில்ஹான்.

தேயிலைத் தோட்டம் தொடர்பான சமூக வரலாறு பற்றிய சுருக்கமான அறிமுகத்தைத் தருகிறார் இந்நிறுவனத்தைச் சேர்ந்த பெர்னாடு ஹோல்சிங்கர். “19-ம் நூற்றாண்டில் இந்தியத் தொழிலாளர்களை பிரிட்டிஷார் அழைத்துவந்தபோது, பாறைகள் சூழ்ந்த இந்தப் பகுதியை, கனமான கருவிகள் கொண்டு உடைத்தார்கள்” என்கிறார் அவர். மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படும் இந்தச் சமூகத்தினர்தான் இன்றைக்கும் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகிறார்கள். தேயிலை பறித்தல், அடுக்கு தல் ஆகிய பணிகளுடன், ஆலைகளிலும் வேலைசெய் கிறார்கள். காலனிய காலம் முதல் சுதந்திரத்துக்குப் பிறகான காலகட்டம் வரையில் பல்வேறு உழைப்புச் சுரண்டல்களை எதிர்கொண்ட மலையகத் தமிழர்கள் இலங்கைக்குக் கணிசமான அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். டங்க்ஹெல்ட் எஸ்டேட்டில் உள்ள மழலையர் பள்ளிக்கும், மருந்தகத்துக்கும் என்னை அழைத்துச் சென்றனர். “நிறுவனத்தின் உற்பத்திக்கு, இங்குள்ள பெண் தொழிலாளர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். அவர்களுக்குத் துணை நிற்கும் வகையில் இதுபோன்ற வசதிகளைச் செய்துதருகிறோம்” என்கிறார் எஸ்டேட் மேலாளர் மார்லன் டி லா ஹார்ப்.

கடந்த ஆண்டு, சிலோன் தேநீரின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது இலங்கை. தற்போது, ஆன்ம பரிசோதனையில் ஈடுபட்டிருக்கிறது இலங்கை தேயிலை உற்பத்தித் துறை. தேயிலை மொத்த இறக்குமதியைத் தாராளமயப்படுத்த வேண்டும் என்று பெரிய அளவில் சிலர் ‘லாபி’ செய்துவரும் நிலையில், அதை ஒற்றை ஆளாக நின்று எதிர்த்துவருகிறார் பெர்னாண்டோ. மலிவு விலையில் தேயிலையை இறக்குமதி செய்வது என்பது கொழும்புவில் ஏல விலையைக் கடுமையாகக் குறைத்துவிடும் என்று அவர் கவலைப்படுகிறார். “சிலோன் தேநீர் என்பது ஸ்காட்ச் விஸ்கியைப் போல் தனிச் சிறப்பு மிக்கது எனும்போது, மலிவான பொருட்களைச் சேர்த்து அதை ஏன் நீர்த்துப்போகச் செய்ய வேண்டும்?” என்று சமீபத்தில் ஒரு வணிக இதழில் எழுதியிருந்தார்.

தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு இது உதவிசெய்யும் என்பது பிற வணிகர்களின் வாதம். உலகத் தேயிலை உற்பத்தியில் இலங்கையின் பங்கு 2000-ல் 10.5% ஆக இருந்தது, 2016-ல் 6%-ஆகச் சரிந்துவிட்டது என்றும், உலக அளவில் ஏற்றுமதியைப் பொறுத்தவரை 2000-ல் 21% ஆக இருந்தது, 2016-ல் 16% ஆகக் குறைந்துவிட்டது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால், பெர்னாண்டோ குடும்பத்தினர் அதை மறுக்கிறார்கள். வணிகம் என்பது நற்பெயரையும் தரத்தையும் பொறுத்ததுதான் என்பது தில்மா நிறுவனத்தின் வாதம். “ஒருவர் பிறரைவிடக் குறைவாகத் தேநீருக்கு விலை வைத்து விற்கலாம். ஆனால், பிறரின் தரத்தைப் பிரதி யெடுத்துவிட முடியாது” என்கிறார் பெர்னாண்டோ உறுதியுடன்!

‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்