இலண்டன் மேயரும் உலகளாவிய முஸ்லிம்களும்

(கனகலிங்கம் கோபிகிருஷ்ணா)

இலண்டன் மாநகரத்தின் புதிய மேயராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சாதிக் கான், அவரது கொள்கைகளுக்காகவன்றி, அவரது மத நம்பிக்கைகளுக்காகவே அறியப்படுகிறார். மேற்கு நாடொன்றில், நகரமொன்றின் மேயராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள முதலாவது முஸ்லிம் என்பது தான், அவர் மீதான அதிகரித்த கவனத்துக்கான காரணமாகும்.

மேற்குலகிலுள்ள குறிப்பிடத்தக்க நாடுகளின் தலைநகரங்களில், அதிக பல்வகைமையைக் கொண்டுள்ளவற்றில், இலண்டன் நகரமும் ஒன்றாகும். 48 சதவீதத்தினர் கிறிஸ்தவர்களாக இருக்க, நம்பிக்கையுள்ள இரண்டாவது மிகப்பெரிய குழுவாக, முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவர்கள், 12.39 சதவீதத்தினராக இருக்கின்றனர். (மதங்களைப் பின்பற்றாதவர்கள் 20.73 சதவீதத்தினர் உள்ளனர் என்பது, மேலதிக தகவல்). இந்த நிலையில், பெரும்பான்மைச் சமூகமொன்றைச் சேராத ஒருவரை அம்மக்கள் தெரிவுசெய்திருப்பது, இலண்டன் போன்றதொரு நகரத்தின் பல்வகைமைத் தன்மைக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக, 2008ஆம் ஆண்டில் பராக் ஒபாமா தெரிவுசெய்யப்பட்டபோது, உலகிலுள்ள சிறுபான்மையினரெல்லாம் எவ்வாறு அதைக் கொண்டாடினர் அல்லது அதை ஓர் அங்கிகாரமாகக் கொண்டனரோ, அதற்கொப்பானதென்று சொல்லக்கூடிய கவனத்தை, சாதிக் கானின் வெற்றியும் ஏற்படுத்தியுள்ளது. இதில், வெறுமனே 13.3 சதவீதமாகக் காணப்படும் ஆபிரிக்க அமெரிக்கர்களிடையே இருந்து, நாட்டின் ஜனாதிபதியாக ஒபாமா தெரிவாகியமை, இன்னொரு நிலையான முக்கியத்துவம் வாய்ந்தது என்ற போதிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட ஏனைய இஸ்லாமிய ஆயுதக்குழுக்களின் எழுச்சி காரணமாக, முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைக்கு மத்தியில், சாதிக் கானின் வெற்றியைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இவ்விடயத்தில் முக்கியமான விடயமென்னவெனில், பராக் ஒபாமாவையும் சாதிக் கானையும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் ஒற்றுமைப்படுத்த முயன்றாலும், இருவருக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. ஒருபுறத்தில் ஒபாமா, செனட்டராக இருந்து நற்பெயரைப் பெற்ற ஒருவர். தனது கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்துவதன் மூலம், மக்களின் ஆதரவைப் பெற்றவராக இருந்தார், இருக்கிறார். ஒபாமாவின் கொள்கைகள், அரசியலில் மாற்றுக் கருத்துகள் இருப்பவர்கள் கூட, அவரின் தனிப்பட்ட கொள்கைகள் அல்லது நடத்தைகள் தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பதில்லை. வெள்ளையர்களை வெறுப்பவராகவோ அல்லது கறுப்பினத்தவர் என்பதற்காக அடிப்படைவாதக் கொள்கைகளையுடைவர்களை ஆதரித்தவராகவோ அல்லது பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடையவர்களோடு பழக்கங்களைக் கொண்டவராகவோ அல்லது விமர்சகர்களைத் தரக்குறைவான வார்த்தைகள் கொண்டு திட்டியவராகவோ அறியப்பட்டவரல்லர் ஒபாமா. மாறாக, சாதிக் கானின் வரலாறு, சிறிது சிக்கலானது.

சாதிக் கானின் மைத்துனனான மக்பூல் ஜாவைட், பிரித்தானியாவில் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ள அல்-முஹாஜிறெளண் என்ற அமைப்பின் பேச்சாளராகத் திகழ்ந்தவர். அதேபோல், 2003ஆம் ஆண்டில், அதே குழுவைச் சேர்ந்த சஜீல் அபு இப்ராஹிம் என்ற நபரோடு, ஒரே மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். அஹ்மாடி பிரிவு முஸ்லிம்களை, முஸ்லிமாக ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவிக்கும் பிரித்தானியாவில் முஸ்லிம் சபையின் சட்டச் செயற்குழுவின் தலைவராகச் செயற்பட்டிருந்த சாதிக் கான், 2004ஆம் ஆண்டு, பிரித்தானிய மக்களவையில் வாக்குமூலமளித்திருக்கிறார். பிரித்தானியாவில் தீவிரக் கொள்கைகளைக் கொண்டவராகக் கருதப்படும் டொக்டர் யூசுப் அல்-குராதவி, அவ்வளவு மோசமானவரல்லதர் என நாடாளுமன்றத்திலேயே போராடியிருக்கிறார் சாதிக் கான்.

ஜிஹாதிக் குழுவான கேஜ் என்ற குழுவுடன் நேரடியான தொடர்புகளைப் பேணிய சாதிக் கான், அவர்களின் அறிக்கையொன்றுக்குக் கூட முன்னுரை எழுதியிருக்கிறார். இவ்வாறு, சாதிக் கானின் கடந்தகால வரலாறென்பது, விமர்சனங்களைத் தாண்டியது கிடையாது. அவரது இத்தொடர்புகளை வெளிப்படுத்தியதொன்றும், அவரது எதிரணிகள் கிடையாது. அடிப்படைவாத முஸ்லிமாக இருந்து, ஆயுதத்தைக் கையிலேந்தியதால் சிறையிலடைக்கப்பட்டு, தற்போது இஸ்லாமின் சீர்திருத்தத்துக்காகப் போராடிவரும் மாஜிட் நவாஸ் தான். நவாஸ் சிறையிலடைக்கப்பட்டிருந்த போது, அவரின் சட்டத்தரணியாகப் பணியாற்றியவர் தான் இந்த சாதிக் கான்.

சாதிக் கானின் இந்தத் தொடர்புகளுக்கு, மனித உரிமைகள் சட்டத்தரணியாக அவர் இருந்தமை ஒரு காரணமெனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அதைவிட முக்கியமாக, இலண்டனிலுள்ள முஸ்லிம் மக்களிடத்தே தனக்கான அங்கிகாரத்தைப் பெற்று, தனது வாக்குப் பலத்தை அதிகரிக்கும் நோக்கம் அவருக்குக் காணப்பட்டிருக்கலாம் என, அவரது விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதிக் கானின் கடந்த காலம் இவ்வாறிருக்க, இம்முறை இடம்பெற்ற தேர்தலில், அவருக்கெதிராகப் போட்டியிட்ட பிரதான வேட்பாளரான பழைமைவாதக் கட்சியின் ஸக் கோல்ட்ஸ்மித் சார்பாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள், அதிக கவனத்தை ஈர்த்திருந்தன. சாதிக் கானின் மத நம்பிக்கைகள் தொடர்பாகவும் அவருக்கெதிரான தனிப்பட்டரீதியிலான தாக்குதல்களாகவும் அமைந்த இப்பிரசாரங்கள், பலரையும் – குறிப்பாக நடுநிலையாளர்களை – முகஞ்சுழிக்க வைத்திருந்தன. சாதிக் கானின் கடந்த காலம் பற்றிய கேள்விகள், தவறானவையன்று. மாறாக, ஒட்டுமொத்தப் பிரசாரமுமே, அவரது கடந்த காலத்தைப் பற்றியதாகவும் அதே கடந்த காலத்துடன் தான் அவரது நடப்புக் காலமும் காணப்படுகின்றது என்ற தோற்றப்பாட்டைக் கொண்டுவருவதும், அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பேயாகும். பிரித்தானியாவாக இருக்கலாம், அமெரிக்காவாக இருக்கலாம், அண்மைக்கால தேர்தல் பிரசாரங்கள் வெளிப்படுத்துவன என்னவெனில், தங்களின் தேர்தல் வெற்றிகளுக்காக, முஸ்லிம்களையும் ஏனைய சிறுபான்மையினரும் கீழ்மைப்படுத்துவதற்கு, பழைமைவாதிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது தான்.

ஏனென்றால், சாதிக் கானின் கடந்த காலம் மீதான விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர், முற்போக்குவாதியாகவே இருந்து வந்திருக்கிறார். சமபாலுறவாளர்களுக்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்தி, அதற்கு ஆதரவாக வாக்களித்த அவர், அதற்காக முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளின் எதிர்ப்பைச் சம்பாதித்ததோடு, அவருக்கெதிராக ‘பட்வா’வும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனவே, சாதிக் கானின் நிலைமையென்பது, இலங்கையின் முன்னாள் புலிகளின் நிலைமை போலத் தான். புனர்வாழ்வுக்குப் பின்னரும் கூட அவர்களைச் சந்தேகத்துடன் பார்க்கும் புலனாய்வுப் பிரிவினர். மறுபுறத்தில், அவர்களைச் சமூகத்தில் முழுமையாக இணைத்துக் கொள்ளாத தமிழ்ச் சமூகம் என, இரண்டு தரப்புகளுக்கு மத்தியிலும் அவர்கள் சிக்கியிருப்பது போலத் தான், ஒரு புறத்தில் வலதுசாரிகளின் இனவாதப் பிரசாரங்கள், மறுபுறத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பழைமைவாதங்கள் என, அவரும் சிக்கித் தடுமாறுகிறார்.

ஆங்கிலத்தில், ‘வெற்றிக்கு ஏராளமான தந்தையர் இருப்பர், தோல்வியென்பது ஓர் அநாதை’ என்றொரு பழமொழி உண்டு. அதேபோலத் தான், சாதிக் கானுக்கெதிரான இனவாதப் பிரசாரங்களுக்கெதிராகக் குரலெழுப்பாத மேற்குலகத் தரப்பினர், தற்போது, ‘இலண்டனின் பல்வகைமையும் அதன் ஜனநாயகமும் சிறப்பான பதிலை வழங்கியுள்ளது’ என அவரது வெற்றியைக் கொண்டாடுகின்றனர். மறுபுறத்தில், சாதிக் கான் உட்பட, முற்போக்குவாத முஸ்லிம்கள் பலர், தங்களது சமூகத்தாலேயே தண்டிக்கப்படும்போது வாய்மூடி மௌனிகளாக இருந்த முஸ்லிம்கள் பலர், சாதிக் கான் ஒரு முஸ்லிம் என்பதால் கொண்டாடுகின்றனர்.

இந்த நேரத்தில், இன்னொரு விடயமும் முக்கியமானது. சாதிக் கானின் வெற்றியை பாகிஸ்தானிய முஸ்லிம்கள் கொண்டாடிய போது, அவர் ஒரு பிரித்தானியர் எனவும், அவருடைய வெற்றிக்கு, அவருடைய கடுமையான உழைப்பும் பிரித்தானியாவின் சம வாய்ப்புகளை வழங்கும் கட்டமைப்புமே காரணம் எனவும், பாகிஸ்தானும் இஸ்லாமும் அவரது வெற்றியில் பங்களிக்கவில்லை எனத் தெரிவித்து, பாகிஸ்தானின் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்த குர்றாம் ஸகி என்ற செயற்பாட்டாளர், அந்தக் கருத்தை பேஸ்புக்கில் பதிவுசெய்து 3 மணித்தியாலங்களில், பாகிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்டிருந்தார். சாதிக் கானைக் கொண்டாடும் முஸ்லிம்களுக்கு, குர்றாம் ஸகியினுடையதும் பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் கொல்லப்படும் ஏனைய எழுத்தாளர்களினதும் கொலைகளைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் இருக்கிறது. அதைச் செய்வதற்கு, அவர்கள் முன்வருவதில்லை. உண்மையில், சாதிக் கான், பாகிஸ்தானில் இருந்திருந்தால், சமபாலுறவாளர்கள் தொடர்பான அவரது கொள்கைக்காகவும் ஏனைய முற்போக்குக் கொள்கைகளுக்காகவும், அவருக்கும் குர்றாம் ஸகியின் நிலைமையே ஏற்பட்டிக்குமென நம்புவதில் தவறில்லை.

ஆகவே தான், சாதிக் கானின் இந்த வெற்றி முக்கியமானதாக அமைந்திருக்கிறது. அனைத்து முஸ்லிம்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அல்லது அல் கொய்தா அல்லது தலிபான்கள் போல நோக்கும் வலதுசாரிகளின் ஒரு பகுதியினரின் எண்ணங்களைத் தவறெனச் சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாது, முஸ்லிம் சமுதாயத்துக்குள்ளே குறிப்பிட்ட பகுதியினரிடையே காணப்படும் அடிப்படைவாதக் கொள்கைகளையும் எண்ணங்களையும் மாற்றுவதற்கான முன்னோடியாகவும் முன்னுதாரணமாகவும் செயற்பட வேண்டிய பொறுப்பும் கடமையும், சாதிக் கானுக்குக் காணப்படுகிறது. தன்னை நிரூபித்துக்குக் காட்டுவாரா சாதிக் கான்?