ஈழத்தமிழர்கள் எனும் புலிக்குட்டிகள்

(Kiri Shanth)
அண்மையில் சகோதரி ஒருவரின் கலங்கடிக்கும் கண்ணீர் கொட்ட வைக்கும் வாய் மூடவைக்கும் அதிர்ச்சியளிக்கும் புல்லரிக்கும் வெறி கொள்ள வைக்கும் பேச்சைக் கேட்க வேண்டி நேர்ந்தது. அதற்கு காரணம் அள்ளுக்கொள்ளையாக ஈழத்தமிழர்கள் என்றாலே கண்ணீர் வடிக்கும் கும்பலும் அதை வைத்து காசு பார்க்கும் கும்பலும் , இன்னும் சில அப்பாவி நண்பர்களும் அந்தப் பேச்சை தாறு மாறாக பகிர்ந்துகொண்டிருந்தமை தான்.

என்ன சொல்வது, எனக்கு பேச்சு அவ்வளவு சரி வராது தான், சொல்வதற்கு பெரிய தகுதி ஒன்றுமில்லைத் தான், ஆனாலும் ஒரு மனிதனாக நான் பாவமில்லையா? எவ்வளவு போலியான செயற்கையான பேச்சு அது என்பது ஒருத்தருக்கு கூட உறைக்கவில்லையா? யாரும் அது மொக்கையாக இருக்கிறதென்று ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. இது எவ்வளவு ஆபத்தானது?

இன்று காலை தான் நண்பரொருவரின் சிறுகதைத் தொகுதியொன்று பிரெஞ்சில் வருவதாக படித்தேன், எந்த உலகத்திலிருக்கிறேன் என்று தெரியவில்லை. அந்த தொகுப்பை படித்து விட்டு எனது தங்கை, இதை நீ படிக்க வேண்டாம், வீணாக மனக்கொதிப்புத் தான் வரும். மகா கொடுமை என்று சொன்னாள். இருந்தும் மனதை இரும்பாக்கிக் கொண்டு வாசித்தேன். ஒரு பக்கம் கூட வாசிக்க முடியவில்லை. அதனை பிரஞ்சுக்கு கொண்டு போகிறார்கள், பிரஞ்சு சமூகம் இன்னும் முன்னேறாத ஒரு சமூகத்தின் கதையாகத் தான் எங்களை புரிந்துகொள்ளப் போகிறது.

இந்த சகோதரியின் பேச்சில் திராவிட இயக்கங்கள் அள்ளிவிட்டுக் கொண்டிருந்த புளுகு மூட்டைகள் தானிருக்கின்றன. அதனை பாராட்டி பகிர்வது அவரவர் இஷ்டம். ஆனால் குழந்தைகள் கர்ப்பிணிப்பெண்கள் முதியவர்கள் இதைப்பார்ப்பது பற்றி குறைந்தது ஒரு முற்குறிப்பாவது போட்டிருக்கலாம். இரக்கமில்லையா உங்களுக்கு ?

உலக அரங்கில் ஈழத்தமிழர்களின் பிழைப்பு சிரிப்பாய் சிரிக்கப் போகிறதென்பதற்கு பிரஞ்சு சிறுகதையும் அதிரவைக்கும் பேச்சும் சிறந்த முன்னுதாரணங்களாகத் திகழும்.

அந்த இரண்டு நண்பர்களும் என்மேல் கோபம் கொள்ள வேண்டாம். உங்களை இவ்வாறு புகழுவதால் அவர்கள் உங்களை கோமாளிகளாக்குகிறார்கள். உங்களை திருத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். இவை எல்லாம் போலிக் கிரீடங்கள் ! கடுமையாக நீங்கள் உழைத்து வெளிவாருங்கள். உண்மையாகப் பேசிப் பாருங்கள் இதே கும்பல் உங்களைக் கழுவி ஊற்றும், தீட்டித் தீர்க்கும். அப்பொழுது தான் நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஏனென்றால் தமிழ்ச் சமூகமென்பது பகுத்தறிவு ரீதியில் மிக மிக பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகம். அதன் குரலாக நீங்கள் ஒலிக்கத் தேவையில்லை. அதன் வெட்டி பிம்பங்களையும் போலி கெரவங்களையும் நீங்கள் காப்பாற்றத் தேவையில்லை.