உண்மைகளின் வெளிப்பாட்டு அனுபவம்

காங்கேசன்துறையிலிருந்து புகையிரதம் காலை 5.30 மணிக்குப் புறப்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனும் பயணியாக இருந்தார். புகையிரதம் மல்லாகம், இணுவில், யாழ்ப்பாணம்,சாவகச்சேரி என நிலையங்கள் ஒவ்வொன்றாக கடந்து பயணித்துக் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனுக்கு பசிக்களைப்பு. சிற்றுண்டி சாப்பிட்டு தேநீர் குடிக்கும் வேண்டும் போல ஓர் தவிப்பு .ஆனால் சிற்றுண்டிகளை விற்க யாருமே ஏறியதாகத் தெரியவில்லை.
புகையிரதம் தரித்த நின்ற நிலையங்களில் 2 நிமிடமளவில் தான் நின்றது.
அந்த இடைவெளியில் இறங்கி ஏறித் தாகத்தை பசியைத் தீர்க்க அவருக்கு இடைவெளி
நேரம் காணாது.
புகையிரதம் வவுனியாவை வந்தடைந்து மதவாச்சியில் நின்றது.
உடனேயே வடை, தேநீர், கோப்பி, மாங்காய், அன்னாசி, றொட்டி ,சம்பல் என
சிற்றுண்டிகளை விற்கும் சிறுவியாபாரிகள் பல பெட்டிகள் ஊடாகவும்
ஏறினார்கள்.
மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனுக்கு மகா
சந்தோசம். தனக்குப் பிரியப்பட்ட சிற்றுண்டிகளை எல்லாம் வெகு ஆவலாக வாங்கி
பசியைப் போக்கிக் கொண்டார்.
பக்கத்திலிருந்து அரச பணியாளரான பயணியிடம் பேச்சுக் கொடுத்தார்.
” எங்கட தமிழ் பிரதேசங்களுக்குள்ளாலை ரெயின் வரும் போது சிற்றுண்டிகள்
விற்க யாருமே ஏறவில்லை.
ஆனால் சிங்களப் பரதேசங்களின் ஊடாக வரும் போது நிறையப் பேர் ஏறி தரமான
உணவுகளை மலிவாக விற்கின்றனர்.
எங்கட ஆக்கள் படுசோம்பேறிகள்.”
அதற்கு அந்த அரச உத்தியோகத்தர் ” எங்கட ஆக்களுடைய சோம்பேறித் தனத்தை
ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் அது ரெயின் வியாபாரத்திற்கு முழுமையான காரணமல்ல.
யாழ்தேவி, இன்ரசிற்றி ஆகிய இரண்டு ரெயின்களில் மட்டும் தான் எங்கட ஆள்கள்
ஏறி சிற்றுண்டிகளை விற்கலாம்.
மெயில் ரெயின் நேர அட்டவணை பொருத்தமற்றது. அதே வேளை ஏசி இன்ரசிற்றியில்
யாருமே ஏறி பொருள்கள் விற்க முடியாது.
அரசாங்கம் காங்கேசன்துறையிலிருந்து வவுனியா வரை குறுந்தூர ரெயின் சேவைகளை
ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது நடத்தினால் தான் எம்மவரும் நாலு பொருள்களை
விற்று உழைக்கலாம்.
போர் முடிந்து 9 வருடங்களாகி விட்டது. தமிழர்களை பொருள்களை வாங்கிப்
பாவிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தில் தானே வைத்திருக்கின்றனர்.
ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை , ஒட்டுசுட்டான் ஓட்டுத்
தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை என்பவை மீளத் திறப்பதற்கு
உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
உற்பத்தி திறன்மிக்க மக்கள் கூட்டம் கட்டி எழுப்பப்படவில்லை.
எமது மக்களில் கணிசமானோருக்கு வெளிநாட்டுக் காசு வந்து அதை என்ன செய்வது
என்று தெரியாமல் பகட்டுக்கு செலவிழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதில் ஆகக் கொடுமை என்னவென்றால் செத்த வீட்டுக்குச் செலவழித்துக்
காட்டும் பகட்டு தான்.
லட்வியா, ஹங்கேரி, லித்துவேனியா போன்ற நாடுகள் செங்கன் விசா வலயத்தில்
வந்து விட்டன.
அவை தமது நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்த வெளிநாட்டு மாணவர்களுக்குப்
தமது நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதியைக் கொடுக்கின்றன.
அதனைப் பயன்படுத்தி எமது ஏஜென்சிகள் புலம்பெயர்வை தற்போதும் நடக்க வழி
செய்கின்றனர்.
ஐரோப்பியப் புலம் பெயர்வுக் கனவிலிருந்து எமது மேல் நடுத்தர, நடுத்தர
வர்க்கக் குடும்பங்களில் பல விடுபடவில்லை.
இந்தப் புலம் பெயர்வுக் கனவு பல விடயங்களில் நிறையவே தாக்கத்தைச் செலுத்துகிறது.
பல்கலைக்கழக அனுமதிக்கு 3 தடவைகள் விடாமல் பரீட்சை எழுதிச் சென்ற ஓர்
சமூகம் இன்று முதல் தரம் பரீட்சை எழுதுவதிலேயே ஆர்வம் குறைந்த நிலைக்கு
வந்து விட்டது.
உயர் கல்வியைத் தொடர்வதில் முழுமையான விருப்பம் உள்ள இளைஞர் தொகை
குறைந்து செல்கிறது.
உள்ளுரிலும் கூலி வேலைக்கு ஆள் பிடிப்பதிலும் பெரும் பஞ்சம்.
வேலைக்கு ஆள்களை பிடிப்பதை நம்பி தோட்டம் மட்டுமல்ல பல வேலைகளும் செய்ய முடியாது.
வேலை இல்லை இல்லை கஸ்டம் என்று கூறுவார்கள் ஆனால் வேலைக்கு ஆள்களைக்
கேட்டால் பிடிக்க முடியாத நிலை.
வட மாகாணத்தில் பெருந்தெருக்கள் யாவும் காப்பெற் வீதிகளாகப் போடப்பட்டன.
வீதி நிர்மாணப் பணிகளை தென்பகுதி பெரும் கம்பனிகளே எடுத்திருந்தன.
அதனால் அவர்கள் சிங்களத் தொழிலாளரையே வேலைக்குக் கொண்டு வந்து நிர்மாணப்
பணிகளை முடித்திருந்தனர்.
எமது பிரதேச ஆள்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கவில்லை எனக் கூப்பாடு போட்டனர்.
ஆனால் எம்மவரை நம்பி பெரிய நிர்மாணப் பணிகளை முடிக்க இயலாது.
இன்று தேங்காய் மட்டைகளை ( பொச்சுமட்டை) வாங்கி அதனைக் கழுவி துண்டுகளாக
வெட்டிப் பவுடராக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலைச் சிங்கள
முதலாளிகள் செய்கின்றனர்.
எமது தமிழ் பிரதேசங்களில் வந்து தொழிற்சாலை அமைத்து உற்பத்திகளைச் செய்கின்றனர்.
இந்த நவீன தொழில் தேடல்கள் எமது தமிழ் முயற்சியாளரிடமில்லை.
பணத்தை முதலிட்டால் பெரும் தொகையான இலாபம் கிடைக்க வேண்டும். எடுத்த
எடுப்பிலேயே பெரும் இலாபம் உழைக்க வேண்டுமென்ற அவா எம்மவரது தொழில்
முயற்சியாண்மைக்குத் தடையாக உள்ளது.
ரெயினில் வடை விற்கும் ஓர் சிங்கள சிறுவியாபாரிக்கு 500 ரூபா நாளாந்த
இலாபம் வாழ்க்கையை நடத்தப் போதுமானது.
வயலில் நெல் விளைவித்து வீட்டில் அரிசி கையிருப்பு வைத்திருப்பார்கள்.
ஈரப்பலாக்காய், கங்குல் கீரை, குளத்து மீன், மரவள்ளிக் கிழங்கு,
ஊர்க்கோழி முட்டை என அவர்களது உணவு தமது முயற்சியால் செலவின்றிப் போய்
விடும்.
ரெயினில் வரும் 500 ரூபா அவர்களுக்கு நாளாந்த கைச்செலவுகளுக்குப் போதுமானது.
அவர்களது வாழ்க்கையில் தேவைகள் குறைவானது. முயற்சிகள் உயர்வானது. அதனால்
அவர்களால் நிறைவாக வாழ முடிகிறது.
சுற்றுலா புறப்பட்டால் தமது ஊரிலுள்ள பஸ் ஒன்றை பிடிப்பார்கள். அதற்குரிய
டீசல் செலவுகளைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளுவார்கள்.
காஸ் அடுப்பு, காஸ் சிலிண்டர், அரிசி, கருவாடு , பருப்பு, தேங்காய் எனத்
தமது உற்பத்திப் பொருள்களை தம்முடனேயே எடுத்து வந்து சமைத்து சாப்பிட்டு
மிகவும் சந்தோசமாகப் பொழுதைக் கழிப்பார்கள்.
வாழ்க்கையை மிகவும் இலகுவாகவும் மகிழ்வாகவும் வாழத் தெரிந்தவர்கள்.
ஆனால் எம்மினிய தமிழ் மக்களோ சாத்திரங்கள், சம்பிரதாயங்கள்,
பழந்தோப்புகளால் சிக்கலாக்கி தாமும் நன்றாக வாழாமல் அடுத்தவனையும் வாழ
விடாமல் தடுத்து விடுவதில் இன்பம் காண்பார்கள்.
எமது வாழ்க்கையின் நடைமுறைகள் தொடர்பாக மீள் உருவாக்கத்தைச் செய்யாது
விட்டால் இதே போக்கில் போனால் உலகமயமாக்கலில் தோற்றுப்போன ஒரு சமூகமாகத்
தான் வரலாறு தனது ஏடுகளில் எம்மை எழுதிக் கொள்ளும்.

நன்றி. எதிரொலி 07.11.2018