ஈழ யுத்ததின் பின் பெண்கள் விவகாரம் உரிமைகள் சலுகைகள,வாழ்வாதாரம் வலுவிழந்து பற்றி ஆராய்வு!!


ஈழ யுத்தம் முடிந்த பின்னர் பெருமளவில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வலுவிழந்து சோர்ந்திருந்த பெண்களையெல்லாம் அடையாளப்படுத்தி அவர்களின் அனுபவங்களை நேரடியாகச் செவிசாய்க்கக்கூடிய சந்தர்ப்பம் இங்கே கிடைத்திருந்தது.
நிகழ்வுகளுக்குப் பின்னர் , ஆதரவற்று வாழும் பெண் தலைமைத்துவ மற்றும் வறுமைக்குட்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வியலில் பற்று ஏற்படும் படியாக பொருளாதார ரீதியானதும் வருமானத்தை உழைக்கக்கூடியதுமான வழிகளை வழங்கிவரும் ஆதரவு அமைப்பை அறிமுகப்படுத்தியதுடன் , அவர்களால் வழங்கப்பட்ட பொருளாதாரத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் வீடியோ ஆவணம் ஒன்றைப்பதிவு செய்யவிருப்பதாக கிளிநொச்சிக்கு அழைத்துச்சென்றிருந்தார் ஊடறு ரஞ்சியக்கா.
வெட்ட வெளியாக நீறாகிப்போன நெருப்பின் சாம்பல் நிற வீதிகளாய் பசுமைக்கான எந்தச்சுவடுகளுமின்றி நிலங்களும் , வாழ்வியல் ஏக்கங்கள் நிறைந்த பெண்களும் சிறுமிகளும் நின்ற கோலங்கள் ஒரு முறை எனக்கு வடமாகாண சபைக்கட்டடம் , யாழ்ப்பாண மாநகரசபையின் கௌரவ உறுப்பினர்களுக்கான அமைவிடங்களை கண்முன் நிறுத்தி பல கேள்விகளை எனக்குள் எழுப்பியது.
போரால் வீழ்ந்து , பற்றிப்பிடிக்கக் கொடியின்றி உழலும் மக்கள் பக்கத்தில் இருக்கக்கண்டும் கண்கொண்டு பார்க்காத சுகபோக அரசியல் தேவைதானா ???
எப்போதும் பெண்களுக்கான சுதந்திர வெளியையும் சிந்தனையாற்றலையும் பெருகச்செய்வது தான் தாய்நாட்டின் அபிவிருத்திக்கும் செழுமைக்கும் நாம் ஆற்றும் பெருந்தொண்டு என்பதை என் மனசு திடமாக ஊர்ஐிதம் செய்துகொள்ள ,
கண்துடைப்பிற்காக 25 % பெண்களை உள்ளூராட்சித்திணைக்களங்களுக்குள் உள்நுழைத்து அதன் பின்னரும் தங்கள் ஆதிக்கங்களையே தடம்பதித்து தத்தம் குடும்பங்களின் பொருளாதாரத்தூண்களாக மிளிரும் அரசியல் அரங்கில் பெண்கள் ஓரங்கட்டப்படுவதும் பெண்களின் இந்த நிலைமைகளுக்கு காரணம் என வருந்திக்கொண்டேன்.
என்னைப்பொறுத்தவரை பெண்கள் பற்றிய பிரச்சினைகளை பெண்கள் அணுகுவது தான் சிறந்த முறை.
யாழ்ப்பாண மாநகரசபையில் இருந்த காலப்பகுதியில் பால் நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்வாங்கல் என்ற செயற்றிட்டத்தை நிறுவனமயப்படுத்தவேண்டிய பாரிய பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்த பின்னரும் , தத்ரூபமாக அதனைத் தடுத்துக்கொண்டிருந்த நிர்வாகத்தினரின் கொடூர சம்பவங்கள் எனக்குள் கனதியாக இருந்து வலிக்கச்செய்த காலமும் அது.
இத்தகைய நிலவரம் ஒன்றில், சமூகத்தின் பல பாகங்களிலும் உள்ள பெண்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற இந்தப்பெண்கள் கூட்டத்தின் காலடி ஓசையை ஒருமுறையாவது இந்த மாநகர மண் கேட்கட்டுமே. இராமனின் காலடி பட்டு சாபவிமோசனம் பெற்ற அகலிகை கதை கண்முன் தோன்றி மறைய அதற்கான ஏற்பாடு ஒன்றைச்செய்துகொள் என மனம் தைரியப்படுத்திக்கொண்டது.
ஆதலால் , உள்ளூராட்சிகளில் வலுவான பெண்களை அமர்த்துவதற்காக களத்தில் செயற்படும் கல்பனா அக்காவிடம் எனது ஆதங்கத்தையும் அது பற்றிச்சிந்திக்கவும் செயற்படுத்தவும் வேண்டிய தேவை பற்றியும் தெரிவித்தேன்.
அவர் உன்னிப்பாக கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாண மாநகர சபைக்கு 25 வீதக் கணக்கில் பெண்களும் வந்திருந்தார்கள். நிறைவேற்றுக்குழுக்கள் பிரிக்கின்ற போது#பெண்கள் #சிறுவர் #குழுவுக்கென #ஆறு #பெண்களை#மாத்திரம் #தனியாக அமைத்திருக்கின்றார்கள். மற்றைய குழுக்களுக்கு ஆண்களே தலைவர்கள். அங்கத்துவமும் அவர்களே அதிகம்.

நான் இந்தப் பெண்கள் குழுக்கூட்டத்திற்குச்செல்வேன். அப்போதெல்லாம் அலுத்துக்கொள்வார்கள். ” நீங்கள் கூறுவது போலவே தான் எங்களது பயிற்சிகள் / கருத்தரங்குகளிலும் கூறுகின்றார்கள். ஆனால் ஒரு விடயம் பற்றி சபையில் பேசவென எழுந்து நின்றால் கூட ஆண்கள் பலர் ஒரே நேரத்தில் குரல் எழுப்பி அநாமதேய விவாதங்களில் நேரத்தைக் கடத்துகின்றனர். ஆக பெண்ணாக ஒரு நிமிடம் சபையில் கதைப்பது கூட எமக்குச் சவால் தான் “
மேயரிடம் இது பற்றிக்கேட்டதுடன்
பால்நிலை சமத்துவத்திற்கான வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக எனக்கிருந்த பொறுப்புக்கள் பற்றியும் உரையாடினேன். அவர் சிம்பிளாக எல்லாக்குழுவிலும் தான் தலைவராக இருப்பேன் என்றும் தான் ஆண் என்றும் கூறுகின்றார்.
எனவே நீங்கள் எங்களுடைய சபைக்கான பெண்கள் சிறுவர் விவகாரக்குழு தலைவியுடன் , உள்ளூராட்சியில் பெண்களின் முக்கியத்துவம் பற்றி பேசவேண்டும் எனத்தெரிவித்தேன்.
பெண்கள் விவகாரம் அவர்களுக்கான உரிமைகள் சலுகைகள் பற்றி அப்போதய பெண்கள் சிறுவர் விவகாரக்குழுத்தலைவி கௌரவ ராகினி அவர்களுடன் உரையாடிய
போது அவர் இத்தகைய சந்திப்பு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தந்திருப்பதாகக் கூறினார்.
மேயருடனும் பேசிய போது அவர் பெண்களை வேலைத்திட்டங்களில் உள்வாங்குகின்ற போது சமூகக்கட்டமைப்பு கேள்வி கேட்கின்றது. பகலில் ஒரு பெண் ஆணுக்கு நிகராக ஆண்களுடன் நின்றால் கூட ஆட்டக்காரி என்று கூறும் சமூகத்தின் முன் எப்படி செயற்படமுடியும். என்பதாக உரையாடினார்.ஆணையாளர் கவிதைப்புத்தகங்களைப்பகிர்ந்துகொண்டார்.
இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. அவர்கள் அப்படித்தான்.
ஆனாலும் ஈழப்போர் குறித்தும் இன்றைய நிலை குறித்தும் மக்கள் வாழ்வு குறித்தும் இந்தப்பெண் செயற்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் அக்கறைப்பட்டு ஏங்கிய இவர்கள் , தம் ஏக்கத்தின்
கனதியில் சிறியளவு கலக்கம் கூட இல்லாமல் , ஏகபோக வசதிகளை அனுபவிக்கும் அரசியல்வாதிகளும் , அரசியல்வாதிகளுக்கான கூடாரங்களை மாத்திரம் கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைக்கும் அரசையும்
ஒரு முறை பார்த்துவிடவேண்டும் என்பதே ஏனோ அன்றைய ஆசையாக எனக்கு இருந்தது.
பெண்கள் பற்றிய தீவிர சிந்தனையும் செயலாற்ற வேண்டும் என்ற ஆவலும் பெண்ணுரிமை பற்றிய புரிதலும் மிக்க கௌரவ ராகினி அவர்கள் தற்போது பெண்கள் சிறுவர்கள் விவகாரக்குழுவில் இல்லை என்பதும்
பால் நிலை சமத்துவத்தை நிறுவனமயப்படுத்துமாறு ஆசிய மன்றத்தின் உப தேசியத் திட்டத்தில் பயிற்றுவிக்கப்பட்ட நான் மாநகரசபை வளாகத்திலேயே இல்லை. என்பதும் மேலதிக கவலை .