இலவசக் கல்வியின் தந்தை (Father of free education)

அதற்கு அவர்கள் தம் வாழ்வுக் காலத்தில் ஆற்றிய அர்ப்பணிப்புகளும், பணிகளும், சேவைகளுமே காரணங்களாக அமைந்து இருக்கின்றன.
அந்தடிப்படையில், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த இலங்கையில் பிறந்து 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையும் வாழ்ந்த கலாநிதி சீ.டப்ளியூ. டப்ளியூ.கன்னங்கர குறிப்பிடத்தக்கவராவார். அவர் ஆற்றிய பணிகளின் காரணமாக இந்நாட்டின் இலவசக்கல்வியின் தந்தையாக நோக்கப்படுகின்றார். அதேநேரம் உலகில் அதிக எழுத்தறிவு வீதம் கொண்டவர்கள் வாழும் நாடு என்ற பெருமையை இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்த பெருமையும் அவரையே சாரும்.
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதி வரையும் செல்வந்தர்களுக்கும், மேட்டுக்குடியினருக்கும் மாத்திரம் உரியதாக இருந்த கல்வி வாய்ப்பை இந்நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களும் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் அவராவார்.
பிறப்பும் கல்வியும்:
இந்நாட்டு வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்துள்ள கிறிஸ்தோபர் வில்லியம் விஜேகோன் கன்னங்கர, 1884 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி காலி மாவட்டத்திலுள்ள பலப்பிட்டிய, ரன்டம்பே என்ற இடத்தில் பிறந்தார்.
பலப்பிட்டிய நீதிமன்றத்தின் பிரதி பிஸ்கால் அதிகாரி ஜோன் டானியல் விஜேகோன் கன்னங்கர தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர், அன்று அக்கிராமத்தில் இயங்கிக் கொண்டிருந்த வெஸ்லியன் மிஷனரி பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவர் ஆரம்பக் கல்வியின் போதே கணித பாடத்தில் அதி திறமையை வெளிப்படுத்தியதன் விளைவாக அன்றைய தேசியப் பாடசாலையாக விளங்கிய காலி ரிட்ச்மண்ட் கல்லூரியில் கல்வி கற்பதற்கான புலமைப் பரிசில் அவருக்கு கிடைக்கப் பெற்றது.
இவர் கல்வியை நிறைவு செய்து வெளியேறியதும் இவரிடம் காணப்பட்ட திறமையின் பயனாக காலி ரிட்ச்மண்ட் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார். அத்தோடு மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியிலும், கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும் இவர் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலப்பகுதியிலேயே சட்டத்துறையில் கற்ற இவர், 1910 ஆம் ஆண்டில் சட்டத்தரணியானார். அதேயாண்டில் எடித் வீரசூரியவுடன் திருமண வாழ்விலும் இணைந்தார்.
செயல்திறன் மிக்க சட்டத்தரணியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர், சேர் டி.பி.ஜயத்திலக்க, டி.எஸ்.சேனநாயக்கா, எப்.ஆர்.சேனநாயக்கா, ஆதர் வி டயஸ் போன்றோருடன் இணைந்து அநகாரிக தர்மபாலவின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மதுஒழிப்பு இயக்கத்திலும் தீவிரமாகச் செயற்பட்டார்.
அரசியல் பிரவேசம்:
இவ்வாறான சூழலில் 1915இல் ஏற்பட்ட கலவரம் அவரை தேசிய அரசியலுக்குள் கொண்டு வந்தது. அதற்கேற்ப கோல்புரூக் கமரூன் ஆணைக்குழுவின் சிபாரிசுப்படி அமைக்கப்பட்ட சட்ட நிரூபண சபையின் காலி ஆசனத்திற்காக 1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினரானார்.அதனூடாக அவர் நேரடி அரசியலில் பிரவேசித்தார்.
1931 ஆம் ஆண்டில் இலங்கை தேசியக் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்த இவர், டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய 1931 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரச பேரவைக்கான தேர்தலில் அதேயாண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேயாண்டில் கண்டி மாவட்டத்தின் ஹந்தஸ்ஸ என்ற இடத்தில் கிராம பாடசாலைத் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். அச்சமயம் இந்நாட்டு சனத்தொகையில் 12 வீதத்தினரே எழுத்தறிவு மிக்கவர்களாக இருந்தனர். இவர்களில் 62 வீதத்தினர் ஆண்களாகவும், 30.2 வீதத்தினர் பெண்காகவும் காணப்பட்டனர். இக்கல்வி முறைமை இந்தியாவில் வர்தா கல்வி முறைமை அறிமுகப்படுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் அவருக்கு இந்தியாவில் விஷேட கௌரவமும் அளிக்கப்பட்டது.
அதேவேளை 1936 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரச பேரவைக்கான தேர்தலிலும் போட்டியிட்டு அவர் வெற்றியீட்டினார். அத்தோடு இப்பேரவையின் கல்விக்கான நிறைவேற்றுக்குழுவின் முதலாவது தலைவராகவும், இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இதற்கேற்ப இவர் தலைமையிலான கல்வி நிறைவேற்றுக் குழு இந்நாட்டில் புதிய கல்வி முறைமையை அறிமுகப்படுத்துவதற்கான புதிய ஒழுங்கு விதிகளை வகுத்தது.
இலவசக்கல்விக்கான அடித்தளம்:
இம்முறைமையின் ஊடாக நாட்டின் சகல பிள்ளைகளுக்கும் கல்வியில் சமவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதே இலக்காகக் கொள்ளப்பட்டது. ஏனெனில் அதுவரைக்கும் இந்நாட்டில் கல்வி வாய்ப்பு மேட்டுக் குடியினருக்கும், செல்வந்தர்களுக்கும் மாத்திரம் உரியதாக இருந்தது. அந்நிலையை மாற்றி ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி சகலரது பிள்ளைகளுக்கும் கல்வியைப் பெற்றுக் கொடுப்பதே இதன் இலக்காகக் கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் மத்திய வித்தியாலயங்களை ஆரம்பிக்கும் நடவடிக்கையை கன்னங்கரா ஆரம்பித்தார்.
அதற்கேற்ப, 1941 இல் மூன்று மத்திய வித்தியாலயங்கள் முதலில் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் முதலாவது வித்தியாலயம் மாத்தளை அகுரம்பொடவில் தொடங்கப்பட்டது. இவ்வித்தியாலயங்கள் 1945 ஆம் ஆண்டாகும் போது 35 ஆகவும், 1950 இல் 50 வித்தியாலயங்கள் வரையும் அதிகரித்தன. இதேவேளை திறமைமிகு மாணவர்களுக்கான வருடாந்த புலமைப்பரிசில் திட்டத்தையும் 1943 இல் அவர் அறிமுகப்படுத்தினார்.
இவ்வாறான நிலையில், இலங்கைப் பல்கலைகழகம் அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவை 1942 இல் நடத்தியதோடு கன்னங்கரவுக்கு கலாநிதிப் பட்டத்தையும் வழங்கியது. இதேவேளை இலங்கையின் கல்வி நிலைமை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 1942 இல் கன்னங்கர தலைமையில் விஷேட கமிட்டியொன்று நியமிக்கப்பட்டது. அக்கமிட்டியின் அறிக்கை 1943 இல் வெளியிடப்பட்டது.
அவ்வறிக்கையில், ‘முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும், ஆரம்பக் கல்வியின் போதனை மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும், ஆங்கிலம் மூன்றாம் மட்டம் முதல் சகல பாடசாலைகளிலும் கற்பிக்கப்பட வேண்டும், பிள்ளைகளின் அறிவியல் மற்றும் செயற்பாட்டு திறமைகளை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு பாடவிதானம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பன அச்சிபாரிசுகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
அவர் கல்வி அமைச்சர் என்ற வகையில் இந்த யோசனைகளை நடைமுறைப்படுத்தி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். குறிப்பாக அவர் இலவசக் கல்விச் சட்டத்தை அரச பேரவையில் நிறைவேற்றுவதற்காக கடுமையாக உழைத்தார். அதன்படி 1945 ஜுலை மாதம் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு, 1945 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் சகல மாணவர்களுக்கும் இலவசக்கல்வி என்ற திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இலங்கைக்கு இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய இவர், இந்நாட்டின் முதலாவது பல்கலைக்கழகத்தை ஆரம்பித்ததோடு, சுயமொழி கல்விக்கும் அடித்தளம் இட்டார். அத்தோடு நவீன உலகிற்கு தேவையான ஆங்கில மொழியைக் கற்கும்படி அவர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார். கன்னங்கர அறிமுகப்படுத்திய இலவசக் கல்வி திட்டத்தின் மூலம் நாட்டில் எல்லா மக்களும் நன்மை பெற்றனர்.
என்றாலும் 1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் தோல்விற்றார். அதனையடுத்து அவர் 1950 முதல் – 1952 வரையும் இந்தோனோசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் 1952 இல் மீண்டும் அரசியலுக்கு வந்த அவர், அகலவத்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனூடாக வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க கடிதம்
1956 ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார். அவர் சுகவீனமுற்று இருந்த இறுதிக் காலப்பகுதியில் தாம் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை சுட்டிக்காட்டி பாராளுமன்றத்திடமிருந்து ஏதாவது உதவியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அன்றைய சபாநாயகரான ஆர்.எஸ். பெல்பொலவுக்கு 1961 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பின்வருமாறு கடிதமொன்றை எழுதினார்.
“முதலீடுகள் மூலமோ, வீடுகள் மற்றும் காணிகள் மூலமோ அல்லது வேறு மூலங்கள் ஊடகவோ தனிப்பட்ட வருமானங்கள் இன்றி எனது நண்பர்களதும், நலனோம்பாளர்களதும் அன்பளிப்புக்களில்தான் சில வருடங்களாக வாழ்கின்றேன். எனது ஆரோக்கிய நிலைமையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான அத்தியாவசியமானவற்றுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை செலுத்தப்படாது குவிந்துள்ளது.
நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நிதியுதவியைப் பெறுவது என்பது ஒரு நூற்றாண்டின் மூன்றில் ஒரு பகுதியில் அரசாங்க அமைச்சராகப் பதவி வகித்த என் போன்ற ஒருவரின் கௌரவத்திற்கு அழகல்ல என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுவீர்கள் என நான் நம்புகின்றேன்.
சுமார் கால் நூற்றாண்டு காலம் சகலரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் சகலரதும் அங்கீகாரத்திற்கும், பாராட்டுதல்களுக்கும் உள்ளாகும் என நான் நம்புகின்றேன். அதனால் எனது தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் மூலம் உடனடி நிவாரணமொன்றை தமக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்திய பாராளுமன்றம் பத்தாயிரம் ரூபாவை நன்கொடையாகவும், மாதா மாதம் ஐநூறு ரூபாவைக் கொடுப்பனவாகவும் வழங்க அங்கீகாரம் வழங்கியது. அவர் இறுதிக் காலம் வரையும் இக்கொடுப்பனவில்தான் தங்கி இருந்தார். இலங்கைப் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்ட முதலாவது நபர் இவரேயாவார். அவர் 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி காலமானார்.
இந்நாட்டின் கல்வித் துறை மறுமலர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் அபரிமித சேவைகள் ஆற்றி சுதந்திர இலங்கையின் வரலாற்றில் தனியிடத்தைப் பிடித்திருக்கும் இவரது இறுதி காலம் இவ்வாறுதான் அமைந்திருந்த்து. அன்று அவர் கல்வியைச் சகலரும் இலவசமாகப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ததன் பயனாகவே இன்று 92 வீதத்தினர் இந்நாட்டில் எழுத்தறிவு மிக்கவர்களாக விளங்குகின்றனர். அத்தோடு உலகில் எழுத்தறிவு வீதம் கூடிய முன்னணி நாடாகவும் இலங்கையால் திகழ முடிந்துள்ளது.
-மர்லின் மரிக்கார்