ஈ.பி.ஆர்.எல்.எவ் -சுரேஸ் அணி சொல்வதென்ன?

(கருணாகரன்)

ஈ.பி.ஆர்.எல்.எவ்.வை முடக்கிவிட வேண்டும் அல்லது அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி, தமிழரசுக் கட்சியின் உயர் மட்டத்தினர் இணைந்து வேலை செய்துவருகின்றனர். முக்கியமாக பல்வேறுபட்ட விதங்களில் எமது அங்கத்தவர்களுடன் பேரங்கள் பேசப்படுவதாகவும் அது பணமாகவோ, எதிர்காலப் பதவிகளை இலக்குவைத்து உத்தரவாதங்கள் வழங்கப்படுவதாகவோ அறிய முடிகிறது.

இதனடிப்படையில்தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் சில பேரங்களுக்கு உட்பட்டே கட்சி மாறியுள்ளார்.

“தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் பெரும்பான்மையைக் காட்டி தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்திக்கொள்வதற்காகவும் அங்கத்துவக் கட்சிகளின் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளைத் தனது கட்சிக்குள் உள்ளீர்த்துக் கொள்ள ஆரம்பித்த தமிழரசுக் கட்சி, இன்று மக்கள் ஆணைக்கு விரோதமான தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல, அதனை எதிர்ப்பவர்களை அச்சுறுத்துவது என்ற அடிப்படையிலும், அழித்தொழிப்பதென்ற அடிப்படையிலும் பல காய் நகர்த்தல்களைச் செய்து வருகின்றது. இதன் ஒரு படிநிலையே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரை இலக்குவைத்து உள்வாங்கும் நடவடிக்கையாகும்.

“இணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு என்பது தமிழர்களின் அரசியல், நிர்வாக அலகாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் இறையாண்மை என்பதும் அதனடிப்படையில் அவர்களது சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்படவேண்டும். இதனடிப்படையில், ஒரு சமஷ்டி அரசியல் அமைப்புமுறை உருவாக்கப்பட வேண்டும். இவையனைத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒரு மாநில சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்ற முடிவு (கூட்டமைப்பினால்) எட்டப்பட்டது. ஒருமித்த நாட்டுக்குள் இவ்வாறான ஒரு தீர்வை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை எதிர்கொண்டது.

“ஏற்கெனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வகுத்துக்கொண்ட கொள்கையிலிருந்து தமிழரசுக் கட்சி விலகிப் போவதும் அதனை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பலத்த விமர்சனங்களுக்கு உட்படுத்துவதும் இதன் காரணமாக அவர்கள் பல கேள்விகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும் தமிழரசுக் கட்சிக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ்.மீது கோபம் வருவதற்குக் காரணமாக இருக்கலாம்.

கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் மூலம் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களைத் தனது கட்சியில் இணைத்துக்கொள்ளும் அநாகரிக வேலைகளை ஆரம்பத்தில் இருந்தே செய்துவந்திருக்கின்றது. இதனை நாங்கள் பலதடவை கண்டித்தும்கூட, தமிழரசுக் கட்சி அதனை நிறுத்திக்கொள்ளவில்லை. இத்தகைய அநாகரிகமான நடவடிக்கைகள் கூட்டமைப்புக்குள் இடைவெளிகளை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தன என்பதும் பகிரங்கமான விடயம். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும் ஏனைய கட்சிகளிலிருந்து மாகாணசபை உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவதற்கான நடவடிக்கைகளை பகிரங்கமாகவே, தமிழரசுக் கட்சி செய்ய ஆரம்பித்திருக்கின்றது.

“தமிழரசுக் கட்சியின் இத்தகைய போக்கானது விடுதலைக்காகப் போராடுகின்ற நிலை மாறி, பதவி சுகங்களைத் தேடுகின்ற, கொள்கையற்ற மிலேச்சத்தனமான அரசியல் கலாசாரம் ஒன்றை வடக்கு- கிழக்கில் வலிந்து திணிக்கின்ற நடவடிக்கையாகவே நாம் அவதானிக்கின்றோம். இது தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு தமது இன்னுயிரை ஈந்த எண்ணற்ற இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் தியாகத்தை மலினப்படுத்துவதாகவும் கொச்சைப்படுத்துவதாகவும் அமையும். மேலும், இந்நடவடிக்கையானது தமிழ் மக்களை தமிழ் தேசியத்திலிருந்தும் தேசிய உணர்விலிருந்தும் அந்நியப்படுத்தும் மிக மோசமான நடவடிக்கையாகும்.

“போராட்டம் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தவர்களும் எட்டி நின்றவர்களும் இன்றைய அரசியலில் தம்மைப் போராளிகளாகக் காட்டிக்கொள்வதையும், தலைவர்களின் பெயர்களைக் காட்டி தமது கதிரைகளைப் பலப்படுத்திக்கொள்வதையும் நோக்குகின்ற பொழுது எமது மக்கள் செய்த தியாகங்களைக் கொச்சைப்படுத்துவதற்காகவே இவர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது….”

மேலே நீங்கள் படித்தது, ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள (காட்டமான) அறிக்கையின் சில பகுதியாகும். ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சார்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தேர்வாகிய மாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன், தமிழரசுக் கட்சிக்குத் தாவியதை – ரவிகரனைத் தமிழரசுக் கட்சி பிடுங்கி எடுத்துள்ளதை – அடுத்து சிவசக்தி ஆனந்தன் இந்த அறிக்கையை விடுத்துள்ளார். ரவிகரனை ஈ.பி.ஆர்.எல்.எவ் பின் பட்டியலுக்குள் கொண்டு வந்தவர் சிவசக்தி ஆனந்தன் என்ற வகையில் ரவிகரனுடைய இந்த மாறுதல் சிவசக்தி ஆனந்தனைக் காயப்படுத்தியுள்ளது. இதில் நியாயமுமுண்டு.

ஏனெனில் ஏற்கனவே சிவசக்தி ஆனந்தனால் அரசியலுக்குள் -ஈ.பி.ஆர்.எல்.எவ்க்குள் கொண்டு வரப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இதேபோல தமிழரசுக் கட்சிக்குள் தாவினார். இதைவிட சுரேஸ் பிரேமச்சந்திரனால் கொண்டு வரப்பட்ட சிவஞானம் சிறிதரன், பொன்னுத்துரை ஐங்கரநேசன் போன்றவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்குப் பெப்பே காட்டி விட்டுப் போய் விட்டார்கள். இப்படியே தாம் பாடுபட்டுத் தேர்வு செய்து, மக்களிடம் அறிமுகமாக்கி, வெற்றிபெற வைக்கின்றவர்கள் தமிழரசுக்கட்சிக்குத் தாவுவது அல்லது இப்படியானவர்களைத் தமிழரசுக் கட்சி பிடுங்கியெடுப்பது என்பதை ஏற்றுக்கொள்வதென்பது யாருக்கும் கடுப்பையே ஏற்படுத்தும். இப்படித் தமிழரசுக் கட்சியிலிருந்து யாரையும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வோ புளோட்டோ, ரெலோவோ பிடுங்கி எடுத்திருந்தால் தமிழரசுக் கட்சி அதை அனுமதிக்குமா? எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருக்குமா? என்ற கேள்வியும் இந்த இடத்திலே எழுகிறது.

ஆகவே, சிவசக்தி ஆனந்தனின் இந்த அறிக்கையும் தற்போது கூட்டமைப்பினுள்ளே நடந்து கொண்டிருக்கும் விடயங்களும் சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றன.

1. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தமிழரசுக் கட்சி வழங்கும் சலுகைகளுக்காகக் கட்சி மாறியுள்ளார். அந்தச் சலுகைகளைப் பெறுவதற்கான பேரம் தமிழரசுக் கட்சிக்கும் ரவிகரனுக்குமிடையில் நடந்துள்ளது. இதை மறைப்பதற்காக ரவிகரன் பொருத்தமில்லாத முறையில் பிரபாகரனின் பெயரை உச்சரித்திருக்கிறார் என்பது. அதாவது, கொள்கையைக் கைவிட்டு விட்டுவிட்டு அதை மறைப்பதற்காக பொருத்தமற்ற வாதத்தை ரவிகரன் முன்வைத்திருக்கிறார் என்பது. (“தேசியத் தலைவர் காட்டிய வீட்டுச் சின்னத்தை விட்டு என்னால் வெளிவரமுடியாது என்று கூறிக் கொள்கைகளை முற்றுமுழுதாகக் கைவிட்டுவிட்டு, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுவரும் தமிழரசுக் கட்சியுடன் இன்று அவர் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் ரவிகரன். கொள்கையை விட்டு விலகிச் செல்பவர்களை தேசியத் தலைவர் எப்பொழுதும் போராளியாக ஏற்றுக்கொண்டதில்லை” – சிவசக்தி ஆனந்தன்)

2. தமிழரசுக் கட்சி ஒரு கூட்டமைப்பு என்ற அடிப்படையில் நடந்து கொள்ளவில்லை. கொள்கையைக் கைவிட்டு விட்டுத் தன்னுடைய பதவி மற்றும் நலன்கள் போன்ற எளிய விசயங்களைக் குறி வைத்தே இயங்குகிறது. இதற்காக அது ஏனைய அமைப்புகளைப் பலவீனப்படுத்தி, தன்னைப் பலமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது.

இதற்கான பேரம்பேசல்களைச் செய்து கொண்டிருக்கிறது. இது தனியாதிக்கத்தனமானதாகும். இந்த நிலை நீடித்தால் தமிழ் மக்களுடைய விடுதலைக்குத் தீங்கே ஏற்படும் என்பது. (“தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் பெரும்பான்மையைக் காட்டி தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்திக்கொள்வதற்காகவும் அங்கத்துவக் கட்சிகளின் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளைத் தனது கட்சிக்குள் உள்ளீர்த்துக் கொள்ள ஆரம்பித்த தமிழரசுக் கட்சி, இன்று மக்கள் ஆணைக்கு விரோதமான தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கிறது.

தமிழரசுக் கட்சியின் இத்தகைய போக்கானது விடுதலைக்காகப் போராடுகின்ற நிலை மாறி, பதவி சுகங்களைத் தேடுகின்ற, கொள்கையற்ற மிலேச்சத்தனமான அரசியல் கலாசாரம் ஒன்றை வடக்கு, -கிழக்கில் வலிந்து திணிக்கின்ற நடவடிக்கையாகவே நாம் அவதானிக்கின்றோம். இது தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு தமது இன்னுயிரை ஈந்த எண்ணற்ற இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் தியாகத்தை மலினப்படுத்துவதாகவும் கொச்சைப்படுத்துவதாகவும் அமையும். மேலும், இந்நடவடிக்கையானது தமிழ் மக்களை தமிழ் தேசியத்திலிருந்தும் தேசிய உணர்விலிருந்தும் அந்நியப்படுத்தும் மிக மோசமான நடவடிக்கையாகும்” – சிவசக்தி ஆனந்தன்)

3. தமிழ் மக்கள் வழங்கிய அரசியல் (சமஷ்டி, வடக்குக் கிழக்கு இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள்) ஆணைக்கும் மக்களுக்கு வழக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் (“கூட்டமைப்பு ஒற்றுமையாக – ஒரு ஒருங்கிணைந்த அணியாகச் செயற்படுகின்றது” என்ற நிலைப்பாட்டுக்கும்) எதிராக தமிழரசுக் கட்சி செயற்படுகிறது என்பது.

4. அப்படியாயின் தமிழரசுக் கட்சியின் இத்தகைய தவறுகளையும் எதேச்சாதிகாரப் போக்கினையும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ போன்றவை ஏன் கண்டிக்கவில்லை? இது தொடர்பாக அவற்றின் நிலைப்பாடு என்ன?

5. இதுவரையில் கட்சி மாறியவர்கள் அல்லது தமிழரசுக் கட்சியினால் பிடுங்கி எடுக்கப்பட்டவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் வைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஏனைய தரப்புகளில் தமிழரசுக் கட்சி கைவைக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? சிவசக்தி ஆனந்தன் குறிப்பிடுவதைப்போல, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வகுத்துக்கொண்ட கொள்கையிலிருந்து தமிழரசுக் கட்சி விலகிப் போவதும் அதனை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பலத்த விமர்சனங்களுக்கு உட்படுத்துவதும் இதன் காரணமாக அவர்கள் பல கேள்விகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும் தமிழரசுக் கட்சிக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ்.மீது கோபம் வருவதற்குக் காரணமாக இருக்கலாம்” என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியானால், ரெலோவும் புளொட்டும் உரிய தீர்மானங்களை எடுக்காமல், தவறுகளைச் சுட்டிக்காட்டாமல், தமிழரசுக் கட்சிக்குள் அடங்கியிருக்கின்றனவா?

6. ஒற்றுமையை வலியுறுத்திய – இன்னும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு என்ன? இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைமைப்பீடம் என்ன கருதுகிறது? தமிழ் மக்கள் பிரிந்து நிற்கக் கூடாது. ஒன்று பட்டு நின்று உலக அரங்கிற்கு ஒற்றுமை உணர்வையும் ஒரு மித்த எமது (தமிழ் மக்களின்) நிலைப்பாட்டையும் தெரியப்படுத்த வேண்டும் என்ற தமிழ்த்தேசியவாதச் சக்திகள் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இந்த உள் மோதல்கள், வெடிப்புகள், விலகல்களைக் குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்? இது தமிழர்களின் கூட்டுக் குரலுக்கும் கூட்டு நிலைப்பாட்டுக்கும் இழைக்கப்பட்ட அநீதியில்லையா?

7. உண்மையில் கூட்டமைப்பு எந்த அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது? அதனுடைய உள் கட்டமைப்பு எத்தகையது? அது வினைத்திறனுள்ள ஒரு பேரமைப்பா? திடசித்தமான கொள்கையும் அந்தக் கொள்கையின் பாற்பட்ட விசுவாசமும் அதற்குண்டா? தன்னுடைய இலக்குத் தொடர்பாக அதற்குத் தெளிவுண்டா? அந்த இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகள் உள்ளதா? அதை அது வெளிப்படுத்துமா? (ஒரு அரசியல் இயக்கம் எல்லா வழிமுறைகளையும் பகிரங்கப்படுத்துவதில்லை. சில தேவைகள், அவசியங்களைக் கருதி அவற்றைத் தவிர்ப்பதுண்டு. ஆனால், அதற்காக அனைத்துமே மூடு மந்திரமாக இருக்க முடியாதல்லவா!)

8. தமிழரசுக் கட்சி கூட்டமைப்பில் உள்ள ஏனைய தரப்புகளைப் பலவீனப்படுத்துவது சரியானதா? அது ஒரு கூட்டமைப்புக்கும் அதனுடைய கட்டமைப்புக்கும் நியாயமானதா? இத்தகைய நடைமுறைகள் கூட்டமைப்பைச் சிதைக்காதா? இதைத் தமிழரசுக் கட்சி எந்த அடிப்படையில் செய்கிறது? ஒரு மூத்த கட்சி என்ற வகையிலும் கூட்டமைப்பிலுள்ள தலைவர்களில் அரசியல் அனுபவத்தினாலும் வயதினாலும் மூத்தவர்கள் என்ற வகையிலும் வழிகாட்டிப் பாத்திரத்தை வகிக்க வேண்டிய கட்சி, சகபங்காளிகளிடத்திலேயே வழிப்பறியைச் செய்யலாமா?

9. தமிழரசுக் கட்சியின் மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கு அதனுடைய பதில் என்ன? இவ்வாறு விதிமுறைகளை மீறி, நடைமுறைகளை மீறிச் செயற்படும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் நியாயமும் என்ன? கூட்டமைப்பிலிருந்து முன்னரும் கஜேந்திரகுமார் அணி, தமிழரசுக் கட்சியின் ஜனநாயக விரோதப்போக்கைக் கண்டித்து வெளியேறியிருந்தது. இப்பொழுது ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறுகிறது. அடுத்தது?

10. கூட்டமைப்பின் பலவீனங்களும் விமர்சனங்களும் பகிரங்க வெளியில் தெரியப்பட்டுள்ள நிலையிலே, அங்கிருந்து சுரேஸ் அணி வெளியேறும்போது, ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் இன்னோரணியான சுகு ஸ்ரீதரன் – வரதர் (நாபா) அணி உட்செல்வது சரியானதா? அந்த அணியினால் தாக்குப் பிடிக்க முடியுமா?

(இந்தக் கட்டுரையின் இரண்டாவது பகுதி அடுத்த வாரம் வெளியாகும்)