இலங்கை நெருக்கடி ….. எனது பார்வையில்

2015 ம் ஆண்டு இடம்பெற்ற  ஜனாதிபதி தேர்தல் , பாராளுமன்ற தேர்தல் இரண்டிலும் நல்லாட்சி தேசிய அரசாங்கத்துக்காகவே மக்களிடம் வாக்கு கேட்கப்பட்டு மக்களாணை பெறப்பட்டது. மக்களின் ஆணையை மதித்து தேசிய அரசாங்கத்தை நடாத்த முடியாது என்ற சூழ்நிலை உருவாகும் போது மீண்டும் மக்களிடம் செல்வதே சரியான ஜனநாயக முறையாக இருக்க முடியும். தேசிய அரசாங்கத்தை தொடர முடியாத நிலைக்கு மைதிரிக்கும் ரணிலுக்கும் சம பொறுப்பு உண்டு. மைத்திரி
ஜனநாயக விரோதி , நான் ஜனநாயகவாதி  என்ற ரணில் தரப்பு வாதம் ஏற்புடையது அல்ல.
சுதந்திர கட்சியில் எங்கோ ஓர் மூலையில் இருந்த
ஒருவரை கொண்டு வந்து நல்லவர் வல்லவர் என்று புகழ்ந்து ஜனாதிபதி பதவியில் அமர்த்துங்கள் என்று மக்களிடம் அறிமுகப்படுத்தி மக்களாணையை பெற்று விட்டு
பின்னர் முரண்பட்டு ஜனாதிபதி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்றார் என்று குற்றம் சாட்டுவது மக்களை முட்டாள்களாக்கும் நடவடிக்கையாகும். 

இன்று அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை அரச நிர்வாகத்தில் மாட்சிமை உடைய ஒரே ஒருவர் ஜனாதிபதி மட்டுமே அவரை முன்னிலை படுத்தியே எந்த காரியங்களையும் ஆற்ற வேண்டி உள்ளது . இங்கே எவரும் உத்தமர்களோ சுத்தமானவர்களோ அல்ல

2015 ல் இலங்கையின் நெல்சன் மன்டேலா என்று என்று புகழ்ந்து தள்ளியவர்கள் தான் இன்று ஜனாதிபதியை ஓர் பைத்தியக்காரன் ரேஞ்சுக்கு கழுவி ஊத்துகின்றார்கள். கொண்டு வந்தவர்களும் அவர்களே இன்று திட்டி தீர்ப்பவர்களும் அவர்களே. இன்று ஜனாதிபதி தவறு என்று திட்டி தீர்பவர்கள் தாம் இன்று
சொல்வது சரி என்றால் அன்று அவரை புகழ்ந்து பதவிக்கு கொண்டு வருவதற்கான தமது பொறுப்பை சுலபமாக மறந்து விடுகின்றார்கள். சரியோ பிழையோ இன்று நாட்டின் ஆட்சி அதிகாரம் என்பது ஜனாதிபதியின் கையிலேயே உள்ளது. எந்த மாற்றத்தையும் அவரை உட்படுத்தியே ஆக வேண்டும். நீதி மன்றத்தின் மூலம் எல்லாவற்றுக்கும் தீர்வை பெற்று விடமுடியாது.

இன்று மந்திரி சபை முடக்கப்பட்டுள்ளது .

பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது .

எப்படி நிர்வாகம் நடைபெற போகின்றது . 7 ம் திகதி நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் இந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் என நான் நம்பவில்லை . நாடு அராஜகம் தலைவிரித்தாடும் நிலை ஒன்றுக்குள் படிப்படியாக சென்று கொண்டு இருக்கின்றது அதனை சீர் செய்வதில் ஜனாதிபதியின் பங்களிப்பு முக்கியமானது .

ஜனாதிபதி, ரணில் , மகிந்த , மூவருக்கும் இடையே ஓர் சமரசத்தை உருவாக்குவதன் மூலமே இந்த அரசியல் நெருக்கடியை தீர்க முடியும். கோர்டுக்கு போவதாலும் ஆர்பாட்ட ஊர்வலங்கள் நடாத்துவதாலும் பக்கம் பக்கமாக பந்தி எழுதுவதாலும் இந்த நெருக்கடியை தீர்க முடியாது .

2015 ஆண்டில் நல்லாட்சி்
தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு எப்படி மைத்திரியும் ரணிலும் முன்னின்று உழைத்தார்களோ, அதே போல் அதனை தொடரமுடியாது என்ற நிலைவரும் போது இருவரும் சேர்ந்தே மக்களாணையை மீளப்
பெற வேண்டும் என்ற முடிவுக்கு ஒருமித்து வந்திருக்க வேண்டும். சுதந்திர கட்சியில் இருந்த ஒருவரை இழுத்து வந்து ஜனாதிபதி ஆக்குவதற்கு தனிப்பட்ட மன மாச்சரியங்கள், ஈகோ எல்லாவற்றையும் புறந்தள்ளி இணக்கப்பாடாக அப்போது செயற்பட முடியும் என்றால் ஏன் அதை தற்போது நாட்டு நலன் / மக்கள் ஆணை என்பதை முக்கியத்துவ படுத்தி செயற்பட முடியாது ?

அந்த ஒருமித்த முடிவில் ஐனாதிபதி தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் நடாத்துவதை நோக்கி சென்றிருக்கலாம்தானே ?

எனவேதான் இருவருக்கும் கூட்டு பொறுப்பு இருக்கின்றது என கூறுகின்றேன். அடுத்து அத்தனை அழுத்தங்களுக்கும் மத்தியில் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி பிடிவாதமாக இருப்பதில் ஏதோ ஓர் மிகப்பெரிய இரகசியம் இருப்பதாக கருதப்படுகின்றது. அது நாட்டு நலன் சார்ந்ததாகவும் இருக்கலாம். அதனை ஜனாதிபதி வெளியிடாத நிலையில் அவரை பலரும் கோமாளி என்றே எண்ணத் தோன்றும்.
தற்போது மந்திரி சபை இல்லை நீதிமன்றத்தால் முடக்கப்பட்டு விட்டது .

பாராளுமன்றம் இல்லை அது ஜனாதிபதியால் முடக்கப்பட்டு விட்டது.

சரியோ தவறோ நாட்டின் ஆட்சியதிகாரம் ஜனாதிபதி என்ற ஒருவரின் கையில் குவிக்கப்பட்டுள்ளது , அவரை அளவுக்கு அதிகமாக மலினபடுத்துவது,
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை உருவாக வழி வகுக்கும்

ஏட்டிக்கு போட்டியாக ஒவ்வொருவரும் செயற்படுவதன் மூலம் எவரும் வெற்றி பெறவில்லை மக்களே தோற்று கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டதால்,

1. அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளையும் முடிவு செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

2. அமைச்சர்களின் செயலாளர்கள் ஜனாதிபதியின் உத்தரவின் படி செயற்படுவார்கள் ..

3. பாராளுமன்றம் செயலிழக்கப்படும்.

4. ஜனாதிபதி ஒரு புதிய பிரதம மந்திரி அல்லது அமைச்சரவை நியமிக்க முடியாது.

இந்த அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு
கைக்கொள்ளப்பட்ட வேண்டியது உணர்வு பூர்வமான அணுகுமுறையே அல்லாமல் உணர்சி கொந்தளிப்புகள் அல்ல
தற்போது நடைபெறுவது எல்லாம் ஏட்டிக்கு போட்டியான உணர்சி கொந்தளிப்பு நடவடிக்கைகளே.

மகிந்த தலைமையிலான மந்திரி சபைக்கு இடைக்கால தடை உத்தரவு ஐனாதிபதியின் கரங்களை மேலும் பலப்படுத்தியுள்ளது
நீதி மன்ற உத்தரவை காரணம் காட்டியே அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி கையில் எடுக்க போகின்றார். மீள் முடியாத விஷ சுழலுக்குள் இலங்கையின் ஆட்சி நிர்வாகம் சென்று கொண்டிருக்கின்றது.

நண்பர் கருணாகரன் சிவராசா சொன்னதை போல் ….

நாடு மெல்ல மெல்ல அபாய நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மிதவாதிகள் நீதிமன்றம், மக்கள் போராட்டம் என்று சிந்திப்பார்கள். ஆயுததாரிகள் இதற்கு மாறாகவே சிந்திப்பர்.

நாடு ஒரு இராணுவ மேலாதிக்கத்தை நோக்கி நகர்வதாகவே உணரக் கூடியதாக உள்ளது.

இது மிகையான கற்பனை என்று பலரும் சொல்லக் கூடும்.

ஆனால், இந்த மிதவாதிகளின் மீதான நம்பிக்கையீனமும் சலிப்பும் இப்படியான உணர்வையே மக்களுக்கும் அந்தச் சக்திகளுக்கும் கொடுக்கும்…….

இன்னிலையில் ஜே வி பி , தமிழரசு கட்சி மற்றும்
முஸ்லிம் கட்சிகளும் , தமது சொந்த கட்சி நலன்களை புறந்தள்ளி, நாடும் மக்களும் பெரிது என்ற அடிப்படையில் ,
மகாநாயக்க தேர்ர்களின் ஆசீர்வாத்த்துடன் மைதிரி ரணில் மகிந்தா ஆகிய மூவருக்கும் இடையில் சமரசம் ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். மாறாக ஜனநாயகத்தை மீட்பதற்காக செயற்படுகின்றோம் , சட்டத்தின் மாட்சிமையை காப்பாற்றுகின்றோம் என்பது எல்லாம் இறுதி பெறுபேறாக
ஐ தே கட்சியின் நலன்களுக்கு ஆதரவாக செயற்படுவதிலேயே நிறுத்தும் . இது இலங்கைக்கும் நல்லதல்ல தமிழ்
முஸ்லிம் மக்களுக்கும் நல்லதல்ல

இதே சமயம்
கடந்த 70 வருடங்களாக
மக்களை முட்டாள்களாகி கொண்டிருக்கும்
இரு பெரும் அரசியல் கட்சிகளின் ( ஐ தே க, சுதந்திர கட்சி ) தகிடுது த்த்தங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படுவதை நோக்கமாக கொண்டு தேசபக்தியுள்ள மக்கள் இயக்கம் ஒன்று கட்டி எழுப்பம்பட வேண்டும்
அதன் எழுச்சியால் இந்த அரசியல் கட்சிகள் கதிகலங்கி இனிமேலும் மக்களை முட்டாளாக்கும் செயற்பாடுகளை நிறுத்தி ஒழுங்கான நீதி நேர்மையுடன் ஆட்சி செய்யும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்த மக்களியக்கத்தின் உள்ளீடாக , நல்லாட்சி அரசுக்கான செயற்பாட்டு பொறிமுறையும், தமிழ் , முஸ்லிம் மக்களின் உரிமைகள் அபிலாஷைகள் பூர்த்தி செய்ய படக்கூடிய அரசியல் யாப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக வல்லரசுகளின் பிடியில் இருந்து இலங்கை மீட்கப்பட வேண்டும்.

அன்பே சிவம்
யோகா வளவன் தியா